
'மணி... உனக்கு ஒரு வாரம் அண்ணா சாலை ஆபீஸ்ல, 'டியூட்டி!' ஆசிரியரின் உதவியாளர் லீவு. அதனால் இங்கு வந்து வேலையப் பாரு; எழும்பூர் ஆபீஸ் போக வேண்டாம்...' என, எச்.ஆர்., உத்தரவு பிறப்பிக்கவே, உற்சாகமானேன். ஆசிரியரின் நேரடிப் பார்வையில், ஒரு வாரம் வேலை செய்யப் போகிறோம் என்பதால், உற்சாகமாக இருந்தது.
ஆசிரியரின், 'ரூம்' முழுக்க புத்தகங்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள்... அவற்றை அடுக்கி துடைத்து வைக்கும் சாக்கில், ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டாத, 'சப்ஜெக்ட்'களில். எட்டாத மொழி நடையில்... பெரும்பாலும், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள் குறித்தும், உலகமெங்கும் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள் பற்றியும் தடிமனான புத்தகங்களாக இருந்தன.
'டூட்டி'யின் மூன்றாவது நாள்...
ஆபீசுக்கு கொஞ்சம் லேட்... நான்!
பரபரப்பாக, ஆசிரியரின் அறையில் நுழைந்து, ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, வண்ணமயமான சஞ்சிகை ஒன்று கண்ணில் பட்டது. அதன் தலைப்பை எழுத்துக் கூட்டிப் படித்தேன். 'ஆர்சியியோ லோஜி' என, படிக்க முடிந்தது. ஆனால், அந்த உச்சரிப்பு தப்பு எனப் புரிந்த அதே கணம், தொல்பொருள் ஆராய்ச்சி குறித்து, பேசும் போதெல்லாம், 'ஆர்கியாலஜி' என லென்ஸ் மாமா கூறுவதும் நினைவிற்கு வந்தது.
புத்தகத்தை புரட்டிக் கொண்டே இருந்தேன்... விதவிதமான படங்கள்! நான் இருக்கும் இடம் எது என்பதை மறந்து, குத்துக்காலிட்டு தரையில் அமர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
'வேல்ட்ஸ் ஒல்டஸ்ட் டு ரோடு!' - உலகத்திலேயே மிகப் பழமையான சாலை... என்ற தலைப்பில், படத்துடன் ஒரு கட்டுரை!
அதை படித்து, தெரிந்து கொண்டே விடுவது என்ற வேகத்தில் எழுத்துக் கூட்ட ஆரம்பித்தேன்... 4,600 இயர்ஸ் ஓல்டு, அதாவது, 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாலை என்பது தான் புரிந்ததே அன்றி, மற்ற விஷயங்கள் ஏற மறுத்தது...
அதே நேரம் —
அறையின் கதவு திறக்கப்பட்டது.
உள்ளே நுழைந்தார் ஆசிரியர்.
பயந்து எழுந்தேன் நான்!
ஆனால், ஆசிரியரோ புன்முறுவலுடன், 'என்ன மணி... உனக்கும் தொல் பொருள் ஆராய்ச்சி மீதெல்லாம் நாட்டம் உண்டா?' எனக் கேட்கவும், பதில் என்ன சொல்வதென்று தயங்கி, 'திருதிரு' வென விழித்தேன்.
'எங்கிட்டே குடு, அந்த புஸ்தகத்தை... எதைப் பற்றி படிக்கிறேன்னு பார்க்கிறேன்...' என்றார்.
நடுங்கும் கைகளுடன், புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
புத்தகத்தை வாங்கிப் படித்தவர், 'ஓ' என்றபடி, புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார். தொடர்ந்து, 'படிச்சியா, புரிந்ததா?' எனக் கேட்டார்.
'புரியவில்லை' என்பது போல, தலையாட்டி வைத்தேன்.
அவரே கூற ஆரம்பித்தார்...
'எகிப்து நாட்டில் இந்த சாலையை கண்டுபிடித்து இருக்கின்றனர். அமெரிக்க நாட்டு டொலேடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், கெய்ரோ நகரின் தெற்கே, 70 கி.மீ., தொலைவில் இந்த சாலையை கண்டு பிடித்துள்ளனர். இந்த சாலை, 12.8 கி.மீ., நீளத்திற்கு உள்ளதாம்!
'சுண்ணாம்பு மற்றும் சேண்ட் ஸ்டோன் ஆகியவற்றின் ஸ்லாப்புகளால், சுண்ணாம்பு சேர்த்து பூசப்படாமல் சாலையை அமைத்திருக்கின்றனர். ஒரு இடத்தில் கல்லாக மாறிய மரத்தாலும் அமைத்துள்ளனர். 'பசால்ட்' எனப்படும் கற்களை (நம்மூர் கருங்கல் மற்றும் சிவப்பு கற்கள் போல...) குவாரிகளில் இருந்து பெரும், பெரும் பாறைகளாக வெட்டி எடுத்து சக்கரமில்லா வண்டிகளில் வைத்து, அதை படகுகளில் ஏற்றி, ஏற்றுமதி செய்ய நதிக் கரைகளுக்கு இழுத்து வந்துள்ளனர்.
இதற்கு முன்பே, 1905ல் இந்த சாலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருந்தாலும், இப்போது தான் இதற்கான வரைபடத்தை தயாரித்து உள்ளனர். அத்துடன், 'பசால்ட்' சுரங்கங்களையும், அங்கு வேலை செய்தவர்களின் வீடுகளையும், அவர்கள் உபயோகித்த மட்பாண்டங்களையும் கண்டுபிடித்துள்ளனர். கிறிஸ்துவுக்கு முன், 2600 - 2300ம் ஆண்டுகளில் வாழ்ந்த எகிப்திய அரசனின் காலத்தவை இந்த கற்சுரங்கங்கள்...' எனக் கூறி, என் முகத்தைப் பார்த்தார்.
