sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வானபிரஸ்தம்!

/

வானபிரஸ்தம்!

வானபிரஸ்தம்!

வானபிரஸ்தம்!


PUBLISHED ON : ஜூலை 04, 2021

Google News

PUBLISHED ON : ஜூலை 04, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவன் ஆனந்த், ஆபிசிலிருந்து வரும் அந்த நொடிக்காக, பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள், அனிதா.

உள்ளே நுழைந்ததும், உடை மாற்ற, தன் அறைக்குப் போனான், ஆனந்த்.

அவன் பின்னாலேயே போய், ''என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா... இரண்டு மூன்று நாட்களாக, மாமா (அதாவது ஆனந்தின் அப்பா; அனிதாவின் மாமனார்) ஏதோ பரபரப்பாக இருக்காரே கவனிச்சீங்களா... நேத்து வெளியே போயிட்டு வந்தபோது, கையில் புடவை கடை பை மாதிரி இருந்தது.

''முந்தா நாள் போனபோது, கையில், 'பேங்க் பாஸ்புக், செக் புக்' எடுத்துட்டு போனார். திரும்பி வரும்போது, கையில் ஏதோ நகை பெட்டி மாதிரி இருந்தது. உள்ளே எடுத்து போய் அலமாரியில வைச்சுப் பூட்டிட்டாரு. உங்ககிட்டே ஏதாவது சொன்னாரா... யாருக்காக வாங்கியிருப்பார்...

''சாதாரணமாக ஏதாவது வாங்கினா, என்கிட்ட காண்பிச்சுட்டுதான் உள்ளே வைப்பாரு. இரண்டு நாட்கள் ஆகியும், வாங்கி வந்ததை காட்டவும் இல்லை; ஒண்ணும் சொல்லவும் இல்லை,'' என்று, படபடவென்று பொரிந்து தள்ளினாள், அனிதா.

''வேற யாருக்குடி வாங்கியிருக்கப் போறார்... உனக்கோ, இல்லை தன் பேத்திக்கோ கொடுக்கத் தான் வாங்கியிருப்பார். ஏதாவது விசேஷத்தின் போது எடுத்துக் குடுத்துடப் போறாரு... அதுக்குள்ளே உனக்கென்ன அவசரம். பொறுமையா இரு, பார்த்துக்கலாம்,'' என்று சொல்லி, அவள் வாயை அடைத்தான்.

யோசித்து யோசித்து, மண்டையே வெடித்து விடும் போல இருந்தது, அனிதாவிற்கு.

சாதாரணமாக, அப்பா என்ன செய்தாலும் அவனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுத்தான் செய்வார். என்ன தான் இருந்தாலும், மனைவியின் எதிரே அப்பாவை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று, அவள் எதிரே காட்டிக் கொள்ளாமல், குழம்பித் தவித்தான்.

அடுத்த நாள் காலையில், ஆபிஸ் கிளம்புவதற்கு முன், ''அப்பா, உங்களுக்கு கைச்செலவுக்கு பணம் ஏதாவது வேணுமா... கொடுத்துட்டு போகட்டுமாப்பா,'' என்று கேட்டான்.

''அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்பா. நீ போன மாசம் கொடுத்ததே கையில் இருக்கு. அப்படியே ஏதாவது திடீர் தேவையிருந்தா அனிதாகிட்டே வாங்கிக்கறேன்பா,'' என்று சொல்லி, செய்தித்தாளில் மூழ்கி விட்டார்.

அப்பாவின் பதிலால் குழப்பமடைந்த ஆனந்த், யோசித்தபடியே, ஆபீசுக்கு கிளம்பினான்.

மாலையில் வேலை முடிந்து, வீட்டுக்கு வரும் வழியில், மொபைல் போன் அடித்துக் கொண்டே இருந்தது. ஸ்கூட்டர் ஓட்டி வந்ததால் போனை எடுக்கவில்லை.

