/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்! (6)
/
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்! (6)
PUBLISHED ON : டிச 10, 2023

பாகவதர் நடித்த, அம்பிகாபதி படம், 1937ல் வெளியானது. அதே கதையில், பிற்காலத்தில் சிவாஜி நடித்த, அம்பிகாபதி படம், 1957ல் வெளியானது.
இந்த அம்பிகாபதி படத்தை எடுத்தவர்கள், முன் பணம் தந்து, 'பாகவதர் மீண்டும் இப்படத்தில் நடிக்க வேண்டும்...' என்று கேட்டனர்.
படப்பிடிப்பு அன்று, பாகவதருக்கு ஒப்பனை போடப்பட்டது. கம்பர் வேஷத்திற்கான ஒப்பனை அது.
'நான் அம்பிகாபதியாக அல்லவா நடிக்கிறேன். ஏனப்பா, எனக்கு கம்பர் வேஷம் போடுகிறாய்...' என்று, 'மேக் - அப்' மேனிடம் கேட்டார்.
'முதலாளி சொல்படி தான் நடக்கிறேன்...' என்றார், அவர்.
வருத்தம் அடைந்த பாகவதர், உடனே எழுந்து சென்று விட்டார்.
விஷயம் கேள்விப்பட்ட பட முதலாளி, இயக்குனர் மற்றும் பலரும் ஓடி வந்து, 'தெளிவாக உங்களிடம் சொல்லாதது, எங்கள் தவறு தான். மன்னித்து விடுங்கள்.
'தம்பி கணேசன் தான் அம்பிகாபதி. நீங்கள், கம்பராக நடிக்க வேண்டும். கணேசனுக்கு தருவதை விட, தங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அதிகம் தருகிறோம்; மறுக்காமல் நடித்து கொடுங்கள்...' என்று வேண்டினர்.
'நீங்கள், இதை ஏன் முன்பே சொல்லவில்லை? முன்பு நான் நடித்த படத்தில், அம்பிகாபதியாக என்னை பார்த்த ரசிகர்கள், கம்பராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னால் நடிக்க முடியாது. மன்னித்து விடுங்கள்...' என்று சொல்லி, நடிக்க மறுத்து விட்டார்.
பணத்திற்கு மதிப்பு கொடுப்பவர், பாகவதர். ஆனால், பணத்திற்காக, தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் என்று புரிந்து, மேலும், வற்புறுத்தாமல் விட்டு விட்டனர், படக்குழுவினர்.
'நான் தானே அம்பிகாபதியாக நடிக்கப் போகிறேன் என்று நினைத்து, அவர்கள் கொடுத்த முன் பணத்தை செலவு செய்து விட்டேன்...' என்று, தன் நண்பர் ஹரிராம் சேட்டிடம் சொல்லி வருத்தப்பட்டார், பாகவதர்.
'ஐயா, இதற்காக இவ்வளவு விசாரப்படுவானேன்? நாளை காலை, பணம் உங்கள் கையில் இருக்கும். கவலை வேண்டாம். நாளையே அவர்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்...' என்றார்.
மறுநாள் காலை, பாகவதரிடம் பணம் வந்து சேர்ந்தது.
கொடுத்த முன் தொகையை திரும்பி வாங்க மறுத்து, 'நீங்கள் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை; பணத்தை திருப்பி தரவேண்டாம். நான் வாங்க மாட்டேன்...' என்றார், தயாரிப்பாளர்.
'நடிப்பதற்கென்று நீங்கள் கொடுத்த, 'அட்வான்ஸ்' பணம் அது. நான் நடிக்கவில்லை என்று ஆன பிறகு, அதை வைத்துக் கொள்வது முறையல்ல. நீங்கள் திரும்ப வாங்கிக் கொள்வது தான் சரி...' என்று சொல்லி, பணத்தை திருப்பி தந்து விட்டார், பாகவதர்.
விஷயம் அத்துடன் முடியவில்லை.
