PUBLISHED ON : அக் 29, 2023

இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில், போர்கோபியோ என்ற பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலிருந்து, ஐந்து நிமிடத்தில் ஆஞ்ஜெலோ அரிகோனி என்ற பேக்கரியை அடையலாம்.
இந்த பேக்கரி, 1930ல் துவங்கப்பட்டது. சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் மற்றும் போப்புகளுக்கு பிரட் வினியோகம் செய்து வந்தது.
பியஸ்11 போப்பிலிருந்து, இன்றைய பிரான்சிஸ் வரை அனைவருக்கும், காலை வேளையில் பிரட்டை வீட்டிலேயே கொண்டு போய் கொடுத்து வந்துள்ளனர்.
கடந்த, 1978ல், ஜான்பால் 2 போப்பாக உயர்ந்தபோது, 'என் ஊழியர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்களோ, அதைத்தான் நானும் சாப்பிடுவேன்...' எனக் கூறி விட்டார்.
அவர் பதவியில் இருந்த, 27 ஆண்டுகளும், காலையில், இந்த கடை பிரட் தான் சாப்பிட்டார்.
ஒருசமயம், பேக்கரி இருந்த தெருவில் ஏராளமான கலைஞர்கள் குடியிருந்தனர். அவர்கள் அனைவரும் காலி செய்து போக, இன்று, அந்த வீடுகள் சுற்றுலா பயணிகளுக்கு தரப்படுகின்றன. அவர்களை அழைத்து வரும் ஏஜன்சிகள், இந்த பேக்கரியை கண்டுகொள்ளவில்லை. பலன், வியாபாரம் படுத்து, சமீபத்தில் பேக்கரி மூடப்பட்டு விட்டது.
போப் வீட்டில், தற்போது எங்கு ரொட்டி வாங்குவது என திண்டாடுகின்றனர்.
— ஜோல்னாபையன்
