sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நாடு சுற்றலாம் வாங்க! (4)

/

நாடு சுற்றலாம் வாங்க! (4)

நாடு சுற்றலாம் வாங்க! (4)

நாடு சுற்றலாம் வாங்க! (4)


PUBLISHED ON : ஏப் 26, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபியின், 'ஷேக் செய்யது கிராண்ட் மசூதி'யில், ஆடை விஷயத்தில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் கைகளை மறைக்கும் அளவிற்கு ஆடை அணிந்து பெண்கள், தலைமுடி தெரியாத அளவிற்கு முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது, விதிமுறையாக உள்ளது. ஆண்களை பொறுத்தவரை, நாகரிகமான உடை அணிய வேண்டும் என்பதை தவிர, கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.

இந்த விதிமுறைகளை, முந்தைய நாளே, சுற்றுலா வழிகாட்டி சர்புதீன், எங்களுக்கு தெரிவித்திருந்தார். எனவே, எங்கள் குழுவில் உள்ள பெண்கள், முழுக்கை ஸ்வெட்டரும், தலையில், துப்பட்டாவால் முக்காடு போல அணிந்து தயாராகி வந்தனர்.

உள்ளே நுழைந்ததும், அகன்று விரிந்த மிகப்பெரிய மசூதியின் தோற்றம் பிரமிக்க வைத்தது. அங்கிருந்த துாண்களிலும், கூரைகளிலும், சுவர்களிலும் செய்யப்பட்டிருந்த நுட்பமான கலைநயமிக்க வண்ண வேலைப்பாடுகள் அற்புதமாக இருந்தன. மசூதியின் உட்புறம் புகைப்படம் எடுக்க தடை இல்லை என்பதால், ஆங்காங்கே பலர் எடுத்துக் கொண்டிருந்தனர்.

மசூதிக்குள் மிகப்பெரிய கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. ஈரானிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட, 60 ஆயிரத்து 570 சதுர அடி பரப்பளவு கொண்ட, உலகின் மிகப்பெரிய கம்பளம் அது. இந்த கம்பளத்தில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட முடிச்சுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கம்பளத்தை உருவாக்க, 1,250 தொழிலாளர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர்.

மசூதியின் ஒவ்வொரு பகுதியிலும் பார்வையாளர்களை கண்காணித்தபடியே இருந்தனர், காவலர்கள். பெண்கள் அணிந்திருந்த முக்காடு, கவனக்குறைவால், தலைமுடி தெரியும் அளவிற்கு விலகினால், அதை சுட்டிக்காட்டி, சரி செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.

மசூதியை பார்வையிட்ட பின், வாகனத்திலேயே, அபுதாபியின் கடற்கரையை சுற்றி வந்து ரசித்தோம்.

அபுதாபியில், மிக உயரமான பல அடுக்கு கட்டடங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் அமைந்துள்ளன. பல்வேறு அரசு அலுவலகங்கள் இருந்த பகுதியையும், அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் வசிப்பிடத்தையும் தொலைவில் இருந்தபடியே ரசிக்க முடிந்தது.

அபுதாபியை சுற்றி பார்த்து, துபாய் திரும்பும் வழியில், 'பெராரி வேர்ல்டு' எனும் பிரபலமான, 'தீம் பார்க்' உள்ளது.

எங்களுக்கு கால அவகாசம் இல்லாத காரணத்தால், உலகின் மிக வேகமான, 'ரோலர் கோஸ்டர்' அமைக்கப்பட்டுள்ள, 'பெராரி தீம் பார்க்'கை வெளிப்புறத்தில் இருந்தாவது பார்க்க விரும்பினோம்.

சர்புதீனும் அதற்கு ஒப்புக்கொள்ள, ஒரு மணி நேரம் அங்கு அனுமதிக்கப்பட்டோம். அனுமதி சீட்டு வழங்கும் இடம் வரை சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளை சுற்றிப் பார்த்தோம்.

மாலையில், துபாய் வந்தடைந்தோம். வழியில், துபாய் பிரேம் எனப்படும், துபாய் சட்டகம் அமைந்திருந்தது. 492 அடி உயரத்தில், ஒரு போட்டோ பிரேம் வடிவத்தில் கண்ணாடி, இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, துபாயின் அடையாளங்களில் ஒன்று தான், துபாய் சட்டகம். மாலை இருள ஆரம்பித்த பின், அங்கு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என, வித விதமான வண்ணங்களில், மாறி மாறி அந்த சட்டகம் மின் விளக்குகளால் ஒளிர்ந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

வாகன நிறுத்தும் இடத்திலிருந்து, வண்ண விளக்குகளால் மிளிர்ந்து கொண்டிருந்த, துபாய் சட்டகத்தை நாங்கள் ரசித்துக் கொண்டிருந்தபோது, வாண வேடிக்கைகள் ஆரம்பமாயின.

துபாயில், 'ஷாப்பிங் பெஸ்டிவல்' எனும், விற்பனை திருவிழாவையொட்டி, தினமும் இரவில், கண்கவர் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு கொண்டிருந்தன.

மிக பிரமாண்டமான, வண்ண வண்ண வெளிச்ச பூக்களை வானில் சிதறடிக்கும், அரிய வான வேடிக்கைகளை துபாய் சட்டகம் அருகில் இருந்தபடி பார்த்து ரசித்தோம்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, துபாய், தன் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

* துபாயில், சுற்றுலா சென்ற நாட்களிலெல்லாம், குடி தண்ணீர், அதிக விலையுள்ள ஒரு பொருளாகவே இருந்தது. எங்கே தண்ணீர் கேட்டாலும், ஏதோ அவர்களது சொத்தை எழுதி கேட்பது போல பார்த்தனர்.

துபாயில், அரை லிட்டர் தண்ணீர், நம் ஊர் மதிப்பில், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டலில் கூட, ஒருநாளைக்கு, ஒரு நபருக்கு, அரை லிட்டர் தண்ணீர் கொடுக்கின்றனர். அதற்கு மேல் தண்ணீர் வேண்டுமென்றால், அந்த ஓட்டலில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலைக்கு தான் வாங்க வேண்டும்.

ஐக்கிய அரபு எமிரேட்டின் கரன்சி, திர்ஹாம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில், ஒரு திர்ஹாம், 20 ரூபாய்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு செல்வதானால், இந்தியாவிலிருந்து புறப்படும்போதே, கை செலவுக்கு குறைந்தபட்சம், 5,000 ரூபாயை அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு தொகையை, திர்ஹாம்களாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது

தேநீர் அருந்த, தின்பண்டங்கள் அல்லது சிறிய அளவில் பொருட்கள் வாங்க மற்றும் சுற்றுலா தலங்களில் ஏதேனும் கட்டணங்கள் செலுத்த, இத்தொகை பயன்படும்

'மாஸ்டர் கார்டு, விசா கார்டு' ஆகியவற்றையும் வெளிநாடுகளில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்

பெரிய கடைகளில் மட்டுமே, 'கார்டு'களை பயன்படுத்த இயலும் என்பதால், நாம் செல்லும் நாட்டின் கரன்சியையும் கொஞ்சம் கையில் வைத்துக் கொள்வது, எப்போதுமே உதவியாக இருக்கும்.



— தொடரும்

ஜே.டி.ஆர்.,







      Dinamalar
      Follow us