sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பகுத்தறிவு!

/

பகுத்தறிவு!

பகுத்தறிவு!

பகுத்தறிவு!


PUBLISHED ON : ஜூலை 04, 2021

Google News

PUBLISHED ON : ஜூலை 04, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று, இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற மும்முரத்தில் இருந்தாள், திவ்யா. அதன் வெளிப்பாடாக, வீடு முழுக்க புகை மண்டலம்.

ஹாலின் நடுவே, ஹோமம் வளர்க்கப்பட்டு, சுள்ளிக் குச்சிகள் எரிந்தும், கரிந்துமிருக்க, அதன் மேல் நெய் ஊற்றப்பட்டது.

அது, கிரகபிரவேச, கணபதி ஹோமமோ அல்லது 'கொரோனா'வுக்கான நோய் எதிர்ப்பு நடவடிக்கையோ இல்லை. தேர்தலில் வேண்டப்பட்டவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்கான, பரிகார பூஜையும் அல்ல.

திவ்யாவின் வைராக்கியம். வெறி என்று கூட சொல்லலாம். அவள் தலை குளித்து ஈரப் புடவையுடன் வியர்வை சொட்டச் சொட்ட அமர்ந்திருந்தாள்.

எம்.பி.ஏ., படித்து, பார்க்கும் மேன்மையான உத்தியோகத்தையும் மீறி, அவளது கண்களில் காட்டம். பகுத்தறிவு பேசும் கணவனுக்கு எதிர்மறையாய் அவள்.

மொபைல் பார்த்து சுலோகம் சொல்லியும், சமயத்தில் ஆடியோவை தட்டிவிட்டும், தன் சொகுசான வயிற்றை தடவியபடி, தட்சணையில் கருமமே கண்ணாய் இருந்தார், பூசாரி.

இந்த அவசர ஏற்பாட்டுக்கு காரணம், மங்களா. அந்த வீட்டு பணிப்பெண். அங்கு என்றில்லை, அந்த குடியிருப்பில் இருந்த பல வீடுகளிலும் பகுதி நேர உத்தியோகமாய் பறந்து கொண்டிருப்பவள்.

இளம் வயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டு, வஞ்சனை இல்லாமல் மூன்று பிள்ளைகளை தந்துவிட்டு, குடிகார கணவன் விடைபெற்று விட, 25 வயதில் மாரத்தான் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் உடல் நலம், ஆங்கில படிப்பு, தன்னை போல அவர்கள் கஷ்டப்படக் கூடாது என, உழைத்து உழைத்து பூஞ்சையாகி விட்டிருப்பவள். அதிகம் பேச மாட்டாள், மங்களா.

வருவாள், வேலையை முடித்து கிளம்பி விடுவாள். சொல், செயல் எல்லாவற்றிலும் ஒரு சுத்தம் இருக்கும்.

சில (பல) பணிப் பெண்கள் போல, புள்ளைக்கு நோவு, பாட்டிக்கு முடியலை என்று வேலைக்கு, மட்டம் போட்டதில்லை. அந்த கஷ்டம், இந்த கஷ்டம் என்று மாதத்தில் நான்கு முறை, சம்பளத்தை விட அதிகமாய் பறித்து பற்று வைப்பதில்லை.

அதனாலேயே அந்த காலனியில் அனைவருக்கும், குறிப்பாய் பெண்களுக்கு பிடித்திருந்தது. வேலையும் சுத்தம், அதே நேரத்தில் வசீகரிக்க முடியாத உருவத்தால், புருஷன்களிடம் பயப்பட வேண்டாத பாதுகாப்பும் கூட ஒரு காரணம்.

இந்த பூஜை, மங்களாவுக்காக தான். அது, அவளது நன்மைக்காக அல்ல. அவளுக்கு தீமை விளைவிக்க வேண்டும் என்பதற்காக.

ஒரு வாரத்துக்கு முன், காலனியில் காது குத்து நிகழ்வுக்கு போகலாம் என திவ்யா, நெக்லசை தேட, அதை காணவில்லை.

உடனே, கணவன் உமேஷை அழைத்தாள். அவன், 'மீட்டிங்'கில் இருப்பதை அறிந்து, விடாப்பிடியாக அவனது செகரட்டரி மூலம் தொடர்பு பெற்று, 'உங்களுக்கு நான் முக்கியமில்லை. சதா மீட்டிங், மீட்டிங்...' என, கத்தினாள்.

