
''அண்ணே அண்ணே... சீக்கிரம் எழுந்திருங்கண்ணே,'' பக்கத்தில் வந்து நின்று கூச்சல் போட்டவனை, லேசாய் கண் விழித்து பார்த்தார், புண்ணியமூர்த்தி.
''என்னடா, கொள்ளை போற அவசரம் உனக்கு... இப்பதாண்டா எனக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் பண்ணி வச்சுட்டு இருந்தாரு... அது கூட உனக்கு பொறுக்கலயா,'' என்றார்.
தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக் கொண்டாலும், அடித்து வைத்த உறுப்பினர் அட்டை அத்தனையும் வீணாய்தான் கிடக்கிறது அலுவலகத்தில்.
''என்னண்ணே நீங்க... சுத்த விபரம் இல்லாத ஆளாவே இருக்கீங்க... இன்னும் எத்தனை நாளைக்கு கனவுலயே காலம் தள்றது... அத்தனையும் நினைவாகிற நேரம் வந்திருச்சுண்ணே, '' வடிவேலு பாணியில், கைதட்டி சிரித்தான், தண்டபாணி.
''என்னய்யா சொல்றே,'' என்றபடி சோம்பல் முறித்த, புண்ணியமூர்த்தி, யோகிபாபு சாயலில் இருந்தார்.
''ஆமாண்ணே... தேர்தல் வந்திருச்சுண்ணே... தேர்தல் வந்திருச்சு... அது சம்பந்தமா உங்களாண்ட பேச வந்தா, பாய் கடையில, 'குஸ்கா'வும், 'சிக்கன் கிரேவி'யும் வாங்கி சாப்பிட்டு, நீங்க பாட்டுக்கு பகல் கனவு கண்டுட்டுருக்கீங்க.''
''அடப்போடா... இந்த ஒரு மாசமா, கூட்டணின்னு கேட்டு, ஒரு பய கட்சி அலுவலகத்துக்கு வரல... என்ன தான் செய்றது... பேச்சுத் துணைக்கும் ஆளில்லாததால, கண் அசந்துட்டேன்,'' என்றார், அசடு வழிய.
''ஐயோ, அந்தக் கதையெல்லாம் இப்போ மாறப் போகுது... 100 ஓட்டு, 200 ஓட்டு இருக்கிற லெட்டர் பேடு கட்சிகளை எல்லாம், பெரிய கட்சிகாரங்க தேடிட்டு வர்றாங்க,'' என்றான், தண்டபாணி.
''அப்படியா சொல்றே!''
''அப்படித்தாண்ணே... முதல்ல, ஒரு ஆளை விட்டு, கட்சி அலுவலகத்தை சுத்தம் பண்ணச் சொல்லுங்க... 'பில்' கட்டாம கிடக்குற, தொலைபேசி நம்பரையெல்லாம், பணத்தை கட்டி தயார் பண்ணி வைங்க... கட்சிக்காரங்க நாலு பேரை, கரை வேட்டியோட இப்படி அப்படி அலைய விடுங்கண்ணே... அப்ப தான் நம் கட்சியிலயும் நாலு பேர் இருக்காங்கன்னு வர்றவனுக்குத் தெரியும்,'' என்றான்.
தண்டபாணி என்ற, தண்டம் பேசப்பேச, புண்ணியமூர்த்திக்கும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டது. கொசுவர்த்தி சுருளை தலைக்குபின் வைத்து, பழைய நினைவுக்கு போனார்.
மசாலா கம்பெனி நடத்தி வந்த இவரின் சகலப்பாடி, குசேலன், வார்டு கவுன்சிலர் தேர்தலில் நின்று, போட்டியிட்டு ஜெயித்தாலும் ஜெயித்தான், புண்ணியமூர்த்தியின் மனைவி, மங்காத்தா, கோணி ஊசியால் இவரின் கொமட்டில் குத்தி தீர்த்தாள்...
