தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சந்திரபாபு! (26)

சந்திரபாபு! (26)

சந்திரபாபு! (26)


PUBLISHED ON : ஜன 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, பீமண்ண முதலி கார்டன் தெருவில் உள்ள, 26ம் எண் வீட்டில், 15 ஆண்டுகளாக குடியிருந்தார், சந்திரபாபு.

அவருடைய ஏற்ற, இறக்கங்கள் எல்லாவற்றையும் சந்தித்த வீடு இது!

பட வாய்ப்புகள் இல்லாததால், ஓர் ஆண்டு வாடகை பாக்கி தரவில்லை. வீட்டுக்காரரும் சும்மா இருக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அது பற்றி சந்திரபாபுவே எழுதியிருந்தது:

வழக்கு பற்றி என்னிடம் சொல்லவே இல்லை, மேனேஜர். வாலிப விருந்து படத்துக்காக வாங்கிய, 55 ஆயிரம் ரூபாய் போன இடம் தெரியவில்லை. என்னை அறியாமல் செலவழித்து விட்டேன். இப்போது, வாடகை பணத்துக்கு என்ன பண்ணுவது!

கேளம்பாக்கத்தில், எனக்கு, 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. கிரீன்வேஸ் சாலையில், ஏழரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டடம் உள்ளது. அவற்றை ஒன்றும் செய்ய முடியாத நிலையில்,

ஏவி.எம்., செட்டியாரை அணுகினேன்; வெறும், ஐந்தாயிரம் ரூபாய் தான் அவரிடம் கேட்டேன். 'நானே கடனாளி ஆகியிருக்கிறேன் தம்பி...' என்ற அவரது பதில், என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.

நேராக சித்ராலயம் சென்று, ஸ்ரீதரைக் கேட்டேன். ஒரு பெரிய தொகையை தந்து உதவிய அவருக்கு நன்றி சொன்னேனா என்று கூட ஞாபகம் இல்லை. அவ்வளவு வேகமாக வந்து, வீட்டுக்காரருக்கு வாடகை பாக்கியை கொடுத்தேன். அதற்குள், அமீனா வந்தாகி விட்டது. வாடகை பாக்கிக்கான வழக்கு மட்டுமல்ல, தன் மகள் கல்யாணத்துக்காக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் வழக்கு போட்டிருந்தார், வீட்டுக்காரர். இரண்டிலும் அவருக்கே வெற்றி!

ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படுமா... அப்போதே காலி செய்து விட்டேன்.

- இவ்வாறு கூறியுள்ளார்.

அதற்குப் பின், வீடு கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்ட சந்திரபாபு, வீடு கிடைக்கும் வரை, வேறு வழியில்லாமல் அருண் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

அப்போது, அவரை சந்திக்க வந்தார் நண்பரும், கதாசிரியருமான, ஏ.எல்.நாராயணன்.

'அண்ணே... கண்ணன் வருவான்னு ஒரு படம் எடுத்துட்டு இருக்கோம்... உங்களுக்கு ஒரு பாத்திரம் இருக்கு; நீங்க நடிக்கணும்...' என்றார்.

சந்திரபாபு யோசித்த போது, 'அண்ணே... ஐந்தே நாள் தான் வேலை; அதுபோக நிலைமையையும் தெளிவா சொல்லிடறேன்... ஐந்து நாள் வேலைக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே அவங்களால தர முடியாது...' என்றார்.

தன் நிலைமையை உணர்ந்த சந்திரபாபு, அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

முதல் நாள் படப்பிடிப்பு; சந்திரபாபுவின் கைகளுக்கு, இரண்டாயிரம் ரூபாய் வந்தது. நடிக்கத் துவங்கினார். ஐந்து நாட்கள் என்பது ஆறு, ஏழு என நீண்டு, 11 நாட்களை தொட்டது.

படம் வெளிவந்தது; ஆனால், வெளிவராமல் போனது, சந்திரபாபுவுக்கு வரவேண்டிய பாக்கி தொகையும், அதைக் கொடுக்க வேண்டிய ரங்கநாதனும்!

அதற்குப் பின், கஷ்டப்பட்டு, ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்தார்.

