PUBLISHED ON : மார் 02, 2014

அவசர அவசரமாகத் தன்னுடைய தோள் பையில் துணிகளையும், ஏனைய பொருட்களையும் அடைத்துக் கொண்டிருந்தாள் அருணா. ஊரில் எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்று தெரியவில்லை.
'அம்மாவ ஐ.சி.யு.,வில் சேர்த்திருக்கிறோம். உடனே புறப்பட்டு வா...' என்ற, தங்கையின் மொபைல் அழைப்பைக் கேட்டு, புறப்பட்டு கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு என்ன என்று தெரியாத கவலை, மனதை குடைந்தது.
''ஹாய், எங்கே கிளம்பிட்டு இருக்கே? ஆபீஸ் டூரா?'' என்று, கேட்டுக் கொண்டே வந்தான் மகேஷ்.
''உனக்கு எத்தன தடவ போன் போடறது?''
''வெளிவேலை; சிக்னல் கிடைச்சிருக்காது.''
அவள் விஷயத்தைச் சொன்னாள்; அவன் முகத்தில், துளியும் பதற்றம் இல்லை.
''பணம் வச்சிருக்கியா?''
''இருக்கு.''
''ஓ.கே.,''
''நான் வர்ற வரைக்கும் ஓட்டலிலே சாப்பிட்டுக்கோ.''
''ஓ.கே., உன்னை ட்ராப் செய்றேன்.''
''சரி,'' என்றாள்.
உணவு பொட்டலங்களை வாங்கிக் கொடுத்து, பஸ் ஏற்றி விட்டான்.
''ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா தயங்காம கேளு.''
''உன்னத் தவிர, வேற யார் கிட்ட கேட்பேன் மகேஷ்,” என்று, அவள் சொன்னதும் சிரித்தான்.
''குட்!”
ஜன்னலோர இருக்கை என்பதால், 'சிலு சிலு'வென்று காற்று, முன் முடிக்கற்றையைச் சிலுப்பி விட்டு, தாவித்தாவி விளையாடியது. அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. அம்மாவின் நினைவும், மகேஷ் பற்றிய சிந்தனைகளும், வடிவமில்லாத கோடுகளாக ஓடின.
'நான் எதிர்பார்த்த அடைக்கலத்தை மகேஷ் ஏன் எனக்கு கொடுக்கல... அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னதும், ஆறுதலாக, 'அசடே, அழாதே... ஒண்ணும் இருக்காது'ன்னு நெஞ்சோடு அணைத்து, என் வேதனைய அவன் ஏன் தனக்குள் ஒற்றி எடுத்துக்கல... 'உன் கவலை உனக்குன்னு' நினைச்சுட்டானோ... அப்படின்னா, இந்த உறவில்,வேதனைப் பரிமாற்றம், ஏதும் இல்லையோ...' என்று பலவாறாக நினைத்து கொண்டாள்.
அருணாவுக்கு அப்பா இல்லை. அம்மாவும், ஒரு தம்பியும், தங்கையும் இருந்தனர். அவள் தங்கைக்கு அதிக படிப்பில்லை. உள்ளூரிலேயே சின்ன வேலை கிடைத்து, செய்து வருகிறாள். தம்பி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். இவர்களுக்கு அம்மா துணை.
'என் தங்கை சுகுணாவுக்கு வேலை கிடைச்சிருக்கு...'என்று, மகேஷிடம் கூறியபோது, 'குட்... எப்ப ட்ரீட் தரே?' என்றான்.
பெரிய ஓட்டலில் விருந்துண்டு, சினிமா பார்த்தனர். அந்த வருமானம், அவள் குடும்பத்திற்கு எத்தனை தூரம் உதவியாக இருக்கும் என்றோ, தம்பி, தங்கையின் வருங்காலம் என்ன என்றோ, அவன் மூக்கை நுழைக்கவில்லை.