'பத்து காசுக்கு பவிசு இல்லாத சல்லிப்பய, அவனெல்லாம் தேர்தல்ல நின்னு, ஜெயிச்சு, கவுன்சிலர் ஆயிட்டான்... அந்த குள்ளச்சி, என் தங்கச்சி, வாய்க்கு வாய், கவுன்சிலர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறா... நீரு என்ன பண்ணுவீரோ எனக்குத் தெரியாது, நான், எம்.எல்.ஏ., பொண்டாட்டின்னு சொல்லியே ஆகணும்...' என, பலமாய், 'ஆர்டர்' போட்டு விட்டாள், மங்காத்தா.
புண்ணியமூர்த்தியும், பூங்கா நகரில் இருந்த அவருடைய துணிக்கடை, 'குடோனை' காலி செய்து, கட்சி அலுவலகமாக மாற்றி, கட்சி ஆரம்பித்து, வருஷம் ஏழு ஆகிறது.
திடீரென சுறுசுறுப்பை பூசிக்கொண்டிருந்தது, புண்ணியமூர்த்தியின், 'வா'னா கட்சி அலுவலகம்.
அல்லக்கை தண்டபாணி, பந்தாவாக அலைந்தபடி இருந்தான்.
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை உள்ளே எட்டிப் பார்த்து, ''என்னண்ணே... எதுவும் கூட்டணி கேட்டு, போன் வந்துச்சா,'' என்று விசாரித்தான்.
தாகத்திற்கு தண்ணீர் பாக்கெட்
வாங்குவது போல், தாராளமாய் பெரிய கட்சிகள், சீட்டை வாரி இரைத்தன. 'டிவி'யில் எந்நேரமும், செய்தி சேனல்கள் செய்தியை வழங்கின.
ஆனால், 'வா'னா கட்சி அலுவலகம் முன், வத்தல் போடக்கூட ஜனத்தைக் காணோம்.
''என்னடா தண்டம்... கூட்டணி பேசக் கூட வரவேணாம்... தண்ணி, 'கேன்' போடறவனை கூட நாலு நாளா காணோமேடா,'' என்றார் பரிதாபமாக.
''ஆமாண்ணே... இப்ப தான் சிலரை விசாரிச்சேன். அவங்க சொல்றாங்க, 'டிவி'யில தினமும் எதைப்பத்தியாவது பேசுவாங்களே, அந்த விவாத மேடை நிகழ்ச்சியில கலந்துட்டு, நம் கட்சிக்காரங்களும் பேசணும்ண்ணே... அப்ப தான் நம் கட்சியும் பிரபலம் ஆகும்.''
''எல்லாம் சரிடா, நம் கட்சிக்காரன் எவனுக்குடா அம்புட்டு பேசத் தெரியும்,'' என்றார், கவலையாக.
''அடப்போங்கண்ணே... அங்கே எவன் பேசுறான், எல்லாரும் சேர்ந்தாப்போல கத்தணும்; அம்புட்டுத்தாண்ணே... மத்ததை நெறியாளர் பாத்துக்குவான்,'' என்றான்.
''என்னமோ போடா... எனக்கென்னவோ திருவிழாவுக்கு கடை போடற மாதிரி தோணுது,'' என்று அலுத்தபடி, 'ஏசி'யை போட்டு, உள்ளே படுக்கப் போனார்.
சோகமாய் வந்து நின்ற, தண்டபாணியை புரியாமல் பார்த்தார், புண்ணியமூர்த்தி.
''என்ன தண்டம்... வடிவேலு மாதிரி முகத்தை வச்சுட்டு வந்து நிக்கறே... என்ன விஷயம்?''
''ஒண்ணுல்லண்ணே... நம் கட்சிக்காரங்ககிட்ட இருந்து புகாரா வருது.''
''என்னவாம்?''
''கரையை பத்தித்தான்!''
''கறையா... நம் கரங்கள் தான் கறை படாத கரங்கள் ஆச்சே!''
'ம்க்கும்... இந்த, 'ரைமிங்'குக்கு மட்டும் எந்த குறைச்சலும் இல்லை...' என, மனதுக்குள் கூறியபடி, ''கறை இல்லண்ணே, கரை, வேட்டி கரை,'' என்றான், தண்டம்.
