PUBLISHED ON : டிச 10, 2023

நாரதர், ஈசனிடம் கொடுத்த ஞானப் பழத்தைப் பெற விநாயகரும், முருகரும் போட்டி போட்டனர். அப்பழத்தை சுலபமாக விநாயகர் பெற்றதும், இதனால் கோபமடைந்த முருகன், ஆண்டி கோலம் பூண்டு, பழனிக்கு சென்றதும், நாம் அறிந்த புராண கதை தான்.
உலகம் என்பதே அம்மையப்பர் தான் என்ற ஞானம், இந்த சம்பவம் மூலம், உலகுக்கு ஈசனால் அருளப்பட்டது.
அண்ணன், தம்பி சண்டை எத்தனை நாள் நீடித்து விடும். வள்ளியைத் திருமணம் செய்ய, அண்ணனின் உதவியைத் தான் நாடினார், முருகன். இருவரும் சேர்ந்து விட்டனர். இதை புரிய வைக்கும் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சிவன் கோவில்களுக்கு சென்றால், கொடி மரத்தை தாண்டியதும், விநாயகர் சன்னிதி ஒரு புறமும், சுப்பிரமணியர் சன்னிதி மறுபுறமும் இருப்பதைத் தான் பார்த்திருப்பீர்கள். இருவரையும் இணைந்தாற் போல், எங்காவது பார்த்திருக்கிறீர்களா என்றால், ரொம்பவே யோசிப்பீர்கள்.
கும்பகோணம் - நன்னிலம் சாலையில் அச்சுதமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., சென்றால், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில் வரும்.
எல்லா கோவில்களிலும் விநாயகரை வழிபட்டே உள்ளே நுழைவோம்.
இங்கே மரணக்கடவுளான எமதர்மன் சன்னிதிக்கு சென்று, அவரையும், அவரது கணக்குப்பிள்ளை சித்திரபுத்திரரையும் வழிபட்ட பிறகே உள்ளே நுழைவர், பக்தர்கள். அவ்வாறு நுழையும் போது, வலப்புறத்தில் அண்ணன் தம்பியான விநாயகரும், முருகனும் ஒருசேர காட்சியளிப்பதை காணலாம்.
விநாயகர், இந்த லீலையை மட்டும் தான் இங்கே புரிந்திருக்கிறாரா என்ன!
தன் தாய் மாமனான, விஷ்ணுவுக்கு பிடித்தமான வெண்ணெயை, தனக்குரிய நைவேத்யமாக ஏற்றுக் கொள்கிறார். வெண்ணெய் பிள்ளையார் என்று, அவருக்கு பெயர். அளவில், சிறியவர் என்றாலும், பெரிய பெரிய வேண்டுதல் எல்லாம் வைத்து, நாமே விநாயகருக்கு வெண்ணெய் பூசி விடலாம்.
மரண பயத்திலிருந்து பக்தர்களை விடுவிக்கும் வாஞ்சிநாதரும், மங்களாம்பிகையும் இங்கு அருள்பாலிக்கின்றனர். எமனையே இறைவன், தன் கட்டுக்குள் வைத்திருக்கும் தலம் என்பதால், ஆயுள்விருத்தி வேண்டி இங்கு வழிபடுகின்றனர்.
தவறு செய்தவர்களுக்கு பைரவர் தண்டனை அளிப்பார். இங்கு, தன் தண்டத்தை கீழே வைத்து விட்டு, யோக நிலையில் காட்சியளிக்கிறார். இதனால், இனியும் தவறு செய்ய மாட்டோம் என, உறுதியளிப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவராக, இத்தல பைரவர் உள்ளார். இத்தலத்தில் மரணிப்பவர்களுக்கு, மறு பிறப்பு கிடையாது.
இங்குள்ள குப்த கங்கை எனும் தெப்பக்குளம் பிரபலமானது. கங்கையின் ஆயிரம் கலைகளில், 999 கலைகள் இங்கு தான் உள்ளது என்கின்றனர். எனவே, இது, காசியை விட, உயரிய தலம் என்பர்.
எல்லா கோவில்களிலும், பிரம்மோற்சவத்தின் கடைசி நாள் தான் தீர்த்தவாரி நடக்கும். இங்கோ, இரண்டாம் நாளே நடந்து விடும். காரணம், இந்த தீர்த்தத்தில் நீராட, சிவனே ஆர்வமாக இருக்கிறாராம். அந்தளவுக்கு உயரிய தீர்த்தம் இது. இங்கே, எப்போதும் நீர் நிரப்பி வைக்க வேண்டும் என்பது, பக்தர்களின் ஆதங்கம்.
பல விசேஷங்களைக் கொண்ட இந்த அண்ணன் - தம்பி கோவிலைத் தரிசித்து மகிழ்வோமே!
- தி. செல்லப்பா