கற்பனையில், 4,600 வருடங்களுக்கு முந்தைய காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான், நிகழ்காலத்திற்கு வந்தேன்.
'உனக்கு என்ன புத்தகம் தேவையோ, கேட்டு வாங்கிக் கொள். தேவையான விளக்கங்களை நான் தருகிறேன்...' என்றார் ஆசிரியர்.
நன்றி கூறி வெளியே வந்த நான், லென்ஸ் மாமாவிடம் விஷயத்தைக் கூறினேன்.
செம கடுப்பில் இருக்கிறார்; ஆசிரியருக்கு நான் சோப்புப் போட்டு விட்டேனாம்!
'மக்கள் தொகையை கட்டுப்படுத்த இங்கே, நாம் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கும் போது, மக்கள் தொகையை அதிகப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அரசு.
ஆஸ்திரேலியா, நிலப்பரப்பில் நம்மை விட, பல மடங்கு பெரிய நாடு. இந்தியா, 32 லட்சத்து 87 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது; ஆஸ்திரேலியா, 77 லட்சத்து 13 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.
நமது ஜனத்தொகை, 121 கோடி; ஆஸ்திரேலியா விலோ, 16 கோடி தான். ஆஸ்திரேலிய ஆண்களில் பலர், என்ன காரணத்தாலோ குழந்தை கொடுக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனர். எனவே, அந்நாட்டின் பல நகரங்களிலும், 'விந்து வங்கிகள்' வேகமாக திறக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று, இவ்வித, 'விந்து வங்கிகள்' பற்றி, விரிவாகக் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. உ.ஆ., ஒருவரின் உதவியுடன் படித்த போது, கிடைத்த தகவல்கள்:
'பெர்டிலிட்டி சொசைட்டி ஆப் ஆஸ்திரேலியா' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர் டாக்டர் ஜான் மக்பெயின். நாட்டில் உள்ள, 'தகுதி' படைத்த, 'டொனர்'களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்:
உங்கள் நாட்டிற்கு, உங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு, உங்கள் உதவி தேவை. 18 முதல் 45 வயது உடைய ஆண்களே... உங்களது, 'விந்து'வை தானம் செய்யுங்கள்; வெட்கப்படாதீர்கள். நீங்கள் செய்யும் தானத்தால், ஆஸ்திரேலிய சமூகம் வளர்ச்சி அடையும்.
குழந்தையில்லாமல் கவலையும், துன்பமும், அவப்பெயரும் பெற்ற தம்பதிகளுக்கு, உங்களால் சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் கொடுக்க முடியும்.
ஆஸ்திரேலியாவில், 10 ஆண்களில் ஒருவர் என்ற கணக்கில், மலட்டுத்தன்மை பெருகி வருகிறது. பிறக்கும், 250 குழந்தையில் ஒன்று செயற்கை முறையில் கருவூட்டப்பட்டு பிறக்கிறது. வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் சட்டம், ஐரோப்பிய நாடுகளைப் போல அல்லாமல் ஆஸ்திரேலியாவில் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
எனவே, செயற்கையாக கருவூட்டும் முறையை பலரும் இப்போது நாட ஆரம்பித்துள்ளனர்; ஆனால், 'விந்து' தானம் கொடுப்போர் நம் நாட்டில் குறைந்து வருகின்றனர். இதற்கு கூச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், 'நாம் கொடுத்த உயிர், எங்கோ, எப்படியோ முகம் தெரியாமல் வாழுமே!' என்ற பாசம் கலந்த எண்ணமும் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால், பிள்ளை பேறு இல்லாத தம்பதிகள், செயற்கை முறை கருவூட்டல் பெற, நீண்டநாள் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலையும் தோன்றியுள்ளது.
நம் நாட்டில் விக்டோரியா மாநிலம் தான் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மாநிலம் முழுவதற்குமே 40 பேர் தான் விந்து வங்கிகளில் பெயர் பதிவு செய்துள்ளனர்; ஆனால், செயற்கை கருவூட்டலுக்காக காத்திருக்கும் தம்பதிகளின் எண்ணிக்கையோ, 300க்கும் மேல். ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை, இவர்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ளது.
நாடு வளர, மக்கள் சக்தி தேவை. நீங்கள் கொடுக்கும் உயிர், நாட்டையே ஆளும் பிரதமராகக் கூட வரலாம்! எனவே, சுயநலம் இல்லாத இந்த தேசப் பணிக்கு உதவுங்கள், என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தானம் கொடுக்க விரும்புபவர்களுக்கு, 'எய்ட்ஸ்' போன்ற நோய் இருக்கிறதா என, முதலில் சோதனை செய்கின்றனர். பின்னர் அவரது, 'விந்து'வில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுகின்றனர். எவ்வித குறையும் இல்லாத பட்சத்தில், தானம் கொடுப்பவர் மீண்டும் மீண்டும், அழைக்கப்படுகிறார்.
இந்த தானத்திற்கு பண உதவி ஏதும் கொடுப்பதில்லை; போக்குவரத்து கட்டணம், அதுவும், தானம் செய்பவர் விருப்பப்பட்டால் மட்டும் அளிக்கின்றனர்.
— பிரச்னைகளின் பரிமாணங்கள் நாட்டுக்கு நாடு எதிர், எதிர் திசையில் இருப்பதைப் பார்த்தீர்களா?

