/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அழைக்கும் அசர்பைஜான்! பறக்கும் நம் நாட்டினர்! (2)
/
அழைக்கும் அசர்பைஜான்! பறக்கும் நம் நாட்டினர்! (2)
PUBLISHED ON : டிச 15, 2019

இந்தியர்கள், வணிகத்திற்காகவும், வேலை தேடியும், ஆதி காலத்திலிருந்தே, உலகம் முழுக்க பயணம் செய்திருப்பதை, வரலாற்றுத் தரவுகள் நிரூபித்திருக்கின்றன. அந்த வகையில், 17 மற்றும் 18ம் நுாற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திலேயே, இந்தியர்கள், அசர்பைஜானுக்கு வணிகம் செய்ய பயணித்திருக்கின்றனர்.
இதற்கு ஆதாரம், பாகுவின் புறநகர் பகுதியான சுராஹானியில் இருக்கும், 'அடேஸ்கா' எனப்படும் நெருப்புக் கோவில்.
சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழியில், 10க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் பதிக்கப்பட்டு, ஐங்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது, இக்கோவில். அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பையும், ஆனந்த தாண்டவம் புரியும் நடராஜரையும், விநாயகரையும் வணங்கி இருக்கின்றனர், இந்தியர்கள்.
இது, 300 ஆண்டுகளுக்கு முன்பே, 'சில்க் ரூட்' எனப்படும் சீனா -- இந்தியா வழியே, மத்திய கிழக்கு நாடுகளுக்குள் நுழைந்து, மேற்கத்திய நாடுகளுக்கு வர்த்தகம் செய்யச் சென்ற பாதையில், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் சென்று வணிகம் செய்திருப்பதை காட்டுகிறது.
அசர்பைஜானில், மார்ச் மாதத்தில் வரும், 'நவ்ராஸ்' எனப்படும் புத்தாண்டு தினத்தில், இந்தியர்கள், சீக்கியர்கள், சவுராஷ்டிரியர்கள், இந்த நெருப்பு கோவிலுக்கு சென்று, இப்போதும் அக்னி பகவானை வணங்கி வருகின்றனர்.
முந்தைய காலத்தில், பூமிக்கு அடியிலிருந்து கிளம்பிய இயற்கை எரிவாயுவால் எரிந்து கொண்டிருந்த நெருப்பு, இப்போது, குழாய் மூலம் செலுத்தப்படும் எரிவாயுவில் எரிந்து கொண்டிருக்கிறது.
கடந்த, 1975ல், அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட இந்த கட்டடம், 1998ல், யுனெஸ்கோவால் பராமரிக்கப்படும் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 300 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, வரலாற்றில் இடம்பெற்ற அந்த தொடர்பை, இன்றைய இந்தியர்கள், மீண்டும் புதுப்பிக்கத் துவங்கி இருக்கின்றனர். 1991ல், அசர்பைஜான், சுதந்திர நாடாக பிரகடனம் செய்த உடனேயே, நம் நாடு அதை அங்கீகரித்து, 1999ல், தன் துாதரகத்தை, பாகுவில் திறந்தது. என்றாலும், 2000க்குப் பிறகு தான், இந்தியர்கள் அந்நாட்டில் வேலை, படிப்புகளை தேடி கிளம்பினர்.
அசர்பைஜானின் பிரதான வருவாய், நாட்டின் வளமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியிலிருந்து தான் கிடைக்கிறது. இதற்கடுத்து, கல்வி சுற்றுலாவை வடிவமைத்து, பாகு நகரை, சர்வதேச அளவில், கல்வி கேந்திரமாக மாற்ற, அந்நாடு முயற்சிக்கிறது. இதனால், உயர் கல்வியை தன் வசம் வைத்திருக்கிறது, அரசு.
'அசர்பைஜான் மெடிக்கல் யுனிவர்சிடி, பாகு ஆயில் அண்ட் கேஸ் யுனிவர்சிடி, அசர்பைஜான் ஸ்டேட் மரைன் அகாடமி, அடா யுனிவர்சிடி, வெஸ்டர்ன் காஸ்பியன் யுனிவர்சிடி' ஆகியவை, இங்குள்ள பெரிய பல்கலைக் கழகங்கள்.
பாகு ஆயில் அண்ட் கேஸ் யுனிவர்சிடியில், 'ஆயில் அண்ட் கேஸ் இன்ஜினியரிங், ஜியாலஜிக்கல் இஞ்ஜினியரிங், ஜியோபிசிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங்' உள்ளிட்ட பல பொறியியல் பட்ட படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.
மரைன் அகாடமியில், 'ஷிப் பவர் ஆபரேஷன் இன்ஜினியரிங், நேவல் நேவிகேஷன் இன்ஜினியரிங், ஷிப் பில்டிங் இன்ஜினியரிங்' உள்ளிட்ட படிப்புகள் சொல்லி தரப்படுகின்றன. இந்த படிப்புகளை இங்கே படித்து முடிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு, அசர்பைஜானிலேயே வேலை கிடைக்கிறது.
இங்கே, ஆறு ஆண்டுகள் மருத்துவம் பயில, விடுதி கட்டணத்துடன், 27 லட்ச ரூபாய் தான் ஆகும். இந்திய உணவுக்கு, ஆறு ஆண்டுகளுக்கு, மூன்றிலிருந்து நான்கு லட்ச ரூபாய் ஆகும். மொத்தம், 31 லட்ச ரூபாயில், டாக்டர் பட்டம் வாங்கி விடலாம். இந்தியாவில், டாக்டர் பட்டம் முடிக்க, குறைந்தபட்சம், 1.2 கோடி ரூபாயும், அதிகபட்சம், சில கோடி ரூபாய் ஆகிறது.