''அதுல என்னய்யா பிரச்னை?''
''ம்க்கும்... ஊரு உலகத்துல, ஏன் அகில லோகத்திலயும் நான் பார்த்துட்டேன்... நம் கட்சி கொடி மாதிரி, ஏழு கலர்ல கொடி இருக்கிற கட்சி இல்ல... அந்த ஏழு கலரையும் கரையா வச்சு வேட்டி கட்டினா, பாவடை கட்டுன, 'எபெக்ட்' வருதுண்ணே...
''ரோட்டுல போற வர்ற பொம்பளைங்க, கமுக்கமா வாயைப் பொத்திட்டு சிரிக்கிறாங்க... வெட்கமா இருக்குண்ணே,'' வடிவேலு பாணியில், உதடு பிதுக்கி, தண்டபாணி சொல்ல, அடிபொடிகள் ஆமோதித்து தலை அசைத்தனர்.
அந்தநேரம், படகு போன்ற கார் ஒன்று வந்து நின்றது. 'உ'னா கட்சியில் இருந்து கூட்டணி பேச வந்திருப்பதாய் சொல்ல, புண்ணியமூர்த்தி துள்ளி குதித்தார்.
'உ'னா கட்சித் தலைவர் கூட்டணி பேச வந்திருப்பதாக கேள்விப்பட்டு, இவர்கள் அலுவலகம் முன் செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். புண்ணியமூர்த்திக்கு, ஒரே சந்தோஷம்.
ஒரு சீட்டும், 100 'சி'யும் தருவதாக, 'உ'னா கட்சித் தலைவர் சொல்ல, சந்தோஷமாக தலையாட்டப் போனவரை, பின்னால் இருந்து ஜாடை காட்டி, தடுத்து நிறுத்தினான், தண்டபாணி.
''நாங்க கலந்து பேசிட்டு, அப்புறம் முடிவை சொல்றோம்,'' என்று அவர்களை அனுப்பி, தண்டபாணியை முறைத்தார்.
''ஏண்டா பதில் சொல்ல வேணாம்ன்னு தடுத்தே... ஒரு, எம்.எல்.ஏ., சீட்டும், 100 'சி'யும் பத்தாதாடா நமக்கு.''
''ஐயோ அண்ணே... நடக்குறது,
எம்.பி., தேர்தல் அண்ணே... அந்த விபரம் கூட இல்லாம இருக்கீங்களே... கொஞ்சம் பொறுங்கண்ணே, நம் ஊர்ல, 'உ'னா கட்சி தான் அதிசயமா... 'உ'னாவில இருந்து பிரிஞ்சு போன, 'எ'னா கட்சி, 'ஒ'னா கட்சி, 'ச'னா கட்சி, இப்படி எக்கசக்க கட்சிகள் இருக்குதே...
''அவங்க எல்லாரும் அடுத்தடுத்து வருவாங்க... அவங்க எவ்வளவு தர்றாங்கன்னு பார்த்துட்டு, கடைசியா, நம் முடிவை சொல்லலாம்ண்ணே... அப்ப தான், 'கெத்தா' இருக்கும். கூப்பிட்ட உடனே போயிட்டா, நாம இதுக்குத்தான் காத்துட்டு இருந்தோம்கிற மாதிரி ஆயிடாது,'' என்ற தண்டபாணியை, கண்ணில் நீர் நிறைய பார்த்தார், புண்ணியமூர்த்தி.
''டேய் தண்டம்... செய்தியாளர்கள் எல்லாரையும் ஒரே இடத்துல சந்திக்கணும்ன்னா எங்கேடா போகணும்?''
''சென்னை ப்ரஸ் கிளப்புக்குண்ணே... இப்போ எதுக்கு அது?''
''இல்லடா... எல்லா பத்திரிகையாளர் களையும் கூட்டி, 'நீ தான் என்னோட அரசியல் வாரிசு'ன்னு அறிவிக்க தான்... என்னாமா சிந்திக்கிறடா... குருவையே மிஞ்சிட்டடா நீ,'' என்றபடி, அவன் தோளில் தட்டி, தழுதழுத்தார்.