'எம்.ஜி.ஆர்., மேல் தான், பாகவதருக்கு அன்பு உண்டு. சிவாஜி மேல், பாகவதருக்கு பொறாமை...' என்று, புரளி கிளப்பி விட்டனர், சிலர்.
செய்தியறிந்த பாகவதர், 'நான் எந்த காலத்திலும், யார் மீதும் பொறாமை கொண்டதே கிடையாது. இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
'அம்பிகாபதியாக நடித்த நான், அம்பிகாபதியின் அப்பா கம்பராக நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேனே தவிர, சிவாஜியின் அப்பாவாக நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே...' என கூறி, மிகவும் மனம் வருந்தினார்.
அத்துடன், இந்த புரளிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, வேறு ஒரு படத்தில், சிவாஜிக்கு அப்பாவாக தான் நடிக்கப் போவதாகவும், அந்த படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தார், பாகவதர். ஆனால், சில காரணங்களால், அந்த முயற்சி கை கூடவில்லை.
அக்காலத்தில், செருகளத்துார் சாமா என்ற குணச்சித்திர நடிகர். பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர். சாந்தமான தோற்றமும், இயல்பான நடிப்பும் அவரது தனித்துவமாகும்.
பாகவதரின் சொந்த தயாரிப்பில், திருநீலகண்டர் படம், 1939ல் வெளியானது. படத்தின் கதைப்படி, சிவயோகியாக நடித்த செருகளத்துார் சாமா, திருநீலகண்டராக நடித்த, பாகவதரை எட்டி உதைக்க வேண்டும்.
'இந்த இசை மேதையை நானாவது, உதைப்பதாவது. என்னால் முடியாது...' என்று சொல்லி, மறுத்து விட்டார், சாமா.
'படத்தின் இயக்குனர் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் உதைத்து தான் ஆகவேண்டும். இது என் கட்டளை...' என்று சொல்லி விட்டார், இயக்குனர், ராஜா சாண்டோ.
அப்படியும் மறுத்து விட்டார், சாமா.
நேராக சாமாவிடம் வந்தார், பாகவதர்.
'நீங்கள் எல்லா வகையிலும், என்னை விட பெரியவர். உங்களை விட வயதில் இளையவனான என்னை உதைப்பதில் எந்த தவறும் இல்லை. படத்திற்காக நடிக்கதானே செய்கிறீர்கள். தயவுசெய்து நடித்து கொடுங்கள்...' என்றார்.
'ஈஸ்வரா, நான் செய்யும் இந்த தப்பிற்காக என்னை மன்னித்து விடு...' என்று, ஆகாயத்தை நோக்கி இரு கைகளையும் விரித்து, வணங்கி, அரை மனதாக நடித்து கொடுத்தார்.
ஒரே, 'ஷாட்'டில் அற்புதமாக அமைந்தது அக்காட்சி. அனைவருக்கும் பரம சந்தோஷம்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர், தீரர் சத்தியமூர்த்தி. அற்புதமான பேச்சாளர். பாரத தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். நாடக கலையை, தேச விடுதலைக்காக பயன்படுத்தியவர்.
தங்களுக்கு எதிராக பேசாதிருந்தால், சென்னை பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பதவி தருவதாக கூறினர், வெள்ளையர்கள்.
'உங்களை விரட்டுவது தான் என் முதல் ஜோலி...' என்று சொல்லி, அந்த வாய்ப்பை மறுத்தவர், தீரர் சத்தியமூர்த்தி.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, பிரிட்டிஷாரின் வேண்டுகோளுக்கு இணங்க, யுத்த நிதி திரட்டி தந்தார், பாகவதர்.
இது, சத்தியமூர்த்திக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது.
நம்மை அடிமைப்படுத்தி, சுதந்திரம் தர மறுக்கும் வெள்ளையனுக்கு உதவுவது எவ்வகையில் நியாயம் என்ற, அவரது இந்த வருத்தம், எப்படி நீங்கியது தெரியுமா?
— தொடரும்
- கார்முகிலோன்