sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்னமிட்டவன்!

/

அன்னமிட்டவன்!

அன்னமிட்டவன்!

அன்னமிட்டவன்!


PUBLISHED ON : டிச 10, 2023

Google News

PUBLISHED ON : டிச 10, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கல்யாணத்துக்கு போய், உச்சி வெயிலில் திரும்பிய பரமசிவம், முதலில் எதிர்கொண்டது மருமகள் யமுனாவின் எரிமலை பார்வையைத் தான்.

''அவரு வேஷ்டியவா உடுத்தி இருக்கீங்க?''

''வெயில்ல வந்தவங்களுக்கு, தண்ணி குடுக்காம, என்ன பேசிக்கிட்டு? உன் புருஷன் வேஷ்டி தான். மேஜை மேல இஸ்திரி போட்டு வெச்சிருந்தது. கல்யாணத்துக்கு நல்ல உடை போட்டுட்டு போனாதான கவுரவம்?'' என, சொல்ல வந்ததை முடிப்பதற்குள், ''ஐயையோ...'' என, முகம் மூடிக்கொண்டாள், பானு அத்தை.

அருகிலிருந்த டவலால் தன் மானத்தை மறைத்தார், பரமசிவம்.

''இன்னொருத்தங்க பொருளுக்கு ஆசைப்பட்டா, மானம் தான் போவும்,'' என, சற்று முன் பரமசிவம் இடுப்பிலிருந்த வேஷ்டி, யமுனாவின் கையில் இருந்தது.

அதிர்ந்து நின்றார், பரமசிவம்.

''நல்ல குடும்பத்து பொண்ணா நீ. மாமனார் இடுப்பிலிருந்து வேஷ்டிய உருவுற. த்துா...'' ரவுத்திரமானாள், பானு.

தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள், யமுனா.

கண்ணை மூடி ஈசிச்சேரில் சாய்ந்து, சமநிலைக்கு வந்திருந்தார், பரமசிவம்.

'உரசலாக சென்று கொண்டிருந்த உறவை, இன்று, யமுனா ஒட்ட வெட்டி விட்டாள். இனி, எந்த முகத்துடன் இந்த வீட்டில் இருப்பது?' என, எண்ணினான், ஆனந்தன்.

அப்பாவை அசிங்கப்படுத்திய யமுனாவை, ''என் வேஷ்டியை அப்பா கட்டினா என்னடி?'' என கேட்டு, பளீரென அறைந்தான்.

எதிர்வினை ஆற்றினாள், யமுனா.

மறுநாள், புதிதாக, 10 வேஷ்டிகள் வாங்கி வந்தார், யமுனாவின் அப்பா.

தெருவில் நின்றபடி, ''சம்பந்திக்கிட்ட பெரிய சேமிப்பு இல்லைன்னு தெரியும். கட்டிக்க வேஷ்டி கூடவா இருக்காது?'' என்றார்.

அவமானத்தில் தலை கவிழ்ந்தார், பரமசிவம்.

அன்று, யமுனாவைத் தவிர, வீட்டில் யாரும் சாப்பிடவில்லை.

மொட்டை மாடியில், கண்களை மூடி படுத்திருந்தார், அப்பா.

பள்ளியிலிருந்து வந்த ஆனந்தின் தம்பிகளான, சந்துவும், ராஜுவும், நடந்த விஷயத்தை அறிந்தனர். யமுனாவை பார்க்க பயந்து, அப்பாவின் அருகே போய் ஒடுங்கிக் கொண்டனர்.

நடு இரவில் சந்து மற்றும் ராஜுவிடம், ''ஆனந்த் நல்லவன். சந்தோஷமா இருக்கட்டும். நாம வெளியே போயிடுவோம்,'' என்றார்.

காலையில் எழுந்து வந்த ஆனந்தின் பார்வையில பட்டது ஒரு கடிதம்.

தம்பியுடன் நான் வெளியேறுகிறேன். நீங்களாவது நிம்மதியாக இருங்கள்... என, எழுதியிருந்த பேப்பர் படபடத்தது.

காலையிலிருந்தே மனம் ஒரு நிலையில்லாமல் அலை பாய்ந்தது, ஆனந்துக்கு.

'என்னாயிற்று எனக்கு, ஏன் பழைய நினைவுகள்?'

யமுனாவின் அகம்பாவம், அப்பாவின் அவமானம், தம்பிகளின் நிராதரவு அனைத்தும் காட்சிகளாய் மனத்திரையில் வந்தது.

'அற்பாயுசில் 'கொரோனா'வில் போகத்தான் ஊழித்தனம் ஆடினாயா, யமுனா? ஒரு கூட்டுப்பறவை போல் வாழ்ந்த குடும்பத்தை வேரறுக்கவே வந்தாயா?'