''ம்க்கும்... அது வேறய்யா... உங்க பொண்டாட்டி, புள்ளைங்க எல்லாம், என்னை ஓட ஓட வெட்ட வரவா... வேணாம்ண்ணே... ஏதோ உங்களுக்கு, 100 'சி' கிடைச்சா, எனக்கு, ஒரு 'சி'யைத் தள்ளுங்க... காலம்பூரா விசுவாசமா இருப்பேன்,'' என, பல்லிளித்தான், தண்டபாணி.
அவனுடைய யூகம் பொய்யாகவில்லை. 'எ'னா கட்சி, ரெண்டு சீட்டும், 200 'சி'யும் தருவதாக சொன்னது... அன்று மதியமே, 'ஒ'னா கட்சியும், ரெண்டு சீட்டும், 300 'சி'யும் தருவதாக துாது விட்டது.
ஏலம் எக்கசக்கமாய் ஏற ஏற, புண்ணியமூர்த்தி, குஷியாகி, உச்சபட்ச பேரத்திற்கு பின், மணியடித்து அறிவிக்கலாம் என்று காத்திருந்தார்.
மூன்று கட்சிகளும், மாறி மாறி போன் செய்தன.
ஏக குஷியில் இருந்தாள், மங்காத்தா.
ஏலம் ஏற ஏற, இருமாப்பு கூடியது, புண்ணியமூர்த்திக்கு. தன் பாவாடை கரை வேட்டி கட்சிக்கு, இத்தனை செல்வாக்கா என்று பூரித்தார்.
எந்த கட்சியின் இழுப்பிற்கும் வராமல், இவர் இழுத்தடிக்க, ரெண்டு நாட்களாய் கட்சி அலுவலகம், 'கப்சிப்' ஆகி, கிணற்றில் போட்ட கல்லாய் மற்ற கட்சிகள் அமைதி காத்தன.
வான்கோழி பிரியாணியை, ஒரு வெட்டு வெட்டி, சோபாவில் படுத்து காலாட்டிக் கொண்டிருந்த, புண்ணியமூர்த்தியை, 'டிவி' திரையில் திடீரென பளிச்சிட்ட முக்கிய செய்தி, 'குபீர்' என எழுந்து நிற்க வைத்தது.
'உ'னா கட்சி, 'எ'னா கட்சியுடன் கூட்டணி... 'ஒ'னா கட்சி, 'ச'னா கட்சியுடன் கூட்டணி.
அவிழ்ந்த வேட்டியை இறுக்கி, வாசலுக்கு ஓடி வந்தார். வரவேற்பறையில் பேப்பரால் முகத்தை மூடி துாங்கிக் கொண்டிருந்த, தண்டபாணியிடம் விஷயத்தைச் சொல்லி, எழுப்பினார்.
''விடுங்கண்ணே... அவங்க எல்லாம் சேர்ந்தா நமக்கு இடமில்லைன்னு அர்த்தமில்லை. அவனுக இல்லாட்டி, நடிகர் கட்சி... அதுவும் இல்லாட்டி, விவசாயிங்க கட்சி,'' என்றான்.
''டேய்... அவங்க எல்லாம், 'சீட்' தான் தருவாங்க... 'சி' தரமாட்டாங்க... கட்சியை நம்பி, ஏழு வருஷமா பொழப்பை பார்க்கமா இருக்கேன்டா,'' மூக்கால் அழுதார்.
மூன்று நாட்களாய் காத்திருந்தும், யாரிடமிருந்தும், எந்த அழைப்பும் வரவில்லை. கட்சிகள், வேட்பாளர்களை அறிவிக்கத் துவங்கி இருந்தன.
புண்ணியமூர்த்தியே போன் செய்து பேச, எல்லாரும் சொல்லி வைத்தாற்போல், 'சீட்டும் இல்லை, 'சி'யும் இல்லை...' என்றனர். மனசு வெறுத்துப் போன, புண்ணியமூர்த்தி, தலையில் துண்டை போட்டு உட்கார்ந்தார்.