'திவ்யா, சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம். என்ன விஷயம்ன்னு சொல்லு?'

அவள் சொல்லிவிட்டு அழ, 'பீரோ, கட்டில், சமையலறை எல்லாம் பார்த்தியா?' என்றான்.

'பாத்ரூம்ல கூட பார்த்தாச்சு...'

'அப்போ?'

'தெரியல. எனக்கு முதன் முதலா நீங்க வாங்கி கொடுத்தது. ரொம்ப நாட்களுக்கு பின், விசேஷத்துக்கு போட்டுட்டு போகலாம்ன்னு பார்த்தா...'

'கூல்... கூல்... எங்கும் போயிடாது. 'டென்ஷன்' இல்லாம தேடு. நான் சீக்கிரம் வந்திடறேன்...' என்றான்.

உமேஷ் வந்தபோது, 'ரெய்டு' நடந்தது போல தாறுமாறாக கிடந்தது, வீடு.

அவன் நுழைந்ததுமே, அவள், 'ஓ...'வென, அழுதாள்.

வழக்கமாக எப்போ வருவான் என காத்திருந்து, ஒன்றுமில்லாததிற்கெல்லாம் யுத்தம் ஆரம்பிக்கப்படும். என்றாலும் கூட, பூ, பொட்டுடன் மலர்ச்சியுடன் இருப்பாள். ஆனால், இன்று?

'எழவு வீடு போல... தலை வாராமல், முகம் கழுவாமல்... திவ்யா, என்ன இது?' என்றான்.

'என் ரெண்டு லட்ச ரூபா நெக்லஸ்?'

'அதுக்காக, இப்படி இருந்தா, போனது வந்திருமா... போய், 'ப்ரெஷ்' ஆகிட்டு வா...'

திவ்யா, அலுவலகத்தில் எப்படியோ தெரியாது. வீட்டுக்குள் ரொம்ப, 'அசால்ட்!' எதை எங்கு வைக்கிறோம் என்ற வரைமுறை இல்லா அசட்டை.

நகைகளை பலமுறை குளியல் அறையிலும், அடுப்படியிலும், அனாதையாக இருப்பதை அவனே பார்த்திருக்கிறான்.

'வேலைக்காரி வந்து போற இடமாச்சே... இப்படி பொறுப்பில்லாம வைக்கலாமா...' என்று கேட்டால், 'அது, கோல்ட் இல்லை. கவரிங் தான்...' என்பாள், உதாசீனமாக.

'கவரிங்ன்னாலும் அதுவும் காசு போட்டு வாங்கினதுதானே...'

'ஐய... நீங்க அங்கேயும் இங்கேயும் போய் கொட்டுவீங்க. யார் யாருக்கோ அள்ளி வீசுவீங்க. நான் செஞ்சுட்டா மட்டும் குத்தம்...' என்று, வைரஸ் தொற்று ஆரம்பித்து விடும் என்பதால், அதைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை, உமேஷ்.

திவ்யா, ஏனோதானோ என்ற மாதிரி உடையும், அதே ரீதியில் தேநீரையும் கொண்டு வந்து கொடுக்க, 'இன்னிக்கு யார் யாரெல்லாம் வீட்டுக்கு வந்தாங்க?'

'சலவைக்காரன், பால், சிலிண்டர். ஆனா, அவங்க எல்லாருமே வாசலோடு சரி. காலையில ப்ரெண்ட்ஸ் சிலர், டிபன் எடுத்து வந்து, 'ஷேர்' பண்ணி சாப்பிட்டோம். அவங்க, 'சான்ஸ்' இல்லை...'

'அப்புறம்?'

'ஆங்... மங்களா! அவ வந்து ஒட்டடை அடிச்சு, பெருக்கிட்டு போனாள். எனக்கு என்னவோ அவ மேலதாங்க சந்தேகம்...'

'அவ ரொம்ப நல்லவ; பாவம். கஷ்டப்பட்டு பிள்ளைகளை காப்பாத்தறான்னு சொல்லுவியே... அவளுக்கு சேலை, துணிமணி கூட கொடுப்பியே...'

'கூப்பிட்டு கேட்டிரலாமா?'

'கேட்டா ஒத்துப்பாளா?'

'பேசாம அவ வீட்டுக்கு போய் அலசுவோம்...'

'இல்லை. திட்டம் போட்டு எடுத்தவள், வீட்டிலயா வைப்பாள்... இந்நேரம் கடையில வித்திருப்பா...'

