PUBLISHED ON : ஜன 28, 2018

படிப்பு வராவிட்டால் என்ன!
எங்கள் கிராமத்தில், நண்பர்கள் மூவர், பிளஸ் 2வில் தேர்ச்சி பெறவில்லை; அதனால், இம்மூவருக்கும் அவரவர் வீடுகளில் தண்டச்சோறு, உருப்படாதவன், விளங்காதவன் என்று ஏகப்பட்ட பட்டப் பெயர்கள். ஊர்க்காரர்களும் இவர்களை மும்மூர்த்திகள் என்றே கூப்பிடுவர். ஆனால், ஊரில் எந்தவொரு காரியமானாலும் மூவரும் முதல் ஆளாக நின்று உதவுவர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், சொந்த வீடு கட்டி, எங்கள் ஊருக்கு குடி வந்தார். வழக்கம்போல் இந்த மூவரும் முன்னின்று, இவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து, ஆசிரியரின் மனதில் இடம்பிடித்தனர். அந்த ஆசிரியர், இவர்களை திருத்த, தன் கைக் காசை போட்டு, காய்கறி வாங்கி வரச்செய்து, குறைந்த விலையில் விற்கும்படி சொன்னார். அத்துடன், காலையில், வீடு வீடாக பால் பாக்கெட் மற்றும் பேப்பர் போடும் வேலைகளையும் செய்யச் சொன்னார்.
பின், தன் வீட்டின் முன் பகுதியில் கடை வைத்து கொடுத்து, டீ, வடை, பஜ்ஜி போட்டு விற்கச் சொன்னார். அவரது சொல் கேட்டு, மூவரும் நன்கு உழைக்க, அவர்களது பெயரிலேயே வங்கிக் கணக்கு ஆரம்பித்து, வங்கியில் கடன் பெற வைத்து, தனித்தனியே பிரித்துக் கொடுத்து, சுயதொழில் செய்ய வைத்தார்.
இன்று, மூவருமே நல்ல நிலையில் இருக்கின்றனர். மூவருக்கும் திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன.
நல்ல வழிகாட்டி இருந்தால், வாழ்க்கை பாதையும் சீராக அமையும் என்பது உண்மை தானே!
— சரவணம் பிள்ளை, சென்னை.
இந்த ஐடியாவும் நல்லாயிருக்கே...
வழக்கமாக, திருமணத்திற்கு வரும் பெரியவர்களுக்கு மட்டுமே தாம்பூலப் பை தருவர்.
குழந்தைகளுக்கான கதை, கட்டுரைகள் எழுதி வரும் எழுத்தாளர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மாப்பிள்ளையின் வேண்டுகோளின்படி, விசில், இரண்டு சாக்லேட் மற்றும் சிறார்களுக்கான அறிவியல் மாத இதழ் ஒன்றும், சிறிய பையில் போட்டு திருமணத்திற்கு வந்திருந்த குழந்தைகள் கையில் கொடுத்தனர். பையை பெற்றுக்கொண்ட அவர்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷத்தைக் காண முடிந்தது.
தாலி கட்டும்போது மேள சத்தத்தை விட, விசில் சத்தம் பட்டையைக் கிளப்பியது.
— மைதிலி நாராயணன், பெங்களூரு.
குழந்தையை புகைப்படம் எடுக்காதீர்!
என் தோழிக்கு குழந்தை பிறந்து மூன்று மாதமே ஆன நிலையில், கேமரா, 'ப்ளாஷ்' ஆன் ஆகியிருப்பதை கவனிக்காமல், குழந்தையை, 'க்ளோஸ் அப்'பில் போட்டோ எடுத்துள்ளார், குடும்ப நண்பர் ஒருவர்.
புகைப்படம் எடுத்த பின், குழந்தையின் கண்ணில் ஏதோ மாற்றத்தை கண்ட பெற்றோர், அதிர்ந்து, குழந்தையை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளனர். மருத்துவர்கள், குழந்தையை பரிசோதித்து, 'மிக அருகாமையில், 'ப்ளாஷ்' போட்டு படம் எடுக்கப்பட்டதால், குழந்தையின் வலது கண், பார்வையை இழந்துள்ளது...' என்று கூறியுள்ளனர்.
மேலும், சக்தி வாய்ந்த, 'ப்ளாஷ்' குழந்தைகளின் கண்ணின் கருமணியை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் எச்சரித்துள்ளனர், மருத்துவர்கள்.
நம்மில் சிலர், குழந்தை பிறந்த உடனே, ஆர்வக்கோளாறில், அக்குழந்தையை மொபைல் போனிலும், சக்திவாய்ந்த கேமரா மூலமும், பல கோணங்களில் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும், அன்பர்களுக்கும் அனுப்புகின்றனர். அப்படி படம் எடுப்பதும், குழந்தையின் தாயார், குழந்தையின் அருகில் மொபைல் போனில் பேசுவதும் அக்குழந்தையின் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதுடன், உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர், மருத்துவர்கள்.
சில மருந்துவ மனைகள், குழந்தைகள் பராமரிப்பு குறித்தும், குழந்தைகளை எளிதில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கதிர்வீச்சு குறித்தும் பெற்றோரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மறந்து விடுகின்றன.
பெற்றோரும், மற்றவர்களும், குழந்தைகள் விஷயத்தில் இனிமேலாவது கண்ணும் கருத்துமாக, விழிப்புணர்வுடன் இருப்பரா!
— சி.புஷ்பலதா, சென்னை.
