/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (22) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : மார் 02, 2014

சிவாஜியிடம் உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு, தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பார். ஆனால், கடைசியில் ஏதாவது ஒரு புதுமை செய்து, பார்ப்பவர்களின் மொத்த கவனத்தையும், தன் பக்கம் இழுத்து விடுவார். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். பாசமலர் படத்தில், சிவாஜி கம்பெனி முதலாளி; அவரிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்காக சண்டை போடும் ஜெமினி கணேசன், கேள்வி மேல கேள்வி கேட்பார். பதிலுக்கு எதுவும் பேசாமல், ஒரு பென்சிலை கத்தியால் சீவிக் கொண்டே இருப்பார் சிவாஜி. ஜெமினி பேசப் பேச, சிவாஜிக்கு கோபம் அதிகமாகும். ஆனால், எதுவும் பேசாமல், பென்சிலை சீவுவதிலேயே கவனமாக இருப்பார். ஆனால், ஜெமினி கணேசன் பேசி முடித்ததும், கோபமாக அவரைப் பார்த்து, 'வெளியே போ... தொழிற்சாலையை இழுத்து மூடினாலும், ஒரு மெழுகுவர்த்தி வச்சு, இந்த ராஜூ வேலை செய்வான்...' என்று, ஒரே வரி வசனம் மட்டும் பேசுவார்; தியேட்டரே அதிரும்.
மற்றொரு காட்சியில், சிவாஜி வீட்டுக்கு வருவார். தோட்டத்திலே, அவரது தங்கை சாவித்திரியும், காதலன் ஜெமினி கணேசனும் பேசிக் கொண்டிருப்பர். பணக்காரருக்குரிய ஆணவத்தில், பீரோவிலிருந்து ரிவால்வரை எடுத்துக் கொண்டு, ஆவேசத்துடன் வேகமாக வருவார் சிவாஜி. அப்போது, ஜெமினியிடம், 'எங்க அண்ணாவை எதிர்த்து தான், வாழ்க்கை நடத்தணும்ன்னா, அந்த வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை. அவரோட முழு சம்மதத்தோடு, ஆசிர்வாதத்தோடு, நாம் சேருவதை தான், நான் ஒத்துக் கொள்வேன்...' என்று, சாவித்திரி சொல்வதை கேட்பார். பாசத்தில் கண்ணீர் வழியும்.
தான் கொண்டு வந்த ரிவால்வரை வைத்து, கண்ணீரை துடைக்கும் அந்த, ஒரு காட்சியிலேயே, தன் மன ஓட்டத்தை அழுத்தமாக காட்டியிருப்பார்.
சிவாஜியை பற்றி, குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம்... அவர் நடித்த பல படங்கள், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். தன்னை விட கதாநாயகிக்கு தான், முக்கியத்துவம் அதிகம் என்று தெரிந்தும், முழு மனதோடு, நடிக்க ஒப்புக் கொள்வார்.
அந்த வரிசையில், கை கொடுத்த தெய்வம், படம் முழுக்க முழுக்க நடிகை சாவித்திரியின் படம். அந்த மாதிரி படங்களிலும், தன் தனித்தன்மையை காண்பித்து, ஆடியன்சை, தன் பக்கம் திருப்பி விடுவார் சிவாஜி. இப்படத்திற்கு, கதை, வசனம், எழுதி, பிரமாதமாக இயக்கியிருப்பார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நடிகை சாவித்திரிக்கு, நானும் மிகப் பெரிய விசிறி. என் மகள் மதுவந்தியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிவாஜியை அழைக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். 'யார்ரா அந்த அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளை?' என்றார்.
'நடிகை சாவித்திரியின் பேரன்...' என்றேன். சிவாஜியின் முகம் மலர்ந்து, 'ஓ, அப்படியா வெரி குட்...' என்றார். தேதியை சொன்னதும், 'என்னடா இது, இப்படி செய்துட்டே... அன்னிக்கு, நான் தஞ்சாவூரிலே இருக்கிறனேடா...' என்றார். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கண்டிப்பாக பங்ஷனுக்கு வர்றீங்க...' என்று, உரிமையுடன் சொல்லி விட்டு, கிளம்பினேன்.
நிச்சயதார்த்த விழா விற்கு, தஞ்சாவூரிலிருந்து, காரிலேயே சென்னைக்கு வந்து, தன் வீட்டிற்கு கூட போகாமல், நேராக விழாவிற்கு வந்து விட்டனர் சிவாஜியும், அவரது மனைவி கமலா அம்மாவும். விழா முடியும் வரை, அங்கேயே இருந்து மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த, 1964ல் ஏ.பி.நாகராஜனின் இயக்கத் தில், சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்த, நவராத்திரி திரைப்படம் வெளியானது. நடிப்பில், முகபாவத்தில், பல கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி காண்பித்திருப்பார் சிவாஜி. சாவித்திரியை கைது செய்து, மருத்துவமனைக்கு அழைத்து வரும் காட்சியில், சிவாஜி மனநோய் மருத்துவராக வருவார்.
இரண்டு கைகளையும் பின்புறம் கட்டி, மெதுவாக நடந்து செல்லும் சிவாஜி, கருணை சிரிப்போடு, ஒரு நிலையில் நிற்பார்; பின் திரும்பி வருவார். மேஜை மீது இருக்கும் ஸ்டெதஸ்கோப்பை லாவகமாக எடுத்து கழுத்தில் மாட்டி, திரும்பி போவார். அதாவது, வந்திருக்கும் பேஷன்ட் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல, நல்ல நிலையில் இருப்பவர் தான் என்பதை, டயலாக் எதுவும் பேசாமல், தன் நடையாலேயே வெளிப்படுத்தி, ரசிகர்களின் கைத் தட்டலை வாங்கி விடுவார்.
சிவாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் மேஜர் சுந்தர்ராஜன். அவர் மேடையில் நடித்த ஞான ஒளி, கல்தூண் போன்ற நாடகங்கள், பின் சிவாஜி நடிப்பில், வெற்றிப் படங்களாக ஆகியிருக்கின்றன. சிவாஜியுடன் உயர்ந்த மனிதன், ஞான ஒளி மற்றும் பாரத விலாஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைவராக, சிவாஜி கணேசன், பணி ஆற்றிய போது, அவருக்கு வலது கரமாக, நடிகர் சங்கத்தின் காரியதரிசியாக பணி ஆற்றியிருக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். நடிகர் சங்கத்திற்கு, சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில், இடம் வாங்கி, கட்டடம் கட்டி, அதில், நாடக அரங்கு, சிறிய தியேட்டர் எல்லாம் உருவாக சிவாஜியும், மேஜரும், விகே.ராமசாமியும் முக்கிய காரணகர்த்தாக்கள். இப்போது, கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நடிகர் சங்க இடம் வெறிச்சோடி இருக்கிறது என்பது, எல்லா நடிகர், நடிகைகளுக்கும் வருத்தம் தரக் கூடிய விஷயம்.
— தொடரும்.
எஸ்.ரஜத்