'அப்போ என்ன செய்யலாம்... போலீஸ்?'

'ஐயோ, வேணாம். காலனி முழுக்க பாட்டாகும். அதுவுமில்லாம, 'அவ நல்லவ. அப்படி நடக்க மாட்டா'ன்னு தெரு பொம்பளைங்களே, 'சர்டிபிகேட்' கொடுத்து, விசாரணையை கெடுப்பாங்க. எல்லாம் அவங்கவுங்களுக்கு வந்தாதான் தெரியும்...'

அவள் மறுபடியும் அழுகை சீரியலை தொடங்க, 'சீச்சீ அழுதா எல்லாம் வந்திருமா... போனது போகட்டும் விடு, வேறு வாங்கிக்கலாம்...' என்றான், உமேஷ்.

'உங்களுக்கென்ன, எதுக்குமே மதிப்பு கொடுக்கறதில்லை. நீங்க, முதன் முதலா வாங்கிக் கொடுத்த நெக்லஸ்...'

'சரி, நான்தானே வாங்கிக் கொடுத்தேன். அதுக்கு நாதானே அழணும்...' என்று, வெளியே சொல்ல முடியாமல், மங்களாவை வரவழைத்தான், உமேஷ்.

'தோ பார், உண்மையை சொல்லிடு. மனுஷாள்னா தப்பு, தவறு செய்வது சகஜம். ஏதோ ஆசையில எடுத்திருந்தா கொடுத்துரு. உன் பிள்ளைக படிப்புக்கு நான் பணம் தரேன்...' என்றான்.

'ஐயா...' என்று, அவள், இருவரின் காலிலும் விழுந்து, 'அம்மா... நான் அப்படி செய்வேனா... நீங்களுமாம்மா நம்பறீங்க... குழந்தைங்க மேல சத்தியமா நானில்லைங்க...' என்று, அங்கேயே சுருண்டு மூலையில் அமர்ந்து அழுதாள்.

உமேஷ் அலுவலக வேலையாய் வெளியூர் கிளம்ப, திவ்யாவின் வம்படி தோழியரின் இலவச ஆலோசனைப்படி, இன்று, இந்த, சத்ரு சம்ஹார பூஜை நடத்த ஏற்பாடு செய்து விட்டாள்; அதுவும் உமேஷுக்குத் தெரியாமல்.

'இந்த பூசாரி மகா சமத்தர். போலீஸ், சி.ஐ.டி., - சி.பி.சி.ஐ.டி., - சி.பி.ஐ.,க்கு முடியாததையெல்லாம் கூட, இவர் மூலம் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம்...' என, மகளிர் அணி சொல்லிற்று.

'நீங்க வேணா பாருங்க... ஒண்ணு, நகையை அவ கொண்டு வந்து தருவா. இல்லேன்னா, அவளுக்கு நடக்கறதே வேற. விடுற சாபத்துல, 'கொரோனா' வந்து...' என, சபித்தனர்.

நான்கு மணி நேர தொடர் பூஜைக்கு பின், தன் சம்பளத்தை வாங்கியவர், ''கவலைப்படாதீங்க, இன்னும், 24 மணி நேரத்தில், இதோட பலன் தெரியும் பாருங்க,'' என்று சொல்லி, விடைபெற்றார், பூசாரி.

கணவன் வருவதற்குள், பூஜை நடந்த சுவடே தெரியக் கூடாது என, வீட்டை சுத்தம் செய்து காத்திருந்தபோது, ''திவ்யாம்மா, உமேஷ் சார்... கார் விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில...'' என்று, போனில் தந்தியடித்தார், டிரைவர்.

பின்குறிப்பு:

அது பழைய மாடல் நெக்லஸ் என்பதால், உபயோகிக்காமல் சும்மாதானே இருக்கிறது என்று, சத்தமில்லாமல் எடுத்து, நண்பனின் அவசர மருத்துவ தேவைக்கு அடமானம் வைத்திருந்தான், உமேஷ்.

உமேஷிற்கு நேர்ந்த இந்த விபத்துக்கு, பகுத்தறிவு என்ன சொல்கிறது?

1.இன்றைய பூஜை தான் காரணம் 2.அப்பிராணியான மங்களாவின் சாபம்

3.இரண்டும் சேர்ந்து தான்

4.இவை இரண்டுமே இல்லை.

என். சி. மோகன்தாஸ்






      Dinamalar
      Follow us