
பா - கே
திருப்பூரில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் நண்பர் அவர். ஆண்டுக்கு ஒருமுறை, தன் நிறுவன ஊழியர்களில், சிலரது வயதான பெற்றோரை, தன் செலவில், காசிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த ஆண்டு, தன் பெற்றோர் மற்றும் மாமனார் - மாமியாரும் அவர்களுடன் சென்று வர விரும்பியதால், அனுப்பி வைத்திருக்கிறார்.
சமீபத்தில், இந்த புனித யாத்திரைக்கு சென்று வந்தவர்களுக்கு, தன் வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அலுவலக வேலையாக, கோவைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அதை முடித்து விட்டு, அப்படியே திருப்பூருக்கு சென்று வர நானும், இன்னொரு செய்தியாளரும் முடிவு செய்தோம்.
அலுவலக வேலை முடிந்துவிட, அங்கிருந்து காரில் திருப்பூருக்கு புறப்பட்டோம்.
நண்பர் வீட்டில், பூஜை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
நண்பரது பெற்றோர் மற்றும் மாமனார் - மாமியாரை சந்தித்து, ஆசி பெற்று, காசி யாத்திரை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது, 'என்ன சார், எப்படி இருக்கீங்க?'ன்னு கேட்டபடி வந்தார், பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர்.
'வாங்க, உக்காருங்க. ஏது இந்தப் பக்கம்?' என்றார், நண்பரின் அப்பா.
'உங்ககிட்ட வந்தா... ஏதாவது சொல்லுவீங்க கேட்டுக்கலாம்ன்னு வந்தேன்...' என்றார், வந்தவர்.
'நிறைய படிச்சவங்க எல்லாம் இப்படித்தான். புதுசு புதுசா ஏதாவது தெரிஞ்சுக்கணும்ன்னு ஆர்வமா இருக்காங்க...' என்றார், நண்பரின் அப்பா.
'எப்படி?' என்றார், பேச்சாளர்.
'எத்தனை நாள் வாழ்வேனோ அத்தனை நாளும் ஏதாவது கற்றுக்கொண்டே இருப்பேன்னு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லியிருக்கார். இதை, ஞாபகப்படுத்தற மாதிரி சுவாமி ராமதீர்த்தருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது...'
'விபரமா சொல்லுங்க...' என்றார், பேச்சாளர்.
நண்பரின் அப்பா கூற ஆரம்பித்தார்:
ஒருமுறை, கப்பலில் ஜப்பானுக்குப் போனார், சுவாமி ராமதீர்த்தர். அதே கப்பலில் ஜப்பான்காரர் ஒருவரும் போய்க்கிட்டிருந்தார்.
ஜப்பான்காரருக்கு, 90 வயசுக்கு மேல இருக்கும். ரொம்ப வயசானவர். கை, கால்களில் நடுக்கம். உடம்பும் ரொம்ப பலவீனமா தெரிஞ்சுது. உடல்நிலை இந்த அளவுக்கு இருக்கேன்னு, அவரு பேசாம ஒரு மூலையில முடங்கி போகவில்லை.
ஒரு புத்தகத்தை விரித்து வைத்தபடி, சீன மொழியில் ஏதோ ஒரு பாடத்தை திரும்பத் திரும்பச் சொல்லி, எழுதிக்கிட்டிருந்தார்.
சுவாமி ராமதீர்த்தருக்கு இது கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சுது. ஆச்சரியப்பட்டு, 'பெரியவரே, இவ்வளவு தீவிரமா என்னமோ செஞ்சிக்கிட்டிருக்கீங்களே... என்ன அது?'ன்னு கேட்டார்.
'சீன மொழியை கத்துக்கணும்ன்னு தோணிச்சு. எழுதிப் பார்த்தா மொழிப் பயிற்சி கிடைக்கும். அதனால, அந்த மொழியில் எழுதிப் பழகுறேன்...' என்றார், அந்த ஜப்பான்காரர்.
'மற்ற மொழிகளை விட, அந்த மொழி ரொம்பவும் கடினமானதுன்னு கேள்விப்பட்டுள்ளேன்...' என்றார், ராமதீர்த்தர்.
'கடினமானது என்பதற்காக அதை பயிலக் கூடாதுங்கறது இல்லையே...' என்றார், அந்த ஜப்பான்காரர்.
'இந்த மொழியை முழுசா கத்துக்கறதுன்னா வருஷக்கணக்குல ஆகும். உங்களுக்கோ கையும், காலும் சொன்னபடி கேட்க மாட்டேங்குதே...' என்றார், சுவாமிஜி.
'அப்படின்னா... நான் சீன மொழியை கத்துக்கற முயற்சியை கை விட்டுடணும்ன்னு சொல்றீங்களா?'
என்றார், ஜப்பான்காரர்.
'நான் அப்படியெல்லாம் உங்களுக்கு யோசனை சொல்லலாமா? ஆனா, ஒண்ணு மட்டும் தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசைப்படறேன்...' என்றார்.