அன்று நடந்த அந்த நிகழ்ச்சிக்கு பின், எங்கு தேடியும் அப்பா மற்றும் தம்பிகள் கிடைக்கவில்லை. எங்கு போயினரோ, என்ன ஆயினரோ? 12 ஆண்டுகள் கடந்திருந்த நிலையில், இன்று, ஏன் பழைய நினைவுகள்?

தம்பிகள் வளர்ந்திருப்பர். படித்திருக்கலாம். கடவுளே, நல்ல வேலையில் செட்டிலாகி இருக்க வேண்டும். அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வாழ்க்கையில் அனைத்தும் இழந்து விட்டேன். இனி, ஆசை ஒன்றுமில்லை. தம்பிகளை ஒருமுறை பார்த்து விட்டால், அந்த சந்தோஷத்துடனேயே காலத்தை ஓட்டி விடுவேன்.

பழைய நினைவுகள் மீண்டும் அவனுள் வந்தது.

தட்டில் வெங்காய வத்தக்குழம்பை ஊற்றினான், ஆனந்த்.

'பேப்பரை அடுக்கி வெச்சிட்டு வரலாம்ன்னு பார்த்தேன். குழம்பு வாசனை உட்கார விடலை. அபாரம்டா கண்ணா! இன்னும் கொஞ்சம் சாதமும், குழம்பும்...' ருசித்தவாறே சொன்னார், அப்பா.

அறை ஓரத்தில் கதைப் புத்தகத்தில் லயித்திருந்த அம்மா, 'அது என்னமோ ஆண் தொட்டால் எல்லாம் மணக்குது; நானும் அதையே தான் செய்யிறேன். எனக்கே பிடிக்கிறதில்லை...' என்றாள்.

'சாப்பிட்டுப் பாரு, எங்கம்மாவோட கை மணம் அப்படியே என் பிள்ளைக்கு வாய்ச்சிருக்கு. அந்த காலத்துல, எங்கம்மா சமைச்சா, ஊர் பூரா வாசனை அடிக்குமாம். சொல்லியிருக்கா...'

தங்கள் தட்டிலிருந்ததை வழித்து சாப்பிட்டிருந்தனர், சந்துவும், ராஜுவும்.

'அண்ணா, லஞ்சுக்கு?'

'கார்ன் ப்ரைட் ரைஸ் செஞ்சிருக்கேன்டா...'

'அதை எனக்கும் கொஞ்சம் போடு...' அப்பா கேட்க, ஆர்வத்துடன் அவர் தட்டிலும் பரிமாறினான்.

'ஆனந்தா, பேசாமா கேட்டரிங் காலேஜ்ல படிச்சுட்டு, ஹோட்டல் வைக்கலாம்டா! சூப்பரா போகும்...' ஆனந்தமாக சாப்பிட்டு எழுந்தார், அப்பா.

தம்பிகளை ஆனந்த் பார்த்துக் கொள்வான் எனும் நம்பிக்கையோ, என்னவோ, வெகு சீக்கிரமே இவ்வுலகிலிருந்து விடைபெற்றாள், அம்மா. அன்றிலிருந்து தாயுமானான், ஆனந்த். உப்புமாவோ, இட்லியோ, மோர் சோறோ அவன் கை பட்டால் சுவைத்தது. தம்பிகளை தாயாக அணைத்து, சீராட்டி வளர்த்தான்.

சம்பளத்தை அவனிடம் தந்துவிட்டு நிம்மதியானார், அப்பா.

சமையலறையில் அதிக நேரம் செலவழித்ததால், ஆனந்தால் படிப்பில் பரிமளிக்க முடியவில்லை. தன் கையிலிருந்த பணத்தில், ஆனந்துக்கு, ஹோட்டல் ஒன்று வைத்துக் கொடுத்தார், அப்பா.

அங்கு சாப்பாட்டை சுவைக்க வந்த யமுனா, அவன் வாழ்க்கையில் காதல் சுவையை சேர்த்தாள். பிள்ளை விரும்புகிறான் என்றவுடனேயே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார், பரமசிவம்.

கல்யாணம் முடிந்து, யமுனாவை கொண்டு விட்டார், அவளது அப்பா.

'தனியே போனா தான் நாலு காசு பார்க்க முடியும் போல இருக்கு. காக்காக் கூட்டம் போல இத்தனை பேர் இருக்கிற வீட்டில் எத்தனை சம்பாதிச்சாலும் போதாது...' என, முதல் அபஸ்வரத்தை சேர்த்தார், மாமனார்; அதை கேட்டு அதிர்ந்தார், அப்பா.

