
மனிதர்கள், தங்களுக்குள் பேதம் கற்பிப்பது பெரும் பாவம் என, ஞான நூல்கள் கூறினாலும், அத்தவறை செய்வதில் இருந்து வெளிவருவது இல்லை.
பன்னாசனன் எனும் வேதியருக்கு, திரணாசனன் எனும் மகன் இருந்தான். சிறு வயதில் இருந்தே, ஞான நூல்களை கற்பதில் ஆர்வம் கொண்டு, வேதங்கள் அனைத்தையும் கற்றான். அவனது குரு, 'சீடனே... வேதங்களை எல்லாம் கற்ற நீ, சிவத்தல யாத்திரை செல்...' என்று கட்டளையிட்டார்.
குருவை வணங்கி, சிவத் தல யாத்திரை புறப்பட்டான், திரணாசனன். ஒவ்வொரு தலமாகத் தரிசனம் செய்து வந்தவன், திருப்பூவணம் எனும் தலத்தை அடைந்தான். அங்கு, மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி, கோவிலுக்குள் சென்றவன், அம்பாளை மட்டும் வழிபட்டு, சிவன் சன்னிதி பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
அங்கிருந்து, திருச்சுழியல் எனும் தலத்தை அடைந்தான். அங்கு, சிவபெருமானை வழிபட்டானே தவிர, அம்பாள் சன்னிதியை திரும்பிப் பார்க்கவில்லை.
பின், மீண்டும் பயணத்தை தொடர்ந்த திரணாசனன், மறுபடியும் திருப்பூவணம் வந்து, மணிகர்ணிகை தீர்த்தத்தில் மூழ்கி கரையேறிய அடுத்த நொடி, அரக்கனாக மாறினான்.
தன் கோலத்தைக் கண்டு நடுங்கினான், திரணாசனன்; அச்சமயம், அங்கு வந்த நாரதர், அரக்க வடிவிலிருந்த திரணாசனனைப் பார்த்து, 'யார் நீ?' எனக் கேட்டார்.
நடந்தவை அனைத்தையும், நாரதரிடம் கூறி வருந்தினான், திரணாசனன்.
'திரணாசனா... உன் மனதில், இது உயர்வு, தாழ்வு என்ற பேதங்கள் உள்ளன. இந்த எண்ணங்களால் தான் உனக்கு அரக்க தோற்றம் கிடைத்துள்ளது. நீ, மறுபடியும், திருப்பூவணநாதர் கோவிலுக்கு சென்று சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கு. பிரம்ம தீர்த்தத்தில் நீராடு; உன் குற்றம் நீங்கும். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாளில், அத்தீர்த்தத்தில் மூழ்கினால், உன் அரக்க வடிவம் மாறும். காசி முதலான இடங்களில் செய்த பாவங்கள் கூட, இத்திருப் பூவணத்தில் தீரும்...' என்றார்.
நாரதர் வாக்குப்படியே செயல்பட்டான், திரணாசனன். அவனுடைய அரக்க வடிவம் நீங்கியது; அம்பாளையும், சிவபெருமானையும் வணங்கி துதித்து, வீடு பேற்றையும் பெற்றான்.
இத்தகவலை, 'மெத்தத்தருக்கு, திரணாசனார் தம் மணுக்கராக அரக்க உருவொழித்த அம்மான்...' என்று, 'திருப்பூவணநாதருலா' எனும் நூல் கூறுகிறது.
தெய்வங்களுக்குள் மட்டுமல்ல மனிதர்களுக்குள்ளும் உயர்வு, தாழ்வு கற்பிப்பது, பெரும் பாவம். மனப் பேதங்களை களைந்து, துாய்மையான மனதோடு இறைவனை வழிபடுவோம்; நற்பேறு பெறுவோம்!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
இனிமையாக பேசுவதால்...
வீட்டுக்கு வருவோருக்கு அவர் கேட்காமலேயே, தாக சாந்திக்கு, தண்ணீர் கொடுப்பவனும், சோர்வுடன் வருவோருக்கு ஓய்வு எடுக்க, பாய் கொடுப்பவனும், தனக்கு கஷ்டமிருந்தும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இனிமையாக பேசி, சமாளிப்பவனுக்கும், பெரிய பூஜை செய்த பலன் கிடைக்கும்.

