sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 04, 2021

Google News

PUBLISHED ON : ஜூலை 04, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள சகோதரி —

என் வயது: 58. மனைவி வயது: 53. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மூத்தவளான மகள், திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளி மாநிலத்தில் வசிக்கிறாள்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளான், மகன். அவனுக்கு திருமணம் செய்ய, தரகர் மூலம் ஒரு பெண்ணை பேசி முடித்தோம். அவனுக்கு பார்த்த பெண்ணும் பொறியியல் பட்டம் பெற்று, வேலைக்கு செல்கிறாள்.

திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. அப்போதுதான் சம்பந்தியை பற்றிய சில செய்திகள் அறிந்தேன்.

சம்பந்தியம்மாவின் அம்மா, 80 வயது நிரம்பியவர். அவரை சொந்த ஊரில், சொந்த வீட்டில் தங்க வைத்து, 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு பணியாளரையும் நியமித்துள்ளனர். சாதாரண கவனிப்பு அல்ல, ராஜ கவனிப்பு.

சம்பந்தியம்மாவின் மாமனார், 82 வயதானவர். படுத்த படுக்கையாய் கிடக்கிறார். அவரை, இரண்டு, 'ஷிப்ட்'களில் பணியாளரை நியமித்து, கவனித்து வருகிறார், சம்பந்தியம்மாள். கடமைக்காக கவனிக்கவில்லை, வாழ்நாளின் நோக்கமே, வயதில் மூத்தவர்களை பராமரிப்பது தான் என்ற உயரிய உள்ளம், சம்பந்தியம்மாவுக்கு இருப்பதை உணர்ந்தேன்.

இதைப் பார்த்து எனக்குள் குற்ற உணர்ச்சி பீறிட்டுள்ளது. என் அப்பாவை மிகவும் கொடுமைப்படுத்தினார், மனைவி. கொடுமை தாளாது, அவர் வீட்டை விட்டு போய் விட்டார். உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என, எங்களுக்கு தெரியவில்லை.

என் மனைவி ஒரு டார்ச்சர் பேர்வழி. என் மாமனார் மனநலம் இன்றி, அவரும் சிரமப்பட்டு, எங்களையும் சிரமப்படுத்தி இறந்து போனார். என் மாமியாரை, முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார், மனைவி. மொத்தத்தில், முதியோரை கவனித்துக் கொள்வதில் நாங்கள் மிகப்பெரிய பூஜ்யம்.

மனிதாபிமானத்தின் மறு உருவமாக விளங்கும் எங்கள் சம்பந்தி வீட்டார் எங்கே... சுயநல பிசாசுகளாய் செயல்பட்டு முதியோர்களை முற்றிலும் புறக்கணித்த நாங்கள் எங்கே?

குற்ற உணர்ச்சி, எங்களை பாடாய் படுத்துகிறது. எங்களின் பாவத்தை நாங்கள் எப்படி போக்கிக் கொள்வது, ஆலோசனை வழங்குங்கள், சகோதரி.

இப்படிக்கு,

அன்பு சகோதரன்.


அன்பு சகோதரருக்கு —

வயது முதிர்ந்த கரிக்கட்டைகள், வைரங்கள் ஆகின்றன. வயது முதிர்ந்த மனிதர்கள், அனுபவப் புதையல் ஆகின்றனர். முதியவர்கள் இருக்கும் வீடு, கலங்கரை விளக்கம் போல. இளைஞர்கள் எனும் கப்பலை, திசைகாட்டி கரை சேர்ப்பது முதியவர்களே.

முதியோர் விஷயத்தில், நீங்களும், உங்கள் மனைவியும் எதிர்மறை உதாரணங்கள். உங்கள் சம்பந்தி வீட்டாரோ, முதியோர் பராமரிப்பில் முன் மாதிரிகள்.

இனி, நீங்கள் செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:

* முதியோர் மீதான உங்களின் கடந்த கால செயல்பாடுகளை, சம்பந்தி வீட்டாரிடம் நீங்களாக கூறாதீர்கள். கூறினால், உங்களை இழிவாக கருதுவர். அவர்களாக தெரிந்து கொண்டால், அதை பற்றி அதிகம் பேசாமல் தவிர்த்து விடுங்கள்

* காணாமல் போன உங்கள் அப்பாவை, முழு வீச்சில் தேடுங்கள். கிடைத்து விட்டால், அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள். அவரை அழைத்து வந்து, அன்பாக பராமரியுங்கள்

* முதியோர் இல்லத்தில் இருக்கும் மாமியாரை, வீட்டுக்கு அழைத்து வாருங்கள். முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளச் செய்து, தகுந்த மருத்துவம் பாருங்கள்

* சம்பந்தி வீட்டாரின் மனிதாபிமான நடவடிக்கைகள், மிக நிச்சயம், உங்கள் மகனுக்கு ஒரு பாடமாய் அமையும். உங்களை போல அல்லாது உங்கள் மகன், மென்மையாகவும், கருணையாகவும் நடந்து கொள்வான். எதிர்காலத்தில் உங்களது ஜாகை, முதியோர் இல்லத்தில் அமையாது.

பெற்றோரின் அனுசரணையான உள்ளம், உங்களது மருமகளுக்கு அமையப் பெற்றிருக்கும். உங்களுக்கு எதிராக, உங்களது மகன் ஏடாகூடமாய் செயல்பட்டால், குறுக்கே விழுந்து தடுப்பாள், மருமகள்.

முதியோருக்கு ஒரு ஆலோசனை:

சேமிப்பை கைகொள்ளுங்கள், மகன், மகளை முழுமையாக சார்ந்து நிற்காதீர். உங்களிடம் பணம் இருந்தால், அந்த பணத்துக்காகவாவது இளைய தலைமுறை உங்களை கவனித்துக் கொள்ளும். எனக்கு தெரிந்து, எத்தனையோ முதியோர்கள், வங்கியில், குறைந்தபட்ச நிரந்தர வைப்பாக, 10 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் வைத்திருக்கின்றனர்.

மூத்த குடிமக்களுக்கு, வட்டி விகிதம் அதிகம். தபால் சேமிப்புக்கு, வட்டி மிக மிக அதிகம். மாதம், 6,000 அல்லது 7,000 வட்டி கிடைத்தால், அது பெரிய பலம் தானே...

இளைய தலைமுறைக்கு ஒரு அறிவுரை:

வாலிபம் என்பது, குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஐஸ் கட்டி போன்றது. நொடிக்கு நொடி கரையும். நீங்கள் இன்று செய்யும் நற்செயலும், தீய செயலும் பின்னாளில் வட்டியும், முதலுமாக திரும்ப கிடைக்கும். பெற்றோர் விஷயத்தில், சுயநலத்தை ஒதுக்கி வையுங்கள்.

வயதான பெற்றோருடனான தகவல் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் தினசரி நடவடிக்கைகளில், முதியவர்களின் அபிப்ராயங்களை கேட்டு செயல்படுங்கள். வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர் ஒருவரை, பேசி ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கையை ஒரு வழிபோக்கனாக வாழப் பாருங்கள்.

வாழ்த்துகள்!

என்றென்றும் பாசத்துடன்,

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us