PUBLISHED ON : மார் 10, 2019

உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டத்தில் உள்ள, பன்வாரி டோலா என்ற கிராமத்தை சேர்ந்த சகோதரிகள், ஜோதி, 18, நேஹா, 16. இந்த கிராமத்தில், சிறிய அளவில், முடி திருத்தும் கடை வைத்திருந்தார், இவர்களது தந்தை.
நான்கு ஆண்டுகளுக்கு முன், அவருக்கு, பக்கவாதம் ஏற்பட்டு, கை, கால்கள் செயல்படாமல் முடங்கிப் போனார். குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு, இந்த சிறுமியர் மீது விழுந்தது. வேறு வழியில்லாமல், படிப்பை தியாகம் செய்து, தந்தையின் கடையை கவனிக்க முடிவு செய்தனர்.
ஆண்களால், இவர்களுக்கு தொல்லை ஏற்படாமல் இருக்க, இருவரும், தங்கள் அடையாளத்தை மாற்றினர். ஆண்களைப் போல், தலைமுடியை, 'கிராப்' செய்து, 'பேன்ட் - சர்ட்' அணிந்து, உருமாறினர். பெயரையும், தீபக், ராஜு என, மாற்றிக் கொண்டனர். பலரும், இவர்களை ஆண்கள் என்றே எண்ணினர்.
சமீபத்தில், உள்ளூர் பத்திரிகையில், இவர்களை பற்றிய செய்தி வெளியாகவே, நாடு முழுவதும், இவர்கள் பிரபலமாகி விட்டனர். 'இப்போது, எல்லாருக்கும் எங்களை பற்றி தெரிந்து விட்டது. அதனால், அடையாளத்தை மாற்றி வாழ வேண்டிய பிரச்னை இனி இருக்காது. இந்த தொழிலில், ஒரு நாளைக்கு, 400 ரூபாய் கிடைக்கிறது; இப்போதைக்கு அது போதும்...' என்கின்றனர், இந்த புதுமைப் பெண்கள்.
— ஜோல்னாபையன்.