'பெரியவர் பேசற பேச்சா இது? எனக்கு, 'பென்ஷன்' வருது சம்பந்தி...'

'ரொம்ப சரி, ஒரு நல்ல நாள் பார்த்து, என் பெண்ணை தனி குடித்தனம் வெச்சுடுங்கோ. அவளுக்கு கூட்டுக் குடும்பமெல்லாம் பழக்கமில்லை...'

அடுத்த நாளிலிருந்து உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் பிரச்னை ஆரம்பமானது.

சொந்த பந்தங்களை விட்டு வந்துள்ள சின்ன பெண். புது மனிதர்களை புரிந்து கொள்ள கொஞ்ச நாள் ஆகும். நாம் தான், 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ள வேண்டும் என்று, யமுனாவின் அவமதிப்புகளை பெரிதுபடுத்தவில்லை, பரமசிவம்.

ஓய்வுப்பெற்ற பின், தனக்கென புது வேஷ்டி, சட்டை எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை, பரமசிவம்.

'இதுவே எதேஷ்டம்...' என, ஆனந்தின் பழைய உடைகளையே அணிந்து கொண்டார்.

அது அத்தனை பெரிய பிரச்னையாகி, குடும்பத்தை பிரித்துவிடும் என, கனவிலும் நினைக்கவில்லை.

ஹோட்டல் சமையலறையில் சமைக்கும் போதெல்லாம் இது, சந்துவுக்கு பிடித்தது. இது, அப்பாவிற்கு, இது, ராஜுவிற்கு என, கற்பனையில் பாசத்தை அரங்கேற்றிக் கொண்டே இருந்தது, ஆனந்தின் மனம்.

மழை காரணமாய், வாடிக்கையாளர் யாரும் வரவில்லை. சக ஊழியர்களும் சினிமாவுக்கு சென்றிருக்க, கடந்த கால காட்சிகளில் வழக்கம்போல் லயித்திருந்தான், ஆனந்த்.

பெரிய கார் ஒன்று ஹோட்டல் வாசலில் நிற்க, அதிலிருந்து இறங்கியவர்களை கண்டதும் விக்கித்தான், ஆனந்த்.

சந்துவும், ராஜுவுமா?

அந்த சாயல், நடை, உடல்வாகு. கண்களும், காதுகளும், ஆம் என்றன. உள்ளே ஏதோ பற்றிக் கொண்டது.

'தம்பிகளை சொந்தம் கொண்டாடும் இடத்திலா, நீ இருக்கிறாய்? மனைவிக்கு பிடிக்கவில்லை என்றவுடன், உன் காலையே சுற்றி வந்த அன்பு சொந்தங்களை உதறிவிட்டு ஓடி வந்த உத்தம புத்திரன், நீ. எந்த முகத்துடன், அவர்கள் முன் செல்வாய்?' குத்தி காட்டியது, மனம்.

முதலாளியிடம், ''இங்கு, 'வை---பை கனெக்ஷன்' கிடைக்குமா?'' என கேட்டான், சந்து.

முதலாளி தலையசைக்க, ''வெரி குட்! முக்கிய, 'மீட்டிங்' இருக்கு. மழையால் போக முடியல. ரெண்டு மணி நேரம் தங்குறதுக்கு, தனியறை வேணும். போகும் போது சாப்பிட்டுட்டு எல்லாத்துக்கும் பணம் குடுத்துடுவோம். ஓ.கே.,யா?'' என்றான்.

'மழையால் இன்று தடைபட்ட வியாபாரத்தை ஈடு செய்ய வந்து விட்டனர். இன்றைக்கான வருமானத்தை கறந்து விடலாம்...' என, முதலாளிக்கு மகிழ்ச்சி.

தானே போய் மாடியறையை திறந்து, ''மழையில், ஆளுங்க வேலைக்கு வரலை. சமையலுக்கு ஒருத்தன் இருக்கான். என்ன வேணுமோ, 'ஆர்டர்' பண்ணுங்க,'' என்றார்.

''காரைப் பாரு கப்பலாட்டம்; பெரிய பார்ட்டி, பார்த்து செஞ்சு குடுடா,'' என, ஆனந்திடம் கூறி, ஓய்வெடுக்க சென்றார், முதலாளி.

உற்சாகத்துடன் புளியை ஊற வைத்து, வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தான், ஆனந்த்.

அழகாக இருந்தான், ராஜு. அதிகமாக அப்பா சாயல், சந்துவிடம். தம்பிகள், பி.எம்.டபிள்யூ., காரில் பயணிக்குமளவு வளர்ந்து விட்டனர். ஆங்கிலத்தில் சரளமாக பேசினர். மனம் பறந்தது. இருந்த டிக்காஷனில் அரை சர்க்கரை போட்டு காபி கலந்தான். 'மாஸ்கை' மாட்டிக் கொண்டு, காபியை டேபிளில் வைத்துவிட்டு, கதவோரம் நின்றான்.