ஒருநாள் மீண்டும் சந்திக்க வந்தார், ஏ.எல்.நாராயணன், 'அண்ணே... ஒரு படம் இருக்கு; உங்களால நடிச்சு கொடுக்க முடியுமா?' என்று தயங்கித் தயங்கி கேட்டார்.

மவுனமாக இருந்தார், சந்திரபாபு.

'தயாரிப்பாளர் பாலாஜி; படம் பேரு, ராஜா; ஆக்ட் பண்ணுறீங்களா...' மிகவும் தயக்கத்துடன் கேட்டார்.

ஏற்கனவே நிகழ்ந்த அனுபவத்தால், ஆத்திரத்தில் இருந்த சந்திரபாபு, 'சோறு போடுவீங்களா...' என்று பதிலுக்கு கேட்டார்.

பின், அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் நாள் படப்பிடிப்பிலேயே, 2,500 ரூபாய் கொடுத்தார், தயாரிப்பாளர், பாலாஜி. கொஞ்சம் கொஞ்சமாக, சந்திரபாபுவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் படம் முடிவதற்குள் கொடுத்தும் விட்டார்.

'பதிமூன்று வயதில் இருந்து நடிக்கும் நான், இதுவரை இப்படி ஒரு நாணயமான தயாரிப்பாளரை சந்தித்தது இல்லை...' என்று பாலாஜி குறித்து, ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், சந்திரபாபு.

ராஜா படம் வெளிவந்து வெற்றி பெற்றது; படம் வெளியான அன்றே சந்திரபாபுவின் நடிப்புக்கு பாராட்டுகள். போனில் வாழ்த்துகள் குவிந்தன. ரசிகர்களின் பாராட்டு கடிதங்களும் வந்தன. ஆனால், வேறு பட வாய்ப்புகள் வரவில்லை.

சந்திரபாபுவுக்கு தன் தாய் மீது அதிக பாசம்; தன் தாய்க்கு பிடித்த பிரியாணிக்காக அலைந்த சம்பவம் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தது இதோ:

அன்று தான், ராஜா படம் வெளியாகி இருந்தது. அப்போது, என் முன் வந்து நிற்கிறார், அம்மா. செலவுக்கு பணம் கேட்கத்தான் வந்துள்ளார் என்பது, பார்த்ததும் புரிந்தது. படத்துக்கான முழுத் தொகையையும் வாங்கியாகி விட்டது. இந்நிலையில், பணத்திற்கு என்ன செய்வது என்று நினைத்து, முடிவாக, பாலாஜிக்கு போன் செய்து, 'நுாறு ரூபாய் கிடைக்குமா?' என்று கேட்டேன். பத்து நிமிடத்தில் என் வீடு தேடி, பணம் வந்தது.

பாதி பணத்தை அம்மாவிடம் கொடுத்து, மீதிக்கு, 'பாட்டில்' வாங்கினேன். ஷூட்டிங் இருந்தால், நான் மது அருந்துவது இல்லை. ஷூட்டிங் இல்லாதபோது, 'பாட்டில்' இல்லாமல் இருப்பதில்லை.

அன்று இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று, அம்மாவும், நானும் தலையை போட்டுக் குடைந்து கொண்டிருந்த போது, ஏ.எல்.நாராயணன் வந்தார்.

'அண்ணே... நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்; ஒரு முஸ்லிம் நண்பர் எனக்கு பைனான்ஸ் பண்ணுவதாக சொல்லியிருக்கார். அவர் வீட்டு கல்யாணம் ஓட்டல்ல நடக்கிறது; நீங்கள் அவசியம் வரணும்...' என்றார்.

போகும்போது அம்மாவிடம் சொன்னேன், 'அம்மா நான் கல்யாணத்துக்கு போறேன்; அங்கேயே சாப்பிட்டுக்கிறேன். நீ கவலைப்படாதே... உனக்கும் பிரியாணி கொண்டு வர்றேன்...' என்றேன்.

அம்மாவுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும்; முஸ்லிம் வீட்டு கல்யாணம் ஆயிற்றே, சொல்லணுமா!

தொடரும்.

நன்றி:சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.

முகில்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us