
மாயமான்கள்!
தண்ணீரை சல்லடையில் சலித்தெடுக்கும்
சூட்சுமத்தை அறிந்தவர்கள்
பணத்தாளால் குளிரூட்டி
உறைய வைத்து திடமாக்க தெரிந்தவர்கள்!
தினசரியையும், ஊடகத்தையும்
சூடாக வைத்திருக்க வாய்ப்பு தரும்
வல்லமை பெற்றவர்கள்...
நாடு வெந்து புழுங்க
அந்த வெப்பத்தில்
குளிர் காயும் குணவான்கள்!
விளையாடும் பரமபதத்தில்
எல்லா கட்டங்களிலும்
ஏணிகள் மட்டும் தான்...
ஒவ்வொரு உருட்டலிலும்
விழுவதெல்லாம் தாயம் தான்...
சொன்னபடி விழுவதற்கே
பகடைகளாய் மக்கள்!
கும்பிட்டு கெஞ்சி கேட்டு
காலில் விழுந்து கஷ்ட வழியில்
வாங்கியது போய்
இலவசம் வீசி சத்தியம் வாங்கி
நிச்சய வெற்றியை தேர்தலில் பறிக்கும்
வித்தையை கற்றுத்தேர்ந்த வித்தகர்கள்!
மானியம் இலவசம் என்ற வண்ணம் பூசிய
வானவில்லை வலையாக்கி வாய்ஜால முடிச்சிட்டு
ஓட்டுகளை வேட்டையாடும்
சைவக் கொக்குகள்!
அதிகாரம் நோக்கி வைக்கும்
கால் தடத்தின் முதல் இரண்டு அடிகளுக்கு
விதிமீறல்களே முதல் தகுதியென்னும்
விதிமுறையை வகுத்துக்கொள்ளும்
வித்தியாசமான அரசியல்வாதிகள்
இங்கே சிலர்!
இந்த மாய மான்களின் கவர்ச்சியில் விழுந்து
உரிமைகளை, பெருமைகளை மறந்து
பறி கொடுக்கும் பாமரர்களுக்கு
புரிய வைக்கும் பொறுப்புள்ளோர்
பலரும் அந்த சமூக வலைதளத்தில்
சக நிழல் மனிதர்களோடு
சதுரங்க விளையாட்டில்
வெகுமதியில்லா வெற்றிக்காய்
விடியும் வரை விரல் யுத்தம் நடத்துகின்றனர்!
— டி.டி.மணிவண்ணன், பொள்ளாச்சி.