தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மகான்களை சோதிக்கலாமா?

மகான்களை சோதிக்கலாமா?

மகான்களை சோதிக்கலாமா?


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்ணையில் அமர்ந்து இருந்தார், மகான் ஒருவர். பல ஆண்டுகளாகவே அந்த திண்ணை தான், அவரது இருப்பிடம்.

மகான் இருந்த அதே ஊரில், பால் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர், தினமும் பாலை கேன்களில் நிரப்பி, சைக்கிளில் கட்டி, அக்கம் பக்கத்து இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து திரும்புவார். அவ்வாறு அவர் போகும்போது, 'சாமி... பால் வேணுமா?' என, கேட்பார்.

மகானும், 'வேண்டாம்பா...' என்பார்.

யாராவது அந்த மகானுக்கு, காபியோ, -தேநீரோ வாங்கித் தருவர். அதை, அந்த மகான் ஏற்பார். அதிலும் ஒரு சிலர் அளிப்பதை, அவருக்கு விருப்பமிருந்தால் மட்டும் தான் ஏற்பார்.

ஒருநாள், வியாபாரத்திற்கு கிளம்பிய பால் வியாபாரி, மகானிடம், 'சாமி, பால் வேணுமா?' என, கேட்டார்.

மகானோ வழக்கத்திற்கு மாறாக, 'ஆமாம்பா, பால் வேண்டும்...' என்றார்.

பால் வியாபாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

'ஆகா, சாமி இன்னிக்காவது கேட்டாரே...' என்று, சைக்கிளை நிறுத்தி, பின் பகுதியில் கட்டியிருந்த 25- லிட்டர் கேனை எடுத்து வந்து, மகான் முன் வைத்து திறந்தார். அதிலிருந்து கொஞ்சம் பாலை ஊற்றி தந்தார்.

மகான் அதைக் குடித்து விட்டு, மேலும் கேட்டார். வியாபாரியும் கொடுத்தார். மறுபடியும் மகான் கேட்க, வியாபாரி கொடுக்க என, கொண்டு வந்த பால் எல்லாம் தீர்ந்து போய் விட்டது.

'வியாபாரம் செய்ய, பாலுக்கு என்ன செய்வது?' -என்று கவலைப்பட்டார், வியாபாரி.

மகானோ, 'நல்லது, நீ போய் வா...' என்று சொல்லி, பால் வியாபாரியை அனுப்பி விட்டார்.

ஒரு சில நிமிடங்கள் ஆகின. மகான் வாயைத் திறந்தார். அவர் வாயிலிருந்து வெள்ளம் போல், பால் வெளிப்பட்டு, வீதியில் ஓடியது. அனைவரும் ஆச்சரியப் பட்டனர்.

மகானை நெருங்கி, 'சாமி, பாவம் பால்காரர் பயந்திட்டாரு...' என்றனர், அடியார்கள் சிலர்.

'வியாபாரத்திற்கு பால் இல்லையே, என்ன செய்வது என்ற கவலையால், அவருக்குப் பயம் வந்து விட்டது. அவர் விற்பதற்காக வைத்திருந்த பாலில், இரண்டு தேள்களும், ஒரு பல்லியும் விழுந்து விட்டன. பால்காரருக்கு இது தெரியாது.

'இந்த பாலை, எத்தனை பேர் குடிப்பர்? அவர்கள் நிலை, அதன் பின் பால்காரர் நிலை என்னவாகும்? அதற்காகவே இப்படி செய்தேன்...' என்று சொல்லி சிரித்தார், மகான்.

அடுத்தவர்களை காப்பாற்ற அவ்வாறு செய்த மகான் யார் தெரியுமா? 20-ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் சித்தியடைந்த, -பூண்டி மகான்.

மகான்கள் எது செய்தாலும், அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதை புரிந்து கொள்ளாமல், அவர்களை சோதித்துப் பார்க்கக் கூடாது.

பி. என். பரசுராமன்

ஆன்மிகதகவல்கள்!

சிவன் கோவிலில், வில்வ மரக்கன்றும், விஷ்ணு கோவிலில், துளசி செடியும் வைத்து, யார் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ, அவர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us