''அட... இத்தனை வருஷத்துக்கப்புறம் அண்ணா தந்தது போல காபி. வாவ்! ஒருவேளை அண்ணாகிட்ட, 'டிரெய்னிங்' எடுத்திருப்பாரோ?'' என்றான், ராஜு.

''அண்ணா எங்காவது அறுசுவை அரசனாய் இருப்பார்,'' என, தம்பியை கேலி செய்தான், சந்து.

''சார், இன்னிக்கு இரவு, வெங்காய வத்தக்குழம்பு, வாழைக்காய் சிப்ஸ் கிடைக்குமா?'' என்று கேட்டான், ராஜு.

''எனக்கு, வெண் பொங்கல் போதும்,'' என்றான், சந்து.

பின், இருவரின் கவனமும், 'லேப்டாப்'பிலும், மொபைல்போன் பேச்சிலும் சென்றது.

வத்தக்குழம்பு, தொட்டுக்கொள்ள வறுவல், தேங்காய், முந்திரி அரைத்து பாயசம், நெய் மிதக்கும் பொங்கல், கொத்சு என, அமர்க்களப்படுத்தி இருந்தான், ஆனந்த்.

மனம் மட்டும் யோசிப்பதை நிறுத்தவில்லை.

'தம்பிகள் நன்றாக வளர்ந்து விட்டனர். அண்ணன் எங்கோ நன்றாய் இருப்பார் என்ற நம்பிக்கையை ஏன் மாற்ற வேண்டும்?

'கொரோனாவில் ஹோட்டல், 'பிசினஸ்' படுத்ததையும், கையிருப்பு, யமுனாவின் சிகிச்சையில் கரைந்ததையும், அடுத்த வேளை சாப்பாட்டிற்கு இங்கு ஒட்டிக் கொண்டிருப்பதையும் ஏன் சொல்ல வேண்டும்?

'இந்த கையாலாகாத அண்ணனின் நிலையை, அவர்கள் அறிய வேண்டாம். தம்பிகளை பார்க்க ஆசைப்பட்டோம்... பார்த்து, சமைத்தும் போட்டு விட்டோம். இந்த இனிமை, நிம்மதி போதும். குழந்தைகள் எப்போதும் சந்தோஷமாய் வாழட்டும்...' என நினைத்தபடி, டேபிளை துடைக்கும் போது, 'டிஷ்யூ பேப்பரில்' எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

அண்ணா... 'மாஸ்க்' போட்டால் மறைந்து விடுமா, உன் அன்பு முகம். எங்களுக்கு அன்னமிட்ட உன் அன்பு மறக்கக் கூடியதா? எங்களை தாயாக தாங்கியவன், நீ. 'மாஸ்க்' முகத்தை மறைக்கும், உன் கை மணத்தை, எதை வைத்து மறைப்பாய்...

முந்திரி பாயசமும், வத்தக்குழம்பும், உன் மனதில், நாங்கள் இருப்பதை காட்டிக் கொடுத்து விட்டன, அண்ணா... எப்படி இருக்கிறார், அண்ணி? கஷ்ட காலங்கள் முடிந்து விட்டன. இனி நம் காலம், வசந்த காலம்.

புதிய தொழிற்சாலைக்கு இடம் பார்த்து விட்டோம். இப்போதைக்கு, 100 தொழிலாளர்கள் உள்ளனர். 'கேன்டீன் இன்சார்ஜ்' ஆக, எங்களுடன் இணைந்து கொள், அண்ணா. உன் முதலாளியிடம் விடைபெற்று வா. வெளியே காரில் காத்திருக்கிறோம்.

கடிதத்தை படித்ததும், கண்கலங்க காரை நோக்கி ஓடினான், ஆனந்த்.

கே. குருமூர்த்திவயது: 75பணி: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.வாரமலர் இதழில் வெளியாகும் சிறுகதைகளை படித்து, தானும் அதுபோல் எழுத முயற்சித்ததன் பலன், இச்சிறுகதை என்று குறிப்பிட்டுள்ளார். இவர் எழுதிய முதல் சிறுகதை இது. முதல் சிறுகதையே ஆறுதல் பரிசு பெற்றுள்ளது, மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார்.நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக்கரு பிறந்த விதம்: என் நெருங்கிய குடும்பத்தில் நடந்த நிகழ்வின் தாக்கமே இக்கதை.






      Dinamalar
      Follow us