sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கேலி சித்திரம்!

/

கேலி சித்திரம்!

கேலி சித்திரம்!

கேலி சித்திரம்!


PUBLISHED ON : ஏப் 14, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 14, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினப்பூக்கள் பத்திரிகை அலுவலகம். வாகன நிறுத்துமிடத்தில், ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தினான், மாணிக்.

மாணிக்கின் இயற்பெயர், மாணிக்கவாசகம். வயது, 32, திராவிட நிறம். சுருள் தலைகேசம். சகலத்தையும் ஆராயும் கண்கள். சாப்பிடும் நேரம் தவிர, மீதி நேரங்களில் திறக்காத வாய். கழுத்தில் ஒற்றை உத்திராட்ச மாலை, வெள்ளை நிற காட்டன் சட்டை, கறுப்பு நிற ஜீன்ஸ். 'லேஸ்' தேவைப்படாத ஷூ அணிந்திருந்தான்.

வளர்ந்து வரும் ஒரு கார்ட்டூனிஸ்ட், மாணிக், தினப்பூக்கள் இதழில் பணிபுரிகிறான். அதன் ஞாயிற்றுக்கிழமை பதிப்புகளில், அவன் வரைந்து வரும் கார்ட்டூன் பட்டை, தமிழ் மக்களிடையே மிக பிரபலம்.

மாணிக்கின் கேலி சித்திரங்களில், ஒரு மேன்மைபடுத்தப் பட்ட வக்கிரம் ஒளிந்திருக்கும். அவனின்

கைகளில் சிக்கி சின்னாபின்னப் படாத அரசியல்வாதிகளே இல்லை. அவனின் கேலி சித்திரம், ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி பற்றிய வெகுஜன அபிப்ராயத்தை தலைகீழாக்கி விடும்.

சிறுகதைகள், கட்டுரைகள் வாசிக்காத வாசகர்கள் கூட, அவனின் தொடர் கேலி சித்திர பட்டையை நொடியில் பார்த்து சிரித்து விடுவர்.

அவன் சட்டை பையில், கார்ட்டூனிஸ்ட் மதனின் புகைப்படம் எப்போதும் காட்சியளிக்கும். முதுகலை அரசியல் விஞ்ஞானம் படித்தவன், சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டான்.

தன் அறைக்கு நடந்தான்.

மறுநாள், ஞாயிறு பதிப்பில் வரவேண்டிய கார்ட்டூன் பற்றி யோசித்தவன், ஒரு தமிழக அரசியல்வாதியை வரைய முடிவெடுத்தான்.

முதல் கேலி சித்திரத்தில், அந்த அரசியல்வாதி குரங்கு வடிவம் எடுத்து, மரத்துக்கு மரம் தாவுகிறார். இரண்டாவதில், அந்த அரசியல்வாதி, பூனை வடிவம் எடுத்து, 'நான் சைவம்... எலிகள் சாப்பிட மாட்டேன்...' என்கிறார்; அவர் தோளில் தொங்க விட்டுள்ள பையில், எலிகள் தலை நீட்டுகின்றன.

மூன்றாவதில், அந்த அரசியல்வாதி, சாத்தான் வடிவம் எடுத்து, வேதம் ஓதுகிறார்; 'ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை துாக்கிலிட வேண்டும்...' என, ஓதும் அரசியல்வாதி, பண மூட்டை மீது அமர்ந்திருக்கிறார்.

நான்காவதில், அந்த அரசியல்வாதி, 'டிராகுலா' வடிவம் எடுத்து, மக்களின் கழுத்தை கடித்து, ரத்தம் குடிக்கிறார்.

மீதி ஆறு கேலி சித்திரங்களில், அந்த அரசியல்வாதி ஆறுவித, 'கெட் - அப்'களில். 10வதில் அந்த அரசியல்வாதி, 'ஹி... ஹி... அரசியலில் என் தசாவதாரங்கள் தொடரும்...' என்கிறார்.

தொடர் கேலி சித்திர பட்டையை வரைந்து முடித்து, ஆசிரியரின் அறைக்கு எடுத்து போனான், மாணிக்.

''இனிய காலை வணக்கம் ஐயா!''

''இனிய காலை வணக்கம், மாணிக்!'' சிரித்தார், ஆசிரியர்.

''உன்னை பார்த்தாலே, நீ வரைந்த கேலி சித்திரங்கள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன. கனவிலும், நனவிலும் அரசியல் விழிப்புணர்வு கூடிய சிரிப்பு மூட்டுகிறாய்!''

''நன்றி!''

தசாவதார கேலி சித்திர பட்டையை நீட்டினான்.

வாங்கியவர், ஆழமாக உறுத்தார்.

''ரொம்ப, பாதிப்பாக இருக்கே, மாணிக்!''

''அவர், இந்த கேலி சித்திர விமர்சனத்துக்கு மிக மிக தகுதியானவர்.''