அருணாவுக்கும், மகேஷுக்கும் தொழில் ரீதியான சந்திப்புத்தான் ஆரம்பத்தில் ஏற்பட்டது. சின்னச் சின்ன சந்திப்புக்கள், நட்பு என்ற எல்லை தாண்டி வலிமை பெற்றது. சதா, அவன் நினைவுகள் நெஞ்சில் அலை மோதியது. அவனுடைய இதழ் கடை சிரிப்பு, வேடிக்கையாகச் சீண்டும் சீண்டல்கள், விளையாட்டுத்தனம், கோபம் வராத குணம், அவளை வசீகரித்தது.
காதல், திருமணம் என்று எதுவுமே பேசாத நிலையில், அவனுக்கு டைபாய்ட் ஜுரம் வந்தது. அவன் தனியாக, ஓர் அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்தான். அம்மா, அப்பா கிராமத்தில்; ஒரே மகன்.
'அருணா, உதவிக்கு வருவியா?'என்றான்.
ஓடி வந்தாள், பத்து நாட்கள் அவனைக் கண்ணில் வைத்து, இமையில் மூடினாள் என்று சொல்லலாம்.
'அருணா, நீ எதுக்கு தனியா இருக்கே, இங்கேயே வந்துடு. வாடகை, மற்ற எல்லா செலவுகளையும், இருவரும் பகிர்ந்துக்கலாம்...'என்றான்.
அவள் யோசித்தாள்; அவள் குடும்பத்திற்கு, இதனால் கொஞ்சம் பணவசதி கிடைக்கும் என்று தோன்றியது. ஆனால், 'இது சரியாக வருமா...' என்று, தோழிகளைக் கேட்டாள்.
'சரிப்படலேன்னா பிரிஞ்சுட்டாப் போறது...' என்றனர் சிலர்.
அவள் தோழிகளில் சிலர், இப்படிப்பட்ட தோழமை உறவில் தங்கி இருப்பது தெரிந்தது; அவளும் தங்கினாள். பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொண்டது; புது அனுபவம், பயத்துடன் கண்ணீர் விட வைத்தது. 'சேர்ந்து வாழுதல் என்பது இப்போது சகஜம்' என்று, சக தோழிகள் சமாதானப்படுத்தினர்.
இந்த வாழ்க்கையில் என்ன லாபம்... எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் பாதிப்பாதி. பிடிக்கலை, மனம் ஒட்டலைன்னா பிரிந்து போயிடலாம். சீர் செனத்தி வரதட்சண என்ற கவலை இல்லாத வாழ்க்கை. நமக்கு பிடித்த வேற யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். வாழ்க்கையோட இறுதிவரை ஓடி, கணவன், பிள்ளைக நிழலில் களைப்பாறும் கட்டாயமில்லை. சுதந்திரப் பறவையாகி விடலாம்.
'ஆனாலும், சாப்பிட்ட பின் தூக்கி எறியும் இலை போன்ற இந்த உறவில், உறவுகள் பின்னிப் படரப் போறதில்ல. என் குழந்தைகளுக்கு அத்தை மகன், மாமன் மகன், மாமன் மகள் என்ற உறவு முறைகள் தொடராது...' என்னென்னவோ நினைவுகள், அவள் மனதில் தோன்றி, முள்ளாக நிரடியது.
அவள் ஊர் போய் சேர்ந்த போது, அம்மா அபாயக் கட்டத்தைத் தாண்டி இருந்தாள்.
'ஜாக்கிரதையாய் இருங்க. உங்க இதயம் பலவீனமா இருக்கிறதோட, ரத்தக் கொதிப்பும் இருக்கு. ஒரு மாதம் நல்லா ரெஸ்ட் எடுக்கணும்...' என்று, டாக்டர் கூறிய அறிவுரைகளுடன், வீடு வந்து சேர்ந்தனர்.
வீடு வந்ததுமே, அம்மா ஆரம்பித்து விட்டாள்...
''அருணா... எப்ப கல்யாணம் செய்துக்கப் போறே?”
அருணா எதிர்பார்த்த கேள்விதான்.
''அம்மா.... தம்பி ஒரு வேலைக்குப் போன பின்னாலே, நான் கல்யாணம் செய்துக்றேனே,'' என்றாள்.
அப்போதைக்கு அம்மாவின் வாயை அடைத்து விட்டாலும், அருணாவின் மனதில் தங்கை சுகுணாவிற்கு, முதலில் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து கொண்டாள்.
