
எழுத்தாளர், அகிலா எழுதிய, 'அண்ணா நுாறு' நுாலிலிருந்து: அப்போது நீதிகட்சியில் இருந்தார், அண்ணாதுரை. தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த அவலுார்பேட்டை என்ற சிற்றுாருக்கு பேச அழைக்கப்பட்டிருந்தார். அந்த ஊரில் மணியக்காரராக இருந்தவர், தம்மை கலந்தாலோசிக்காமல், உள்ளூர் இளைஞர்களாக சேர்ந்து, பொதுக்கூட்டம் போடுகிறார்களே என்று கோபம் கொண்டார்.
பொதுக்கூட்டம் ஆரம்பமாகி, சில இளைஞர்கள் மேடையேறி பேசினர். அப்போது, அந்த கூட்டத்தின் முன்னால், ஒரு நாற்காலியை போடச் செய்து, அதில் அமர்ந்து கொண்டார், மணியக்காரர்.
அடுத்து பேச எழுந்தார், அண்ணாதுரை.
தான் ஏற்பாடு செய்து வைத்திருந்தபடி, பறை அடிப்போரை பார்த்து, 'அடிங்கடா தப்பட்டையை...' என்று, குரல் கொடுத்தார், மணியக்காரர்.
கூடியிருந்தோரின் காது செவிடாகும்படி, பறையொலி எழுப்பப்பட்டது. இந்த சத்தத்திற்கிடையே, அண்ணாதுரையால் எப்படி பேச முடியும்... பேசினால் யார் காதில் தான் விழும்...
மணியக்காரரை பார்த்து, 'நான், 10 நிமிடங்கள் மட்டுமே பேசி, முடித்துக் கொள்கிறேன். பறையடிப்போரை சற்று நிறுத்தச் சொல்லுங்கள்...' என்று கூறினார், அண்ணாதுரை.
'அதெல்லாம் முடியாது; அடிங்கடா...' என்று, மேலும், கடுமையான உத்தரவு போட்டார், மணியக்காரர்.
மீண்டும் பறையொலிக்க துவங்கியது.
மேடையை விட்டு இறங்கி வந்து, மணியக்காரரை அணுகினார், அண்ணாதுரை.
மிகவும் கோபமாக, 'யாரைக் கேட்டு பேச வந்தாய்... என்னை கேட்டுக் கொண்டா வந்தாய், இல்லையே...' என்றார், மணியக்காரர்.
'பொதுமக்கள் ஆர்வமாக கூடி விட்டனர். இந்த நிலையில், அவர்களை எழுந்து போக சொன்னால், ஏமாந்து போவர். அதனால், உங்கள் மீது, அவர்களுக்கு வெறுப்பு வரலாம். இப்போது, நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், பேச விடுங்கள்...' என்று, கேட்டுக் கொண்டார், அண்ணாதுரை.
'சரி... ஐந்து நிமிடம் அனுமதி தருகிறேன். அதற்குள் நீ பேச வேண்டியதை பேசி, முடித்துக் கொள்...' என்றார், மணியக்காரர்.
தப்பட்டை ஒலி நின்றது.
பேசத் துவங்கி, பேசிக் கொண்டே இருந்தார், அண்ணாதுரை. ஐந்து நிமிடம் முடிந்தது.
தப்பட்டைக்காரர்களை பார்த்து சைகை காட்டினார், மணியக்காரர்.
பறையொலி காதை பிளந்தது. மணியக்காரருக்கு இருந்த பண பலம், ஆள் பலம் காரணமாக, யாருக்கும் அவரை எதிர்த்து பேச துணிவில்லை.
நிலைமையை புரிந்து, உரையாற்றாமல் மேடையை விட்டு இறங்கி விட்டார், அண்ணாதுரை.
மறுநாள், காலையில், அதே ஊரில் இருந்த ஒரு சிறிய ஓட்டலுக்கு டிபன் சாப்பிட சென்றார், அண்ணாதுரை.
அங்கு, அந்த மணியக்காரரும் இருந்தார். அவர், அண்ணாதுரையை மரியாதையுடன் வரவேற்று, அவருக்குரிய சிற்றுண்டியை தாமே வாங்கிக் கொடுத்தார்.
முதல் நாள் இரவு, அவர், ஏன் கூட்டத்தை நடத்த விடாமல் நிறுத்தினார் என்ற காரணத்தை அப்போது அவர் கூறும்போது, 'நடத்த விட்டிருந்தால், பிறகு, இளைஞர்கள், அந்த ஊரில் தனக்கு மதிப்பு இல்லாமல் பண்ணி விடுவர். அதற்காக தான் நான் அப்படி செய்தேன்...' என்று கூறி, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார், மணியக்காரர்.
கி.வா.ஜ., வினா - விடை நுாலிலிருந்து:'0'ஐக் குறிக்க சைபர், பூஜ்யம் என்றெல்லாம் சொல்கிறோம். அதற்கு, தமிழில் வார்த்தை உண்டா, உண்டு.
'பாழ்' என்ற சொல்லே அது. பழந்தமிழ் நுாலான, 'பரிபாடலில்' இது கையாளப்பட்டிருக்கிறது.
நடுத்தெரு நாராயணன்