வீட்டில் நுழைந்தவுடன், ''என்னங்க, எத்தனை தடவை போன் பண்றது. எடுக்கவேயில்லை நீங்க?'' என்ற மனைவியின் தொணதொணப்பில், எரிச்சலானான், ஆனந்த்.

''என்ன அப்படி தலை போகிற விஷயம்? வண்டியில வந்துட்டு இருந்தேன்; அதான் எடுக்கலை,'' என்றான் கோபத்துடன்.

''வர வர, உங்க அப்பா போக்கு சரியில்லைங்க. காலையில் சந்தோஷமா பாட்டு பாடிட்டு இருந்தார். சாயந்திரம், 'டிப் டாப்'பா உடை உடுத்தி, பவுடர், நெற்றியில் சந்தனம் தீற்றி, கைத்தடியை எடுத்துண்டு, 'அடையாறு பார்க்கில் யாரையோ முக்கியமானவரை பார்க்கப் போறேன். 'நைட் டின்னர்' வெளியே சாப்பிட்டுட்டுத் தான் வருவேன். எனக்காக காத்திருக்க வேண்டாம்...' என்று சொல்லி, கிளம்பிட்டார்.

''சமீபத்தில் வாங்கின சாமான்களை எல்லாம், 'பேக்' பண்ணி ஒரு பையில் போட்டு எடுத்துக்கிட்டு போறாருங்க. அவர் போக்கு, எனக்கு சரியா படலைங்க. சீக்கிரம் கிளம்புங்க, நேரில் போய் அவரை கையும் களவுமாப் பிடிக்கணும். நம் பையனை பக்கத்து வீட்டுக்கு அனுப்பிச்சுட்டேன். நாம வர வரைக்கும் அங்கேயே விளையாடிட்டு இருப்பான். வாங்க போகலாம்,'' என்றாள், அனிதா.

''நீ சொல்ற மாதிரி என்ன விஷயம்ன்னு கண்டுபிடிப்போம். இரு, 10 நிமிஷத்தில் கிளம்பறேன்,'' என்று சொல்லி, உடை மாற்றாமல், அவசரமாக காபியை குடித்து, மனைவியுடன் ஸ்கூட்டரில் கிளம்பினான், ஆனந்த்.

பெசன்ட் நகரில் இருந்து, அடையாறு பார்க் ஒன்றும் அதிக துாரமில்லை. இருந்தாலும், மாலை நேர டிராபிக். அந்த இடத்தை அடைவதற்குள் இருட்டி விட்டது.

ஸ்கூட்டரை நிறுத்தத்தில் வைத்து, கணவனும், மனைவியும் பார்க்கை நோக்கி நடந்தனர்.

பார்க்கில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து, யாருடனோ பேசிக் கொண்டிருந்தார், அப்பா. அருகில் இருந்த பெண்ணை, அப்பாவின் உருவம் மறைத்ததால் அவர்களால் சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால், பையைத் திறந்து ஏதோ சாமான்களை அப்பா எடுத்துக் கொடுப்பது நன்றாகத் தெரிந்தது.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

ஒரு பெரிய காரின் மறைவில், அப்பாவின் கண்களுக்கு தெரியாதபடி, அனிதாவும், ஆனந்தும் நின்றிருந்தனர்.

கேட்டிற்கு அருகே வந்தவுடன், அந்த பெண்ணின் உருவம் நன்றாக கண்களுக்கு புலப்பட, இருவரும் அதிர்ச்சியில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கண்களில் கண்ணீர் பெருகியது. 'அம்மா...' என்று தொண்டை வரை குரல் வந்தது, ஆனந்துக்கு.

'சே... அப்பாவை, கீழ்த்தரமா நினைச்சு, அவரை வேவு பார்க்க வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். எல்லாம், இவளால் தான் வந்தது...' என்று, கோபத்துடன் அனிதாவை பார்க்க, அவளும் தலைகுனிந்தாள்.

