
ஜி.ப்ரியா, கோவை: நான் காலையில் வேலைக்குச் செல்லும் போது, புட்போர்டில் நிற்கும் கல்லூரி மாணவர்கள், என்னிடம், அவர்களுடைய நோட்டுகளை கொடுக்கின்றனர். இதை பஸ்சில் பயணம் செய்பவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர். நான் மாணவர்களுக்கு உதவுவதை நிறுத்தலாமா அல்லது சக பயணிகளின் ஒரு மாதிரியான பார்வையை தவிர்த்து விடலாமா?
மாணவர்கள் நோட்டு புத்தகம் தருவதோடு நின்றால், தொடர்ந்து உதவி செய்து, 'ஒரு மாதிரியான' பார்வையைத் தவிருங்கள்; நோட்டுப் புத்தகம், லெட்டர் அடங்கிய கவராக மாறும் போது உஷாராகுங்கள்!
எம்.ராதா, திருவொற்றியூர்: எதிர்பார்ப்புகளே இல்லை என்றால், ஏமாற்றங்கள் இருக்காது அல்லவா?
எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை சலித்து விடும். முழுமையான வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் ஏமாற்றங்களையும் சந்தித்தேயாக வேண்டும்!
என்.ரேணுகாதேவி, நெய்வேலி: பெண்களை நேருக்கு நேர் பார்ப்பவன் சிறந்தவனா? சென்றபின் பார்ப்பவனா அல்லது பார்க்காமலேயே செல்பவன் சிறந்தவனா?
பார்க்காமலேயே செல்பவன் கூச்ச சுபாவம் உள்ளவன்; பயந்தவன். சென்ற பின் பார்ப்பவன் திருடன்; கண்ணை நேருக்கு நேர் நோக்குபவனைப் பற்றி, இப்போது தெரிந்திருக்குமே!
சி.சரத்சந்தர், அம்பாசமுத்திரம்: ப்ரீயா பேசினா ஓட்டவாயன்; அளந்து பேசினா உம்மணா மூஞ்சி என்கின்றனரே...
பேசாமலே இருந்தால், 'அமுக்கன்' என்பர். நம்ம ஜனங்கள் சூட்டும் நாமகரணங்களுக்கு அளவேது சுவாமி? நீங்கள் நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள். அவன்
சொன்னான், இவன் சொன்னான் என்பதற்காக, ஒவ்வொரு அரை வினாடியிலும், உங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?
கே.பாலசரஸ்வதி, திண்டுக்கல்: பெண்களுக்கு எது அடக்கமான உடை?
சந்தேகமில்லாமல் சுரிதார் தான். வட இந்திய பெண்கள் போல் அல்லாமல், நம்மூர் இளம் பெண்கள் குர்தா மீது துப்பட்டா அணிவதில்லை. துப்பட்டாவும் போட்டுக் கொண்டால், சுரிதாரை விட அடக்கமான டிரஸ் ஏது!
எஸ்.ரஞ்சிதா, புரசைவாக்கம்: படித்த பெண், படிக்காத பெண் - இவர்களில் யாரை விரும்புகின்றனர் இந்தக் கால மணமாகாத இளைஞர்கள்?
இவை இரண்டையும் விட, சம்பாதிக்கும் பெண்ணிடம் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்!
ஆர்.மதனா, சென்னை: நான் கலெக்டராக விரும்புகிறேன்; ஆவேன். அப்போது, நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை இப்போதே அறிந்து கொள்ளலாமா?
குர்னிகால் சிங் என்று, ஒரு கலெக்டர் இருந்தார். அஞ்சா நெஞ்சர்! வட்டம், மாவட்டம், தோள் துண்டுகள் எதற்கும் மசியாதவர். அடாவடிப் பேர்வழிகளுக்கு, 'சிங்'கின் பெயரைக் கேட்டாலே, 'பர்கோலக்ஸ்' சாப்பிட்டது போலாகி விடும். தன் பதவி பறி போனாலும், தனக்கு அளிக்கப்பட்ட கடமையை நிறைவாக செய்ய வேண்டும் என்ற, மன உறுதி கொண்டவர். நீங்கள் ஒரு பெண் குர்னிகால் சிங்காக இருப்பீர்களா?