சென்னைக்கு திரும்பி விட்டாள் அருணா. அவளை வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றான் மகேஷ். கையில் காபியுடன், அவன் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டாள்.
''மகேஷ், அம்மா அவசரப்படறாங்க. நம்ம கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்.''
மகேஷின் புருவங்கள் கூடி முடிச்சிட்டன.
''அதுக்கு ஒண்ணும் அவசரமில்ல. இப்போ இந்த வாழ்க்கைக்கு என்ன கொறச்சல்? ஜாக்கிரதயாகவே இருக்கோம். பிக்குப் பிடுங்கல் இல்லாத ஜாலி லைப். அப்பறம் அருணா நீ இல்லாத போது, பானு இங்க வந்து நாலைஞ்சு நாள் தங்கிட்டுப் போனா,'' என்றான். இது, அருணாவின் மனதில், அபாய சங்கை ஊதியது. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது என்று கிளம்பிப் போய் விட்டான் மகேஷ்.
குளிக்கும் போது தலையில் தண்ணீரை விட்டுக் கொண்ட அருணாவிற்கு, மகேஷ் கூறிய செய்தி, வண்டாய் மனதை குடைந்தது.
சற்று தாமதமாகவே அலுவலகம் கிளம்பினாள் அருணா. வேலை ஓடாமல் தன்னுடைய அந்தரங்கம் அறிந்த மீராவிடம், மனம் திறந்து கொட்டினாள்.
''தப்பு செய்துட்டேன் மீரா.”
''இது ஒண்ணும் தப்பு இல்ல அருணா; பிடிக்கலைன்னா விலகிடு.”
''எப்படி மீரா, நினைச்சா உறவ துண்டிச்சுக்க முடியுமா? எங்கம்மாவோட, அத்தைக்கு ஒன்பது வயசுல கல்யாணம்; பதினொரு வயசுல விதவையாய்ட்டாங்க. கணவன் வீட்டுக்கே போகாம விதவை. சாகற வயசு வரை கன்னியாகவே இருந்தாங்க. ஆனா, நானோ... சேச்சே!''
''இங்க பாரு அருணா... இது அந்தக் காலம் இல்ல. பொண்ணுங்க பொருளாதார சுமையைச் சுமக்கற காலம். இந்தக் காலத்துல ஆம்பளைங்களை விட பெண்ணுக்குத்தான் படிப்பு, கல்யாணம்ன்னு, செலவு அதிகம். இதனால, சில பெத்தவங்களால பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்க முடியறதுல்ல. பெண்களா சம்பாதிச்சுக் கல்யாணம் செய்துக்க வேண்டிய நிர்பந்தம். ஆணைச் சாராமல், தனித்து நின்று பறக்கும் பறவையாக பெண்கள் இருக்கறாங்க இது, காலத்தின் கட்டாயம்,” என்றாள் மீரா.
மீரா சொல்வது போல், நிறையப் பெண்கள் இப்படித்தான் இருக்கின்றனரோ! அருணாவுக்கு குழப்பமே மிஞ்சியது.
அந்த விபத்து எப்படி நடந்தது என்று அருணாவுக்குத் தெரியவில்லை. மருத்துவமனையில் படுத்திருந்தாள். காலில் பெரிய, 'பாண்டேஜ்' போடப்பட்டிருந்தது. அம்மாவிற்கு உடம்பு சரியில்லாததினால் வர முடியவில்லை. மருத்துவமனையில், தங்கை சுகுணா மட்டும், துணைக்கு இருந்தாள். தம்பிக்கு பரீட்சை சமயம். அவனும் வரவில்லை.
'மகேஷ் வரவில்லையே...' என்று, நினைத்தாள் அருணா.
''சுகுணா, என்னைப் பார்க்க யார் யாரு வந்தாங்க?'' என்று கேட்டாள்.
''உன் அலுவலகத்திலேர்ந்து எல்லாரும் வந்தாங்க. மீராதான் ரொம்ப உதவி செய்தாங்க. மகேஷ்ன்னு ஒருத்தர் ரெண்டு தடவை வந்தார்,'' என்றாள்.