கட்சிகள் எல்லாம் ஒருசேர இவரைப் பார்த்து, 'பிம்பிலிக்கா பிலாப்பி' பாடி விட்டது என்ற விசனம், அவர் மனசைக் கொன்றது.
வெளியில் இருந்து உற்சாகமாக வந்த, தண்டபாணி, அவருடைய கோலம் பார்த்து பதறிப் போனான்.
''ஐயோ அண்ணே... அண்ணிக்கு என்னாச்சு?''
''அவளுக்கென்ன கேடு.... சட்டி சோத்தை, புல் கட்டு கட்டிட்டு, வீட்டில துாங்கிட்டு இருக்கா... தயிர்க்காரி பானையை, அவளே உடைச்ச கதை மாதிரி, காத்தடிச்சு காத்தடிச்சு, பலுானை வெடிக்க வச்சுட்டமேய்யா,'' துண்டால் வாயை மூடி, சிவாஜி கணேசன், 'எபெக்ட்' காட்டினார், புண்ணியமூர்த்தி.
''அண்ணே... மனச தளர விடாதீங்கண்ணே!''
''இந்த தேர்தலும் இல்லைன்னு ஆகிப்போச்சு... இனி, அஞ்சு பைசா சம்பாதிக்க, அடுத்த தேர்தல் வர்ற வரைக்கும் காத்திருக்கணும்... ஏதோ கோடியில கொட்டப் போகுதுங்கற கனவுல எக்கச்சக்கமா கடனை வாங்கி, கட்சி அலுவலகத்தை களைகட்ட வச்சேன்... இப்போ, மொதலுக்கே மோசமாகிருச்சேடா,'' அங்கலாய்த்தார்.
''அண்ணே... மனசு விட்றாதீங்கண்ணே... உங்களை கேட்காம, நானொரு வேலை செஞ்சுட்டு வந்துட்டேண்ணே,'' தலையை சொறிந்தான்.
''என்னடா செஞ்சே?''
''நம் கட்சியோட நிதி நிலைமை எனக்கு நல்லாத் தெரியும்... அதனால, நம் கட்சி கூட கூட்டணி பேச, பல கட்சிங்க வந்துச்சு இல்லையா, அப்போ அங்கிருக்கிற சில முக்கிய தலைங்க கூட நமக்கு நட்பாகிருச்சு... அவங்ககிட்ட நம் நிதி நிலைமையை சொன்னேன்...
''எல்லாரும், அவங்கவங்க கட்சி அலுவலகத்தில், 'கேன்டீன்' போடுற, 'ஆர்டர்' நமக்கு தந்திருக்காங்கண்ணே... டீ, காபி, முட்டை பப்ஸ், சமோசா, மெதுவடை, பஜ்ஜி. இந்த ரெண்டு மாசமும் கட்சி அலுவலகம் களைகட்டும்... நல்லா கல்லா கட்டலாம்ண்ணே... நம் பட்ஜெட் செலவுக்காவது உதவுமில்லையா?'' என்று சொல்லி, தலையை சொறிந்த, கட்சியின் பீரங்கியை பெருமை பொங்க பார்த்தார்.
''ஏன் தண்டம்... இது, அவமானமில்லையா?''
''அரசியல்ல இதெல்லாம் சாதரணம்ண்ணே... டீக்கடை நடத்தி, அரசியலுக்கு வர்றது ஒரு ரகம்னா, அரசியல்ல இருந்து டீக்கடை நடத்தப் போறதும் ஒரு ரகம்தாண்ணே... நான் மார்கெட்டுக்கு போய் தேவைப்படற சாமான்களை வாங்கிட்டு வர்றேன்... நீங்க, அதுக்குள்ள, 'யூ டியூப்'ல போய், 'ருசியாக டீ போடுவது எப்படி'ன்னு கத்து வைங்க,'' என்று சொல்லி, அவன் நகர்ந்தான்.
கூட்டணிக்கு ஆசைப்பட்டு, எப்படியோ, டீ கடையாவது கிடைத்ததே என்று ஆறுதல்பட்டுக் கொண்டார், புண்ணியமூர்த்தி.
எஸ்.மானஸா