
அங்கிருந்து கிடைக்கட்டும்!
நான் உறவுகளுக்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
இணையத்திற்குள்!
நான் புகழுக்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
அரங்கத்தின் மேடைகளில்!
நான் பேராசைக்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
பணத்திற்கான தேடலில்!
நான் ஆடம்பரத்திற்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
விலை உயர்ந்த பொருட்களுக்குள்!
நான் பொறாமைக்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
பிறரது வளர்ச்சி மீதான
காழ்ப்புணர்ச்சிக்குள்!
நான் சோம்பலுக்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
உழைக்காமல் பெற விரும்பும்
பெரும் ஊதியத்தின் கனவிற்குள்!
நான் ஊழலுக்கு
அடிமையில்லையெனச் சொல்லி
அடிமையாகிக் கிடக்கிறோம்
குறுக்கு வழியில்
வெற்றி பெறும் சூழ்ச்சிக்குள்!
இனியேனும்
நம் அடிமைத்தனத்தை உணர்ந்து
நான் அடிமையில்லை என்ற
வெற்று சொற்களுக்கு அடிமையாகாமல்
அன்பிற்கும், பொது நலத்திற்கும்,
உழைப்புக்கும் அடிமை ஆவோம்...
அங்கிருந்து கிடைக்கட்டும்
உண்மையான சுதந்திரம்!
என். கீர்த்தி, சென்னை.