அப்பா - அம்மா இருவரும், கைகளை கோர்த்தபடி, எதிரே இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

தன் ஸ்கூட்டரை அங்கே நிறுத்தி இருந்ததால், அவர்கள் கண்ணில் படாமல் எப்படி எடுப்பது என்ற தயக்கத்தில் இருந்தான், ஆனந்த்.

அதற்குள், யாரோ மெல்லிய குரலில், ''ஆனந்த் ஆனந்த்...'' என்று கூப்பிடுவது கேட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான்.

எதிரிலிருந்து ஆனந்தின் தம்பி வசந்தும், அவன் மனைவி வேணியும் வந்தனர்.

''அண்ணா, நீங்கள் எங்கே இப்படி?'' என்று, வசந்த் கேட்க, ஆனந்தும், அனிதாவும் திருதிருவென்று முழித்தனர்.

அப்பாவை வேவு பார்க்க வந்ததாக சொல்ல முடியுமா!

தங்களைப் போலவே, அவர்களும் அம்மாவை தொடர்ந்து வந்திருக்க வேண்டும் என்பது, அப்போது தான் புரிந்தது, ஆனந்துக்கு.

நால்வரும் தங்களின் நிலையை புரிந்து, என்ன பேசுவதென்று தெரியாமல் நெளிந்தனர்.

தவறை எல்லாம் தங்களிடம் வைத்து, அப்பா - அம்மாவை சந்தேகத்துடன் பின்தொடர்ந்து வேவு பார்த்தது, எவ்வளவு கேவலமான செயல் என புரிந்தது.

ஆனந்தின் அப்பா, மத்திய அரசு அலுவலகத்திலும்; அம்மா வங்கியிலும், வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். அப்பா, ஆனந்துடனும்; அம்மா, வசந்துடனும் இருக்கின்றனர்.

இருவரும் ஓய்வு பெற்றதும் கிடைத்த பணம் மற்றும் தங்களின் பல ஆண்டு சேமிப்பில், இரண்டு மகன்களுக்கும், தங்களுடைய பரிசாக இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தனர்.

'எல்லாப் பணத்தையும் பசங்களுக்கே செலவழிச்சிட்டு நீங்கள் ஒன்றுமே வைத்துக் கொள்ளவில்லையே...' என்று, நண்பர்கள் கேட்டபோது, 'எங்களுக்கென்ன வேணும் இனிமேல்... இருவரும் போட்டி போட்டு, எங்களைப் பார்த்துக் கொள்வர்...' என்று பெருமை அடித்துக் கொண்டார், அப்பா.

சில ஆண்டுகள் ஓடின. இருவரும் மாறி மாறி மகன்களுடன் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், 'இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய வேலை கூடுகிறது...' என்று, மருமகள்கள் போர்க் கொடி உயர்த்த, அம்மா ஒரு வீட்டிலும், அப்பா ஒரு வீட்டிலும் என்று முடிவு செய்து, வயதான காலத்தில், முதியவர்களை பங்கு போட்டு, ஜோடி பறவைகளை பிரித்து விட்டனர்.

பெரியவன் ஆனந்துக்கு, ஒரு மகன். அனிதா, வேலைக்குப் போகவில்லை.

சின்னவன் வசந்தின் மனைவி வேணி, வேலைக்குப் போகிறாள். அது மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. அதனால், அம்மா தங்களுடன் இருக்கட்டும் என்று முடிவு செய்து, தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டான், வசந்த். அப்பா, ஆனந்த் வீட்டில் இருப்பார் என்று, அவர்களாகவே முடிவு செய்தனர்.

இரண்டு ஆண்டுகளில் பெற்றோர் இருவரும் சந்தித்துக் கொண்டது மூன்று, நான்கு முறை தான். ஏனென்றால், அனிதாவிற்கும், வேணிக்கும் அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது. அடிக்கடி சந்திப்பதை தவிர்த்து விடுவர்.

குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று, அவரவர் இடத்தில், 'அட்ஜஸ்ட்' செய்து, அமைதியாகவே இருந்தனர், பெற்றோர்.

நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, தயங்கித் தயங்கி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பாவும், அம்மாவும் சாப்பிட்டு, வெளியே வந்தனர்.

மகன்களையும், மருமகள்களையும் பார்த்து, ''அட, நீங்கள் இரண்டு பேரும் எப்படா வந்தீங்க? உள்ளே வந்திருந்தால் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாமே... இன்று, எங்களின், 40வது திருமண நாள். திடீரென்று, 'பிளான்' போட்டு சந்தித்தோம். அம்மாவிற்கு, 'சர்ப்ரைஸா கிப்ட்' வாங்கி வச்சிருந்தேன். இதோ பாருங்கள்,'' என்று சிரித்தபடியே, அவர்களிடம் புடவையையும், தங்க வளையல்களையும் காண்பித்தார், அப்பா.

'சே, இதைக் கூட நாம் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லையே...' என்ற குற்ற உணர்வில், இருவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

'ஹேப்பி அனிவர்சரிப்பா... ஹேப்பி அனிவர்சரிம்மா...' என்று கூறி, அனைவரும் ஆசிர்வாதம் வாங்கினர்.

வசந்திடம், ''இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, அம்மாவையும் உன் மனைவி, குழந்தையை அழைத்து, ஆனந்த் வீட்டுக்கு வா. முக்கியமான விஷயம் பேசணும்,'' என்றார், அப்பா.

'மனதிற்குள் என்ன விஷயமாக இருக்கும்...' என்று கவலையுடன் அனைவரும் கலைந்தனர்.

ஞாயிறு மாலை -

''எனக்கும், அம்மாவுக்கும் கொஞ்சம், 'அரியர்ஸ்' பணம் வந்திருக்கிறது. அதை வைத்து நாங்கள், ஓ.எம்.ஆரில் இருக்கும், 'சீனியர் சிட்டிசன் ஹோமிற்கு' பணம் கட்டி விட்டோம். ஒரு அறை, சமையலறை, கழிவறை வசதியுடன் தனி ப்ளாட். பணம் கட்டினால், அங்கேயே சாப்பாடு கிடைக்கும்.

''என் நண்பர்கள் பலர், அங்கே இருக்கின்றனர். வசதியாக இருக்கிறதாம். எங்களின், 'பென்ஷன்' பணத்தை வைத்து, மாதாந்திர பணத்தைக் கட்டி, செலவை சமாளித்து விடுவோம். இனி, பிரிந்திருக்க வேண்டாம். அடுத்த மாதமே அங்கே போகலாம் என்று முடிவு செய்து விட்டோம். உங்களுக்கு முடியும்போது, எங்களை வந்து பார்த்தால் போதும். இந்த ஏற்பாடு எல்லாருக்குமே வசதியாக இருக்கும்,'' என்று, சொல்லி முடித்தார், அப்பா.

பதில் பேச முடியாமல், ஆனந்தும், வசந்தும் தங்கள் மனைவியரை பார்க்க, அவர்களும் வாயடைத்து நின்றனர்.

பேரனும் - பேத்தியும் ஓடி வந்து, ''தாத்தா - பாட்டி, நீங்க இருவரும் எங்க கூடத்தான் இருக்கணும். எங்கேயும் போகக் கூடாது,'' என்று கெஞ்சினர். அதற்குப் பிறகு, தங்கள் தவறை உணர்ந்த, மகன்களும் - மருமகள்களும், தங்களுடனே இருக்கும்படி பெற்றோரை வற்புறுத்த, புன்முறுவலுடன் மறுத்தார், அப்பா.

இதுவும் ஒரு, வானப்ரஸ்த வாழ்க்கை தான் முதியவர்களுக்கு.

அவர்கள், இனியாவது மனநிறைவுடன் சேர்ந்தே இருப்பர். இனி, மீதியுள்ள வாழ்க்கை இனிக்கட்டும்!

புவனா சந்திரசேகரன்






      Dinamalar
      Follow us