தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பரின் நல்ல செயல்!

வசதி படைத்த நண்பர் ஒருவருக்கு, திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், குழந்தை பாக்கியம் இல்லை. பல்வேறு மருத்துவர்களை அணுகி, பல லட்சங்களை செலவழித்தும், பலனேதும் இல்லை.

மனைவியுடன் கலந்தாலோசித்து, அனாதை இல்லத்திலிருந்து, பெண் குழந்தையை தத்தெடுத்தார்.

குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, வெகு விமரிசையாக நடத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், நண்பர் தந்த தாம்பூலப் பைக்குள், வழக்கமான பொருட்களோடு, ஒரு சிறு கையேடு இருந்தது. அதில், ஏராளமான ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

அனைவரும், நண்பர் தத்தெடுத்த அனாதை இல்லத்தின் குழந்தைகள் என்பதையும், விருப்பமுள்ள குழந்தையில்லாத தம்பதியர், அங்கே தத்தெடுக்க வசதியாக, முகவரி மற்றும் தொடர்பு எண்ணையும், அதில் குறிப்பிட்டிருந்தார்.

கையேடு தேவைப்படாதவர்கள், அதை வீணடிக்க வேண்டாம். அவரவர் உறவினர் மற்றும் நண்பர் குடும்பங்களில், குழந்தை இல்லாதோரிடம் தந்து, அவர்கள் தத்தெடுக்க உதவுமாறு வேண்டினார்.

இச்செயல், அனைவரையும் நெகிழ வைத்தது. நண்பரின் நல்ல செயலை, அனைவரும் பாராட்டினோம்.

- செ.விஜயன், சென்னை.

மார்கழியில் கோலமிடுவோம்!

மார்கழி மாதம், அதிகாலையில், 4:00 மணி முதல் 5:00 மணிக்குள், தேவர்கள் வலம் வரும் நேரமாதலால், அவர்களை வரவேற்கும் விதமாக, கோலமிட வேண்டும்.

மாட்டுச் சாணத்தை நீரில் கரைத்து, வாசலில் தெளித்து, அதன் மீது அரிசி மாவில், மேலிருந்து கீழ் நோக்கி புள்ளிகள் வைத்து, கீழிருந்து மேல் நோக்கி கோலமிட வேண்டும்.

புள்ளியிட்டு கோலமிடுவதால், புத்தி சிதறாமல் இருக்க, இது ஒரு பயிற்சியாக அமையும். தலைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இந்த மாதத்தில், ஓசோன் படலம் பூமிக்கு அருகாமையில் வருவதால், ஆக்சிஜன் சக்தியும், பிராண சக்தியும் அதிகமாக கிடைக்கும். புத்துணர்ச்சி தரும். மன வலிமை கிடைக்கும்.

மேலும், மழையும், குளிரும் இருப்பதால், பறவைகளும், எறும்புகளும் இரை கிடைக்காமல் திண்டாடும். அரிசி மாவில் கோலமிடுவதால், அவைகளுக்கு உணவாகும். அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

கோலமிடுவதால், துர் தேவதைகளை துரத்தி, லட்சுமி கடாட்சத்தையும், செல்வ நிலையையும் உயர்த்தும்.

மும்மூர்த்திகளின் ஆசிகளும், கோலத்தின் வெண்மை நிறம், பிரம்மாவையும், அதைச் சுற்றிலும் இடும் காவி நிறம், சிவபெருமானையும், சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும்போது, மகாலட்சுமி மனம் மகிழ்வாள். வீடும் மங்களகரமாய் காட்சியளிக்கும்.

மார்கழியை வரவேற்போம். கோலமிட்டு, மங்களம் பெறுவோம்!

- எஸ். வள்ளிசித்ரா, கிருஷ்ணகிரி.

சொந்த செலவில் சூனியம்!

வெளியூரில் தங்கி, கல்லுாரியில் படித்து வருகிறான், நண்பன். விடுதியில் தங்காமல், தனியாக உடன்படிக்கும் நண்பர்களுடன், வாடகைக்கு வீடு எடுத்து, அவர்களே சமைத்து சாப்பிடுகின்றனர்.

விடுமுறை தினத்தில் அவனை பார்க்க போனேன். நண்பர்களுடன் அவன் சமையல் செய்து கொண்டிருந்தான். 'கேரி பேக்'கில் ஐந்து முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கட்டி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரில் போட்டனர்.

பத்து நிமிடத்திற்கு பின், வெந்த முட்டையை வெளியே எடுத்து, கத்தியால், ரொட்டி போல பல துண்டுகளாக்கி, ஏற்கனவே செய்து வைத்திருந்த குழம்பில் போட்டு, சோற்றில் ஊற்றி சாப்பிட்டனர். என்னையும் சாப்பிட அழைத்தனர். அதிர்ந்து, மறுத்து விட்டேன்.

பிளாஸ்டிக் கவர்களின் ஆபத்து பற்றி, அவர்களுக்கும் நன்கு தெரியும். பிளாஸ்டிக் கவரில் டீ வாங்கி குடிப்பதே தவறு. அதிலும் இவர்கள், பிளாஸ்டிக் கவரை கொதிக்கும் நீரில் போட்டு சமைக்க பயன்படுத்துவதை என்னவென்று சொல்வது.

இதைத்தான், 'சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது...' என்று, பெரியவர்கள் கூறினரோ?

- பி.எஸ். குரு, ராஜபாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us