ஒரு மாதம் போல, படுக்கையில் கிடந்த அருணா, மருத்துவமனைக்குள் தள்ளுவண்டியில் வலம் வர ஆரம்பித்தாள்.
அன்று, ஓட்டலில் சாப்பாடு வாங்கி வர போயிருந்தாள் சுகுணா. மகேஷ் வந்தான்; தன்னைப் பார்த்ததுமே துடித்துப் போவான் என்று எண்ணினாள். ஆனால், அவனோ, ''உடம்பப் பார்த்துக்க. கொஞ்சம் சாய்த்துதான் நடப்பேன்னு டாக்டரு சொன்னாரு. உன் சாமான்களை எல்லாம், 'பாக்' செய்து வச்சுட்டேன். நல்லா ஆனப்புறம் வந்து எடுத்துக்க. என் வீட்ல பானு வந்து தங்கப் போறா,” என்று, வெகு சாதாரணமாக கூறி, சென்று விட்டான் மகேஷ். அழுகையை அடக்க முடியவில்லை.
சுகுணா இன்னும் வரவில்லை. எதிர் அறையில் உள்ள முதியவர். தன் மனைவியைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தார். குளியலறையில் விழுந்து இடுப்பு, எலும்பு விலகி, இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறாள்.
அருணாவிடம், ''என்னம்மா... எப்படி இருக்கே?” என்று, விசாரித்தார் அப்பெரியவர்.
''ம்... இப்ப பரவாயில்லை. ஆமா, நீங்களே இங்கே இருக்கீங்களே... மகன், மகள்ன்னு யாரும் தங்க மாட்டாங்களா,” என்றாள் அருணா.
''மகன், மகள், மருமகன், பொண்ணுன்னு எல்லாரும் வந்து பாத்துட்டு, போட்டி போட்டுட்டு சாப்பாடு கொண்டு வராங்க. 'வயசான காலத்துல ஏன் கஷ்டப்படுறீங்க... வீட்ல ரெஸ்ட் எடுங்க நாங்க பார்த்துக்கிறோம்'ன்னு பிள்ளைங்க சொல்றாங்க. அம்பது வருஷம் சேர்ந்து வாழ்ந்துட்டோம். இங்கே இவளை விட்டுட்டு வீட்ல எப்படிம்மா நிம்மதியா இருப்பேன்... இதே போல் நான் விழுந்திருந்தா, இவ வீட்டுல நிம்மதியா இருப்பாளா,'' என்றார்.
அவரின் கண்களில், துளிர்ந்த நீரையே பார்த்தாள் அருணா. இதுதான் பந்த, பாசமா... அவர் அறைக்குள் போய், மனைவிக்கு சாப்பாடு ஊட்டுவது தெரிந்தது.
அருணாவிற்கு இன்னும் சாப்பாடு வரவில்லை. நினைவுகள் எங்கெங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தன. மகேஷோடு வாழ்ந்த வாழ்க்கையில், எதை நினைச்சுப் பெருமைப்பட முடியும்? இதோ இப்போது வரை வாழ்ந்து, முறித்துக் கொண்டு போன இந்த உறவில், நான் விதவையா, விவாகரத்து ஆனவளா? பூச்செடிகளில் மலர்கள், தானே மலர்வது வழக்கம். பெண்களுக்கு மட்டும்தானே, இன்னொரு உயிர் என்ற மலர்களை மலரும் பாக்கியத்தை கடவுள் கொடுத்திருக்கிறான். அப்படி மலர்கள் மலர்ந்தால்தானே தலைமுறைகள், வம்சாவளிகள் உறவுச் சங்கிலிகளால் பிணைக்கப்படும்! தாய்மையை வெறுத்து, தடைசெய்து ஓடி, கடைசியில் சாதிக்கப் போவது என்ன!
''ஏம்மா... இன்னும் சாப்பாடு வரலையா... ரொம்ப நேரமாச்சே. பொண்ணும், மருமகள்களும் போட்டி போட்டுட்டு சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க, இந்தாம்மா சாப்பிடு,'' என்று, முதியவர் சாப்பாட்டை நீட்ட, தான் இழந்தது என்ன என்பது புரிந்தது
அருணாவிற்கு!
லட்சுமி ராஜரத்னம்

