sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்! (3)

/

அழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்! (3)

அழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்! (3)

அழைக்கும் அசர்பைஜான்; பறக்கும் நம் நாட்டினர்! (3)


PUBLISHED ON : டிச 22, 2019

Google News

PUBLISHED ON : டிச 22, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசர்பைஜான் நாட்டின் மூன்றாவது வருவாய், சுற்றுலா தான். மத்திய கிழக்கிலிருக்கும் துபாய், தென்கிழக்காசியாவில் இருக்கும் சிங்கப்பூர் போல, பாகு நகரையும் பிரதான சுற்றுலா தலமாக்க, இப்போதைய அரசு திட்டமிடுகிறது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வார்த்தைகளில் அசர்பைஜானியர்களுக்கு நம்பிக்கை இல்லை. பழமையும், புதுமையும், பாரம்பரியமும், நவீனமும் ஒருங்கே இருக்க வேண்டும் என, அவர்கள் நினைக்கின்றனர்.

அதனால் தான், இன்றைய தலைமுறையினர், தங்கள் முன்னோர் வாழ்ந்த, 'இச்ரி ஷிஹெர்' என, அழைக்கப்படும், 'ஓல்ட் சிட்டி'யை, அதன் கலைநயமும், நேர்த்தியும் சிதிலமடையாமல் பாதுகாத்து வருகின்றனர்.

பாகுவிலிருக்கும் ஓல்ட் சிட்டியில், 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, ஷிர்வன்ஷாஸ் மன்னர்களின் அரண்மனை; 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படும், 92 அடி உயரத்தில், சிலிண்டர் வடிவில் இருக்கும், 'மெய்டன் டவர்' மற்றும் பழங்காலத்திய வீடுகள், குறுகலான தெருக்கள் போன்றவை இருக்கின்றன.

இதில், மெய்டன் டவர், அசர்பைஜான் அரசின் தேசிய சின்னம். நம்மூரில், ரூபாய் நோட்டுகளில் காந்திஜி இடம் பெற்றிருப்பதைப் போல, அந்நாட்டின் கரன்சிகளில், மெய்டன் டவர் இடம் பிடித்திருக்கிறது.

அசர்பைஜானில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம், பாகு தேசியப் பூங்கா. காஸ்பியன் கடற்கரையில், 3 கி.மீ., நீளத்திற்கு, இருபுறமும் மரங்கள், பூச்செடிகளுடன் இருக்கிறது.

இரவில் வண்ண விளக்குகள் ஒளிர, சில்லென்ற கடற்காற்று வீச, இந்த பூங்காவின் பாதையில் ஒரு நடை போய் வந்தால், சொர்க்கலோகத்தில் மிதக்கும் உணர்வு ஏற்படும்.

நவீன அசர்பைஜானை வடிவமைத்தவர், நாட்டின் முதல் ஜனாதிபதியான, ஹைதர் அலியேவ். இந்நாடு, சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்தவுடன், நாட்டின் பொருளாதாரத்தை செப்பனிட்டதுடன், உள்கட்டமைப்பு, கல்வி, வர்த்தகம், மருத்துவம் ஆகியவற்றில் நவீனத்தை கொண்டு வந்தார். இங்கே, பல, 'ஸ்கை கிராப்பர்'கள் விண்ணை உரச, அவர் தான் காரணம்.

அவரின் நினைவாக, நகரின் மையத்தில், 'ஹைதர் அலியேவ் அருங்காட்சியகம்' கட்டப்பட்டிருக்கிறது.

இது, பாகுவின், 'ஐகானிக்' கட்டடம்.

இங்கே, பல ஹிந்தி படங்கள் மற்றும் நம்மூரின், ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ஒன்றின், 'ஷூட்டிங்' நடந்திருக்கிறது.

பாகுவில் இருக்கும் மற்றொரு, 'ஐகானிக்' கட்டடம், 'பிளேம் டவர்!' நெருப்பின் ஜ்வாலை போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இது, இரவில் ஆரஞ்சு வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு உயரமாக நெருப்பு எரிவது போலவே இருக்கிறது. இந்த கட்டடத்தின், 13வது மாடியிலிருந்து நகரை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி.