''பூனை, குரங்கு, டிராகுலா மற்றும் சாத்தான் என, பல வடிவங்களில் அவரை, நீ வரைந்திருந்தாலும், அவரின் முகம் பிரத்தியேகமாக தெரிகிறது. அவர் முகத்தில் நீள அகல நெளிவு சுளிவுகளை கரைத்து குடித்திருக்கிறாய்... வாழ்த்துக்கள் தொடர்ந்து அசத்து!''

''நீங்கள் தரும் சுதந்திரத்தை நெஞ்சார சிலாகிக்கிறேன்!''

''யாராவது உன்னை, நேரிலோ, போனிலோ மிரட்டுகின்றனரா?''

''மிரட்டுகின்றனர்... ஆனால், அவர்களை நான் பொருட்படுத்துவதில்லை!''

''எச்சரிக்கையாக இரு, மாணிக்!''

அவனின் தொடர் கேலி சித்திர பட்டையை கையெழுத்திட்டு, செய்தி பிரிவுக்கு அனுப்பினார், ஆசிரியர்.

''நான் கிளம்பறேன், ஐயா!''

ஸ்கூட்டியை கிளப்பினான். சென்னை, மந்தைவெளிபாக்கத்தில் இருக்கும் தன் அடுக்கு மாடி குடியிருப்புக்கு பறந்தான். மனைவி, செங்கல்பட்டில் இருக்கும், அவளது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தாள்.

குளிர்சாதன பெட்டியிலிருந்து, ஒரு பாட்டில் பியரை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான்.

சுவர்களில், இந்தியாவின் பிரபல கேலி சித்திர ஓவியர்களின் புகைப்படங்கள் சிரித்தன.

'சியர்ஸ் குருநாதர்ஸ்!'

வெண்ணெய் தடவிய, நான்கு ரொட்டி துண்டுகளை தின்றான்.

இரண்டு மணி நேரம் துாங்கி எழுந்தான். மாலை, 6:00 மணியிலிருந்து, நள்ளிரவு, 12:00 மணி வரை, தமிழ், ஆங்கில, சர்வதேச செய்தி சேனல்களை பார்த்தான்.

ஞாயிற்றுக்கிழமை காலை, 6:00 மணி.

அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்த மாணிக்கை, கைபேசி விடாமல் சிணுங்கி எழுப்பியது.

கைபேசியை எடுத்து காதில் இணைத்தான். எதிர்முனையில், அவன் மனைவி.

''குட்டிம்மா எப்படி இருக்க?''

''இன்றைய தினப்பூக்களில் நீங்க வரைந்திருந்த கார்ட்டூனை பார்த்தேன். அந்த அரசியல்வாதியை மகா மட்டமா இழிவுபடுத்தி இருக்கீங்க... தேவையா... அரசியல்வாதிகள் பழி வாங்கறதுல கில்லாடிகள்... என்னை, இளம் விதவையாக்க திட்டம் போடுறீங்களா?''

''ஒவ்வொரு மனிதனும், பிறந்த நொடியிலிருந்தே மரணத்தால் துரத்தப்படுகிறான். ஆபத்தில்லாத தொழில் எது... பயப்படாதே, நான் குடுகுடு கிழவனாகி தான் இறப்பேன்!''

''எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.''

''சரி!''

தமிழ்நாடு முழுக்க அந்த அரசியல்வாதியின் கைக்கூலிகள், மொத்தமாக தினப்பூக்கள் வாங்கி எரித்தனர்.

சமூக ஊடகங்களில், மாணிக்கின் தொடர் கேலி சித்திரத்தை ஆதரித்து, எதிர்த்து விமர்சனங்கள் கிளம்பின.

சிக்கன் வாங்க கிளம்பினான், மாணிக். சிக்கன் துண்டாடும் ஆசாமி, அவனை ஓரக்கண்ணால் பார்த்து, நமட்டு சிரிப்பு சிரித்தான்.

துாரத்தில் ஒரு கறுப்பு நிற கார் வந்து நின்றது. அதிலிருந்தவர்களின் எட்டு கண்களில் கொலை வெறி மிளிர்ந்தது.

தன்னை, ஒரு கறுப்பு நிற காரில் இருந்தவர்கள் கண்காணிப்பதை பார்த்து விட்டான், மாணிக். நேரே வீட்டுக்கு போகாமல், சந்து பொந்துகளில் எல்லாம் ஸ்கூட்டியை ஓட்டி, இரண்டு மணி நேரம் போக்கு காட்டினான்.

துரத்தி வந்த காரை காணவில்லை. ஆசுவாச பெருமூச்சு விட்டபடி, குடியிருப்பு கதவை திறந்தான். சடாரென யாரோ அவனை நெட்டித் தள்ளினர். விழுந்த அவனின் நெஞ்சில் இருவர் ஏறி அமர்ந்தனர். ஒருவன் கையில் பிஸ்டல் மின்னியது.

