
'பாராட்டி சிலர், மாலை போடுகின்றனர்; சிலர், திட்டுகின்றனர். இது, காரணமில்லாமல் நடப்பதில்லை. நாம் செய்த நன்மை, அடுத்தவர்களை விட்டு பாராட்டி, மாலை போடச் செய்கிறது; நாம் செய்த தீமை, அடுத்தவர்களை விட்டு, திட்டச் செய்கிறது...' என்பார், தமிழறிஞரான, கி.வா.ஜ.,
அதுதான் உண்மை. இதை விளக்குவதற்காக, ஓர் அற்புதமான தகவலை சொல்கிறார், வியாசர்.
முனிவர் ஒருவரின் கழுத்தில், இறந்து போன பாம்பை, மாலை போல் போட்டார், பரீட்சித்து மன்னர்.
விபரமறிந்த முனிவரின் மகன், 'இவ்வாறு செய்த அந்த மன்னன், இன்றிலிருந்து ஏழாவது நாள், தட்சகன் எனும் பாம்பு கடித்து இறக்கட்டும்...' என, சாபம் கொடுத்தார்.
தனக்கு சாபம் கிடைத்த விபரமறிந்த மன்னரும், ஒற்றை துாணோடு கூடிய பாதுகாப்பான பெரும் மாளிகையை கட்டச் செய்து, காவல், வைத்தியர்கள், மருத்துவ மூலிகைகள், மந்திரங்களில் வல்லவர்களான வேதியர்கள் என, சகலவித பாதுகாப்புகளுடனும் இருந்தார்.
அதே சமயம், மன்னர், பாம்பு தீண்டி இறக்கப் போகிறார் என்ற தகவல் தெரிந்து, காசிபர் எனும் வேதியர், மன்னரை காப்பாற்ற புறப்பட்டார். அவர், வேதங்களில் மட்டுமின்றி, மந்திரங்களிலும் பெரும் சக்தி படைத்தவர்.
வறுமை நிலையிலிருந்த அவர், மன்னரை அந்த பாம்பின் விஷ உபாதையிலிருந்து காப்பாற்றினால், தனக்கு பெரும் பொருளும், புண்ணியமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில், தேடிப் போனார்.
காசிபரை, வழியில் சந்தித்தான், தட்சகன்.
'சுவாமி, யார் நீங்கள்... எங்கே போகிறீர்கள்...' என, விபரம் கேட்டான்.
'பரீட்சித்து மன்னர், பாம்பு கடித்து இறக்கப் போகிறார். அந்த விஷக் கொடுமையிலிருந்து அவரை காப்பாற்றப் போகிறேன். குருவருளாலும், திருவருளாலும், விஷ முறிவு மருத்துவத்தில் சிறந்தவன், நான்...' என்றார், காசிபர்.
'சுவாமி... அந்த விஷயத்தில் நீங்கள் குறுக்கிடாதீர்கள். மன்னரை தீண்டப்போகும் தட்சகன், நான் தான். என் சக்தி உங்களுக்கு தெரியாது. பரீட்சித்து மன்னனிடம் நீங்கள் எதை எதிர்பார்த்து போகிறீர்களோ, அதை இங்கேயே தருகிறேன். முனிவர் சாபத்தால், ஆயுள் குறைந்தவனான அவனிடம், நீங்கள் செல்ல வேண்டாம்...' என வேண்டினான், தட்சகன்.
உண்மை உணர்ந்த காசிபர், தட்சகனிடமிருந்து தனக்கு வேண்டிய பொருட்களை பெற்று திரும்பி விட்டார்.
பரீட்சித்து மன்னர் செய்த தீய வினை, அவரை தாக்கத் துவங்கியது. அதற்கு எதிராக காசிபர், பரீட்சித்தை காக்க முயன்றார். பரீட்சித்தின் தீவினையின் விளைவாக, காசிபரை தடுத்து திருப்பி அனுப்பி விட்டான், தட்சகன்.
தீவினையின் விளைவை சொல்லி, நம்மை எச்சரிக்கிறார், வியாசர்.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் போன்ற புண்ணிய காலங்களில் முடிந்த தர்மத்தை செய்யுங்கள். அமாவாசை தர்ப்பணம், ஆண்டு திவசம் செய்ய மறக்க வேண்டாம். பசுவுக்கு அகத்திக்கீரை மற்றும் பழம் கொடுங்கள்.