அசர்பைஜானில், மருத்துவம் படிப்பதற்கான கல்வி தகுதி, நம்மூர் பிளஸ் 2வில், முதல் குரூப்பில், முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்க வேண்டும்; அடுத்து, 'நீட்' தேர்விலும், 'பாஸ்' செய்திருக்க வேண்டும்.
மொத்தம், 22 ஆயிரம் மாணவர்கள் படிக்கும், பாகு மெடிக்கல் யுனிவர்சிடியில், 85 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், ஐந்து பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். இங்கே டாக்டர் படிப்பை முடித்ததும், மாணவர்கள் இந்தியா திரும்பி, 'நெக்ஸ்ட்' தேர்வு எழுதி, 'பிராக்டீஸ்' செய்யலாம்.
சரி எல்லா வெளிநாடுகளிலும் தான் படிக்கலாம். ஆனால், அசர்பைஜானில் பத்திரமாக தங்கி படிக்க முடியுமா... அசர்பைஜான் நாட்டு மக்கள், நம்மவர்களை எப்படிப் பார்க்கின்றனர்?
இதை அடுத்த வாரம் பார்க்கலாம். அதோடு, அந்நாட்டில் சுற்றிப் பார்க்க கூடிய இடங்கள் பற்றியும் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் செட்டிலாக ஆசையா?
அசர்பைஜானின், எம்.பி.பி.எஸ்., டிகிரியை, ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே அங்கீகரிக்கிறது. எனவே, நம் மாணவர்கள், இதில் டிகிரி முடித்ததும், எம்.எஸ்., அல்லது எம்.டி., படிக்க, ஜெர்மன் உள்ளிட்ட எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் செல்ல முடியும். அங்கு, ஒரு தகுதி தேர்வு எழுதிய பின், அங்குள்ள மெடிக்கல் யுனிவர்சிடிகள், படிக்கும் போது தரும் உதவி தொகையை வைத்தே ஓரளவுக்கு செலவை சமாளித்து விடலாம்.
'ஜெர்மனியில், எம்.எஸ்., அல்லது எம்.டி., முடித்தால், எந்த ஐரோப்பிய நாட்டிலும் நல்ல சம்பளத்தில் சுலபமாக டாக்டர் வேலை வாங்கி விட முடியும்...' என்கிறார், ராகேஷ் குமார் சிவன். கோயம்புத்துாரை சேர்ந்த,
எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், இந்தியாவிலிருந்து, இங்கே மருத்துவம் படிக்க வரும் மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' தந்து வழிகாட்ட, 'கெட் டைரக் ஷன் குளோபல்' என்ற நிறுவனத்தை, பாகுவில் நடத்துகிறார்.
இது, அந்நாட்டு பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். அசர்பைஜானில் படிக்க விரும்பும் நம்மூர் மாணவர்கள், இவரை தொடர்பு கொண்டால், என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், விண்ணப்பம் மற்றும் விசா பெறுவது எப்படி என்பது வரை வழி காட்டுவார். இவருடைய, 'வாட்ஸ் ஆப்' எண்: 00917092712111.
மனசுக்குள் இடம் பிடித்த, அசர்பைஜான்!
காஞ்சிபுரத்தை சேர்ந்த, கன்னிவேல், 'சோக்கார்' எனப்படும் அரசு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில், 'ஆப்ஷோர் ஹைட்ராலிக் இன்ஜினியர்' ஆக பணிபுரிகிறார். இதற்கு முன், துபாய், குவைத், மலேஷிய நாடுகளில் பணிபுரிந்திருக்கும், கன்னிவேலுவுக்கு, அசர்பைஜான் ரொம்பவே பிடித்து விட்டது.
இந்நாட்டின் இதமான சீதோஷ்ண நிலை, சுத்தமான சூழல், கட்டுப்படியாகும், 'காஸ்ட் ஆப் லிவிங்' இ்ங்கே குடியேறி விடலாமா என, அவரை யோசிக்க வைத்திருக்கிறது.
இதுபற்றி கன்னிவேல் கூறியதாவது:
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த போது, மத ரீதியான ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன். அசர்பைஜானும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு தான். ஆனால், அந்த நெருக்கடி இங்கே சுத்தமாக இல்லை.
இந்த நாட்டில், எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், பெண்களை மதிக்கும் போக்கு. மெட்ரோவிலோ அல்லது பஸ்சிலோ பயணிக்கும் போது, ஒரு பெண் வந்து விட்டால், முதியவர் கூட எழுந்து, அந்த பெண்ணுக்கு இருக்கை தந்து விடுகிறார். எனக்கு தெரிந்து, இந்த நாட்டில் மட்டும் தான், சர்வதேச பெண்கள் தினம், தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு பிடித்த விஷயம், இந்நாட்டில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சகல வசதிகளுடன் பிரமாண்டமான பூங்காக்களை அமைத்திருப்பது. மாலை வேளையானால் தாத்தா, பாட்டிகள், தங்கள் பேரக் குழந்தைகளுடன் இந்த பூங்காக்களுக்கு படையெடுத்து விடுகின்றனர்.
குழந்தைகளையும், பெரியவர்களையும், பெண்களையும் நேசிக்கும் தேசத்தை விட்டுப் போக யாருக்கு மனசு வரும்.
இவ்வாறு அவர் கூறுகிறார்.
— தொடரும்.
ஆனந்த் நடராஜன்