'அசர்பைஜானில், பல நாட்டு மக்கள் வசித்தாலும், இந்தியர்களிடம் அவர்களுக்கு, பிரத்யேக அன்பும், நட்பும் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இவர்களும், நம்மூர் மக்களைப் போலவே, பல விஷயங்களில், 'சென்டிமென்ட்' பார்க்க கூடியவர்கள் என்பது, ஒரு காரணமாக இருக்கலாம்...' என்கிறார், நாகர்கோவிலின் பத்மநாபபுரத்தை சேர்ந்த, மகாதேவன்.

இவர், சென்னை, எம்.ஐ.டி.,யில் பி.டெக்., முடித்தவர். இப்போது, அசர்பைஜானில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில், 'சீனியர் கன்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியர்' ஆக பணிபுரிகிறார். மனைவி, இல்லத்தரசி. இரு குழந்தைகள், அசர்பைஜான் இன்டர்நேஷனல் ஸ்கூலில் படிக்கின்றனர்.

'குடும்பத்துடன் வசிப்பதற்கு, பாதுகாப்பான, சிறப்பான நாடு இது. இங்கே நான், 10 ஆண்டுகளாக வசிக்கிறேன். ஆனாலும், இந்தியாவில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். விருந்தோம்பல், இவர்களின், 'பெஸ்ட் குவாலிட்டி' என கூறலாம்...' என்கிறார், மகாதேவன்.

இங்கே, யாராவது இறந்து விட்டால், உறவினர்கள், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கின்றனர். வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், பொருத்தம் பார்ப்பது, பின் நிச்சயம் செய்வது, அதன் பின் திருமணம் என்கிற, நம்மூர் பழக்கம் இங்கேயும் உண்டு.

இளம் வயதினர் காதலிப்பது உண்டு. ஆனால், பெற்றோர் அனுமதி பெற்றே, 'டேட்டிங்' செல்கின்றனர்.

நம் நாட்டைப் போலவே, இங்கேயும் பல பண்டிகைகள் உண்டு. அதில் உறவினர்கள், நண்பர்கள் ஒன்று கூடி விருந்து, பரிசுகள் அளித்து கொண்டாடுகின்றனர்.

இந்த பண்டிகைகளை எப்படி குடும்பத்தினருடன் இந்தியர்கள் கொண்டாடுகின்றனர் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

— தொடரும்.

புடவை கட்டிக் கொண்டால்...

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்கும் சேலத்தை சேர்ந்த, சக்திவேல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாகுவில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில், மெக்கானிக்கல் சூபர்வைசராக பணியாற்றுகிறார். இவர் மனைவி கிருத்திகா, இல்லத்தரசி.

'தொலை துாரத்தில் அந்நிய மண்ணில் வசிக்கிறோம் என்ற உணர்வே எழாதபடி, எங்களை தமிழ் சங்கம் கவனித்துக் கொண்டாலும், இந்நாட்டின் மக்களுக்கும் அதில் பெரும் பங்கிருக்கிறது. அவர்கள் அன்பானவர்கள். எங்களை இந்நாட்டின் விருந்தினர்களாக பாவித்து, நட்புடன் பழகுகின்றனர்...' என்கிறார், சக்திவேல்.

'அசர்பைஜானியர்களுக்கு, இந்தியர்களை ரொம்பவே பிடிக்கும். ஏதாவது ஒரு விசேஷத்திற்கு, புடவை கட்டி வந்தால், இங்குள்ள பெண்கள், 'உங்களுடன், 'செல்பி' எடுத்துக் கொள்ளலாமா?' என கேட்டு, ஆசையோடு எடுத்துக் கொள்வர்...' என்கிறார், கிருத்திகா.

-ஆனந்த் நடராஜன்






      Dinamalar
      Follow us