தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சறுக்கியே சாதிக்கும் சகோதரர்கள்!

சறுக்கியே சாதிக்கும் சகோதரர்கள்!

சறுக்கியே சாதிக்கும் சகோதரர்கள்!


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோலர் ஸ்கேட்டிங். இது, சர்வதேச அளவில் பிரபலமான ஒரு விளையாட்டு. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, இரண்டு சகோதரர்கள், பதக்கங்களை குவித்து, சாதனை படைத்து வருகின்றனர். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த மணிமொழி - அமுதா தம்பதியரின் புதல்வர்கள் தீபக் மற்றும் கார்த்திக். இவர்களில், தீபக், வயது 18, கம்ப்யூட்டர் பாடத்தில் டிப்ளமா பெற்றுள்ளார். கார்த்திக், வயது 15, எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளியில் படிக்கிறார்.

இரு சகோதரர்களும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் நடந்த போட்டிகளில் மூன்று முறையும், தமிழக அளவிலான போட்டிகளில் தொடர்ந்து, பத்து முறையும் தனி நபர் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் தீபக். ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் இதுவரை அவர் பெற்றுள்ள தங்க பதக்கங்களின் எண்ணிக்கை 58; வெள்ளி 4; வெண்கலம் 2. இவரது சகோதரர் கார்த்திக்கும் பதக்க குவிப்பில் சளைத்தவரல்ல. தேசிய அளவில், மூன்று முறையும், தமிழக அளவில், ஆறு முறையும் தனி நபர் சாம்பியன் பட்டத்தை பெற்றவர். 29 தங்கம், 14 வெள்ளி, 2 வெண்கலம் என்று கார்த்திக்கின் பதக்க வேட்டை தொடர்கிறது.

இந்த ஸ்கேட்டிங் சகோதரர்களின் பெற்றோர், தங்கள் மகன்களின் சாதனைகளை பார்த்து பூரித்து போயுள்ளனர். அவர்கள் கூறுகையில், 'கடந்த 1999ம் ஆண்டு, ஒரு நாள் மாலை வேளையில், இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அண்ணாநகர் டவருக்கு பொழுது போக்காக சென்றோம். அப்போது அங்கு, உன்னி கிருஷ்ணன் என்ற மாஸ்டர் ஒருவர், சில குழந்தைகளுக்கு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.

'அதை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள், தாங்களும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற வேண்டும் என்று, தங்கள் விருப்பத்தை எங்களிடம் கூறினர்; உடனே சம்மதித்தோம். மறுநாள், உன்னி கிருஷ்ணன் மாஸ்டரை தொடர்பு கொண்டு, குழந்தைகளின் விருப்பத்தை தெரிவித்தோம். அவர் பயிற்சி தர சம்மதிக்கவே, அடுத்த சில நாட்களில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி துவங்கியது.

'தினசரி, இரண்டு வேளையும் பயிற்சி கொடுக்கப்பட்டது. காலை, 5:00 மணி முதல், 7:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல், 8:00 மணி வரையும் பயிற்சி பெற்றனர். முதற்கட்ட பயிற்சி முடிந்ததும், போட்டிகளில் பங்கேற்க துவங்கினர். தேசிய, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்...' என்றனர்.

தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் இந்த சாதனை சகோதரர்களின் அடுத்த இலக்கு, இந்த ஆண்டு தென்கொரியாவில் நடக்க உள்ள சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, தங்க பதக்கத்தை கொண்டு வருவது தான். இதற்காக, இவர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதால், இதில் சிறப்பாக பரிணமிக்கும் இளைஞர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில், 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' மூலம் இடம் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.

***

- எஸ் உமாபதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us