
கோ.சு. சுரேஷ், கோவை: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு, சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளது எதைக் காட்டுகிறது?
அழகிரியின் சொந்த திறமையால், அவர் தலைவர் பதவி வகிக்கும் காலத்தில், தமிழகத்தில், காங்கிரஸ் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை, அவரது கட்சியினர் கணித்து விட்டனர்... அதனாலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
* ஜி. கண்ணாத்தாள், அருப்புக்கோட்டை: போகிற போக்கை பார்த்தால், மின் துறை, ரயில்வே மற்றும் அஞ்சல் துறை அனைத்துமே, தனியார் மயமாகி விடும் போலுள்ளதே...
நல்லது தான்! புகார் ஏதும் இல்லாமல் இத்துறைகள் செயல்படும். அப்படியே, புகார் வந்தாலும், அவை உடனே சரி செய்யப்பட்டு விடுமே! இத்துறைகள் தனியார் மயம் ஆகட்டும்!
த. நேரு, வெண்கருப்பூர்: குடித்து விட்டு வந்து, கொடுமைப்படுத்தும் கணவனை விட்டு விட்டு, என் வீட்டிற்கு வந்திருக்கும், என் தங்கைக்கு, நீங்கள் கூறும், 'அட்வைஸ்' என்ன?
குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்து பவர்களுக்கு, எவ்வளவு புத்திமதி சொன்னாலும், திருந்தவே மாட்டார்கள். அதனால், சட்டப்பூர்வமாக அவர்களை விவாகரத்து செய்து, மது பழக்கம் இல்லாத ஒருத்தரை மறுமணம் செய்து கொள்வதே, இதற்கு நிரந்தர தீர்வு!
கி. கணேசன், நெல்லை: ஒருவர் வாழ்க்கையில், வெற்றி என்பது என்ன?
எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடு, திருப்தியோடு, உண்மையாக, உற்சாகத்துடன் மற்றும் ஊக்கத்துடன் இருப்பது தான், வாழ்க்கையின் வெற்றி என்பது!
* எஸ். விக்ரம், கோவில்பட்டி: நான் எல்லாருக்கும் நன்மை செய்து வருகிறேன். எனக்கும் நன்மை கிடைக்குமா?
என்ன அவசரம், பொறுத்திருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும், அதற்கான நன்மைகளை காலம் கடந்தாவது அழைத்துக் கொண்டு வரும்!
அ. குமார், கடலுார்: சினத்திற்கு இடம் கொடுக்கலாமா?
கொடுக்காதீர்கள்... சினத்திற்கு பதில், சிந்தனைக்கு இடம் கொடுங்கள். அப்போது, நினைத்ததெல்லாம் நிறைவேறும்; நினைத்த உடன் நிறைவேறும்!