தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா!

மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா!

மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா!


PUBLISHED ON : ஆக 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகூர் தர்கா தமிழகத்தில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, பர்மா மற்றும் பல வெளி நாடுகளிலும் உள்ளது. சிங்கப்பூரின், 65 தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான நாகூர் தர்கா, இந்திய - முஸ்லிம் மரபுடைமை நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

15ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான், ஷாஹுல் ஹமீதின் நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் இந்திய - முஸ்லிம் சமூகத்தினர், 1827-1830ல் தெலுக் ஆயர் ஸ்ட்ரீட்டில் இந்த தர்காவைக் கட்டினர். பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி, அக்., 1, 1827ல் வழங்கிய குத்தகையின் கீழ், இது உருவாக்கப்பட்டது.

கடந்த, 2008ல் துவங்கிய முக்கிய மறுமேம்பாட்டுக்குப் பிறகு, நாகூர் தர்கா இன்று புதுத் தோற்றத்தைப் பெற்று, மரபுடைமை நிலையமாகத் திறப்பு விழா கண்டுள்ளது. சிங்கப்பூர் அதிபர், எஸ்.ஆர்.நாதன் இந்த நிலையத்தை, அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

'நாகூர் தர்கா எல்லாருக்கும் சொந்தம். இந்தியாவில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் போன்ற அனைத்து மக்களும், முதலில் அங்கே சென்று, தங்கள் மரியாதையைச் செலுத்திவிட்டுத் தான், மற்ற காரியங்களில் ஈடுபடுவர்.

'சிங்கப்பூர்வாசிகள் பலருக்கு நாகூர் தர்காவின் வரலாறும், அதன் மகத்துவமும் தெரியாது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில், இந்த மரபுடைமை நிலையம் துவங்கியிருப்பது நல்ல பலன் அளிக்கும். அனைவரும் இந்த நிலையத்துக்கு வந்து, இந்திய - முஸ்லிம் பாரம்பரியம் மற்றும் மரபுடைமை பற்றி அறிந்து கொள்வர் என்று எதிர்பார்க்கிறேன்...' என, சிங்கப்பூர் ஜனாதிபதி கூறினார்.

மரபுடைமை நிலையத்தின் காட்சிக் கூடங்களில், படங்களும், நினைவுப் பொருட்களும் திரட்டி வைக்கப் பட்டுள்ளன. அன்பளிப்பாகப் பெறப்பட்ட நினைவுப் பொருட்கள் அவை. பழைய புகைப்படங்கள், நூல் பதிப்புகள், அச்சிடப்பட்ட இலக்கியங்கள், புத்தகங்கள், பட்டியல்கள், நாட்குறிப்புகள், கடிதங்கள் முதலானவை அவற்றுள் அடங்கும்.

சிங்கப்பூர் இந்திய - முஸ்லிம் முன்னோடிகள், வணிகர்கள், கொடையாளர்கள், தலைவர்களின் வரலாற்றையும், கலாசாரத்தையும் எடுத்துரைக்கும் காட்சிக் கூடமாகவும், நாகூர் தர்கா மரபுடைமை நிலையம் விளக்குகிறது.

மரபுடைமை நிலைய உணவகத்தில், இந்திய - முஸ்லிம் உணவு வகைகள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் அவற்றை சுவைத்து மகிழ்வதற்கு வசதியாக, விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில், நாகூரில் அமைந்துள்ள தர்காவின் பாணியில், அதே தோற்றப் பொலிவுடன் இந்த தர்கா உருவாக்கப்பட்டது. அந்நாளில் தொழுகை இடமாகவும், இது விளங்கி வந்தது. ஒரே வீதியில், சம காலத்தில், இந்திய - முஸ்லிம் சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட நாகூர் தர்காவும், அல் அப்ரா பள்ளிவாசலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டுமே தேசிய நினைவுச் சின்னங்களாகத் திகழ்கின்றன.

மஸ்ஜித் ஜாமியா சூலியா (சோழிய முஸ்லிம் பள்ளிவாசல்) என, அனைத்து சிங்கப்பூர் வாசிகளாலும் அழைக்கப்படும் சவுத் பிரிட்ஜ் ரோடு பள்ளிவாசலும், அந்த காலக் கட்டத்தில் உருவானதே.

நாகூர் தர்கா, நவ., 29, 1974ல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தேசிய வரலாற்றுச் சின்னங்களை நினைவு கூரும் அஞ்சல் தலைகள் வரிசையில், நாகூர் தர்கா இடம் பெற்றது. தர்காவின் முகப்புத் தோற்றம் கொண்ட ஒரு வெள்ளி மதிப்புள்ள, அஞ்சல் தலை ஜூலை 7, 1989ல், விற்பனைக்கு வந்தது.

***

ஜே.எம்.சாலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us