பிஸ்டலை எடுத்து, மாணிக்கின் நடு நெற்றியில் பொருத்தி, ''ட்ரிக்கரை அமுக்கினா, மூளை சிதறி செத்துருவ.''

இரண்டாமவன், ஒரு கத்தியை எடுத்து, ''உன் வலக்கைதானே, என் தலைவனை பத்தி கார்ட்டூன் போட்டுச்சு... வெட்டிடவா?''

''துப்பாக்கியாலயும், கத்தியாலேயும் ரத்தக் காயம்பட விரும்பலைன்னா, மூன்றாவது, மாடியில இருந்து குதிச்சு செத்து போயிடு.''

''பேசாம, விஷ ஊசி போட்டு, இவனை கொன்னுடலாமா?''

நெஞ்சில் அமர்ந்திருந்த இருவரையும் சிதற்றி, துள்ளி எழுந்தான், மாணிக்.

''தைரியம் இருந்தா, துப்பாக்கியையும், கத்தியையும் துாக்கி போட்டுட்டு சண்டைக்கு வாங்கடா!''

வந்தவர்கள் சிரித்தனர்.

''என்ன ப்ரோ... பயந்துட்டியா... நாங்க, கைக்கூலிகள் தான், அடியாட்கள் தான், அல்லக்கைகள் தான். ஆனா, கொஞ்சம் ரசனை உள்ள ஆசாமிகள். எங்க தலைவனை பத்தி நீ போட்டுருக்கிற கார்ட்டூன்களை பார்த்த கணம், கோபம், பூகம்பமா வெடிச்சுச்சு. ஆனா, மறுகணம் புகைய புகைய சிரிப்பு பூத்துச்சு.

''எங்க தலைவன் மூஞ்சியை, 20 வருஷமா, பக்கத்துல இருந்து பார்த்துட்டு வறோம். எங்களுக்கு தெரியாத சில அம்சங்களை நீ வரைஞ்சிருக்க... வட்டமாகி, மாவட்டமாகி, அமைச்சராகி, முதல்வராகணும்கிற கனவுல தான் தலைவனுக்கு கூஜாவா, அடிபொடியா இருக்கிறோம்.

''ஊழல்ல உச்சம் தொட்ட அரசியல்வாதிகளை மட்டும் தான் கார்ட்டூனா போடுற... நீ, கார்ட்டூன் போடுற அளவுக்கு நாங்க ஊழல்ல உயரணும்னா, 30 - 40 வருஷம் ஆகும். அதுவரைக்கும் நீ உயிரோடு இருப்பியோ, இல்ல நாங்க உயிரோட இருப்போமோ... அதனால, நாங்க உன்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கிறோம்!''

''என்ன?''

''நாங்க நாலு பேரு வந்திருக்கிறோம். எங்க நாலு பேரையும் கேலி சித்திரமா வரைஞ்சு கொடு... நீ எங்களுக்கு குடுக்கிற கார்ட்டூன் கவுரவத்தை காலத்துக்கும் மறக்க மாட்டோம். நீ வரைஞ்சு குடுக்கிற கார்ட்டூனை, 'பிரேம்' பண்ணி வீட்டுல பத்திரமா பாதுகாப்போம்!''

''உங்க நாலு பேரையும் ஒண்ணா இணைச்சு, ஒரே கார்ட்டூனா போட்டு தர்றேன்... நாலு காப்பி எடுத்துக்குங்க!''

ஒரு கார் வந்தது... அதில், இடப்பக்கம் இருவரின் ஆயுதம் தாங்கிய தலைகளும், வலப்பக்கம் இருவரின் ஆயுதம் தாங்கிய தலைகளும், காருக்கு வெளியே எட்டிப் பார்த்தன. காருக்கு முன்னே, 'முதல்வர் மாளிகை' என, குறிப்பிடப்பட்ட மைல் கல் தெரிகிறது.

'வரைஞ்ச கைக்கு திருஷ்டி சுத்தி போடணும்...' நால்வரும் கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டனர். கசங்கிய ரூபாய் தாள்களை பிரித்து நீவி எண்ணினர்.

''இலவசமா எதையும் வாங்கக் கூடாது. இந்தா, கார்ட்டூனுக்கான சன்மானம், 2,000 ரூபாய்,'' என, மறுக்க மறுக்க, மாணிக் கைகளில் திணித்தனர்.

''பத்ரமா இருந்துக்க... நாங்க வர்றோம்!''

அடுக்கு மாடி குடியிருப்புக்கு எதிரே இருந்த கோவில் வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு பணத்தை பகிர்ந்து அளித்து, குடியிருப்புக்கு நடந்தான், மாணிக்.

ஆர்னிகா நாசர்






      Dinamalar
      Follow us