'என்ன?' என்று, கேட்டார்.
'இப்படியெல்லாம் செய்யணும்ன்னு உங்களைத் துாண்டியது எதுங்கறதை மட்டும் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்...' என்றார், ராமதீர்த்தர்.
எழுதிக்கிட்டிருந்த பேப்பர்களை ஒரு பக்கமா வச்சுட்டு, 'நான் உயிரோட இருக்கற வரைக்கும் ஏதாவது புதுசா ஒண்ணை கத்துக்கிட்டே இருக்கணும். இது தான் என் ஆசை...' என்றார், அந்த ஜப்பான்காரர்.
'ஆனா, உங்க உடல்நிலை புதுசா கத்துக்கிற முயற்சிக்கு சாதகமா இல்லை போல் இருக்கே...' என்றார்.
'அட, வாழ்க்கைங்கறது ஆதி - அந்தமில்லாத, தங்கு தடை இல்லாத ஒரு பிரவாகம். ஓயாமல் பிரவகிக்கிற வாழ்க்கை நீரோட்டத்தின் ஊடே ஒவ்வொரு கணமும் புதுசா ஏதாவது ஒண்ணை அறிய வாய்ப்பு கிடைச்சா அதை கை நழுவவிடக் கூடாது...' என்றார், அந்த ஜப்பான்காரர்.
- இப்படி நண்பரின் அப்பா கூறி முடிக்க, அவரது காலை தொட்டு வணங்கி, 'உங்களை போன்றோருடன் பேசி வருவதால் தான், என் மேடை பேச்சுக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கிறது...' என்று கூறி விடைபெற்றார், பட்டிமன்ற பேச்சாளர்.
'எனக்கும் ஒரு விஷயம் கிடைத்ததே...' என்று நினைத்து, சாப்பிட சென்றோம்.
ப
ஒரு பெரிய செல்வந்தன்; ஆனால், பயங்கர கருமி. பணம் சேர்க்கத் தெரியுமே தவிர, செலவு செய்யத் தெரியாது. அவனுக்கு மூணு பிள்ளைகள். மூவரும், தன்னைப் போலவே கருமியாக இருக்க ஆசைப்பட்டான்!
கடைசி காலம் நெருங்கியது.
மூத்த பிள்ளையைக் கூப்பிட்டு, 'நான் செத்துப் போனா, என்னை, நீ எப்படி அடக்கம் பண்ணுவே?' என்று கேட்டான்.
'சந்தனப் பலகையால ஒரு பெட்டி செய்வேன். அதுல உன்னை வச்சு, பட்டுத்துணியால மூடி, கவுரவமா கொண்டு போய் அடக்கம் பண்ணுவேன்...' என்றான்.
'என் பிள்ளையாடா நீ... சந்தன மரமும், பட்டுத் துணியும் எவ்வளவு செலவாகும்... ஊதாரியா போயிடுவ போலிருக்கே...'
என்று சொல்லி, 'பளார்'ன்னு அறைஞ்சுட்டான்.
ரெண்டாவது பிள்ளையை கூப்பிட்டு, அதே கேள்வியைக் கேட்டான்.
அண்ணன் அறை வாங்கினதைப் பார்த்துட்டதால, ஜாக்கிரதையா பதில் சொன்னான்.
'நான், உனக்கு கள்ளிப் பலகையிலதாம்ப்பா பெட்டி செய்வேன். துணி எதுவும் போர்த்தாம, அப்படியே கொண்டு போய் அடக்கம் பண்ணிடுவேன்...' என்றான்.
'கள்ளிப்பலகை மட்டும் என்ன சும்மாவா கிடைக்கும்... காசு கொடுத்தாத்தானே கிடைக்கும்...' என்று சொல்லி, அவனையும், 'பளார்'ன்னு அறைஞ்சுட்டான்.
கடைசியா மூணாவது மகனைக் கூப்பிட்டு, 'நீ எப்படிடா என்னை அடக்கம் பண்ணுவே?' என்றான்.
'நான் உனக்காக செலவே பண்ண மாட்டேன். உன்னை வச்சு பொழைச்சுக்குவேன்...' என்றான்.
'எப்படிடா?' என்று கேட்டான்.
'உன்னை துண்டு துண்டா வெட்டி, ஒரு கூடையில போட்டு தலையில துாக்கிக்கிட்டு தெருத் தெருவா போய், ஆட்டுக்கறின்னு சொல்லி வித்து காசாக்கி விடுவேன்...' என்றான்.
'நீதான்டா எம்புள்ளை. அப்படியே வித்து காசாக்கிடு. ஆனா, அந்த மேலத் தெரு பக்கம் மட்டும் போகாதே...' என்றான்.
'ஏம்ப்பா?' என்று கேட்டான், பிள்ளை.
'அங்கே இருக்கிறவன் பூரா கடனுக்குக் கேட்பாங்க கையில காசு தரமாட்டாங்க...' என்றான்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.