தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சந்திரபாபு! (7)

சந்திரபாபு! (7)

சந்திரபாபு! (7)


PUBLISHED ON : செப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறு குழுவோ, பெரிய கூட்டமோ தான் மட்டுமே முன் நிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைப்பார், எம். ஜிஆர்., இதைப்பற்றி சந்திரபாபு இப்படி குறிப்பிட்டார்... 'சிறிய குழுவில் கூட, தான் மட்டும் தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார், எம்.ஜி.ஆர்., 'சாதாரண விஷயத்தில் கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே...' என்று நினைத்தேன்

'அவர் வளர்த்துக்கொண்ட அந்த, 'தான்' என்ற எண்ணம், அவர் வளர்ந்ததைப் போலவே, இன்று வளர்ந்திருப்பதை, கண்கூடாக பார்த்தேன். இந்நிகழ்ச்சிக்கு பின், அவரை விட்டு ஒதுங்கியே இருந்தேன்.

'ஒவ்வொரு முறை என்னை பார்க்கும் போதும் சிரிப்பார்; பதிலுக்கு, அசட்டு சிரிப்பு சிரிப்பேன்.

'குலேபகாவலி படப்பிடிப்பின் போது, 'இன்று, புலி சண்டையை படமாக்க போகிறேன்; அதற்கு தக்கவாறு பழகி கொள்ளுங்கள்...' என்று, எம்.ஜி.ஆரிடம் சொன்னார், இயக்குனர் ராமண்ணா.

'புலிச்சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லாரும்,

எம்.ஜி.ஆரின் வருகைக்காக காத்திருந்தோம்; இரண்டு மணி நேரத்திற்கு பின் வந்த எம்.ஜிஆர்., ஸ்டன்ட் மாஸ்டரிடம், 'ஆபத்தில்லையே...' என்றார்.

'இல்ல சார்... மயக்க மருந்து கொடுத்திருக்கிறோம்...' என்றார் மாஸ்டர்.

'புலி கூண்டுக்குள் நுழைந்தார், எம்.ஜி.ஆர்., இரு பக்கங்களில், இரு கேமராக்கள் சுழல துவங்கின; படுத்திருந்த புலி பாய்வதற்கு தயாரானது.

'நாங்க, பயத்துடன் எம்.ஜி.ஆரையே பார்த்தோம்; அவர், புலி மீது வைத்த கண்ணை எடுக்கவில்லை.

'குபீரென அது பாய்ந்தது; லாவகமாக கீழே குனிந்து, பதுங்கினார், எம்.ஜி.ஆர்., தொப்பென்று விழுந்தது புலி.

'கட்...' என்றார் ராமண்ணா.

'எம்.ஜி.ஆர்., சமயோசிதமாக குனிந்ததை எல்லாரும் பாராட்டினர்; அவருக்கு முகத்தில் மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்த்து, விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை பாராட்டினேன்.

'என் கையைப் பிடித்து, அருகில் அமர சொன்னார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். பல கோணங்களில், புலிச்சண்டையை படமாக்கினார் ராமண்ணா.

'அன்று முதல், இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். 'பாபு... இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்...' என்றார், எம்.ஜி.ஆர்., நானும் ஏற்றுக்கொண்டேன்...'

கடந்த, 1955ல் சந்திரபாபு நடித்து வெளியான படங்கள், மாமன் மகள், நல்ல தங்காள் மற்றும் மிஸ் நிர்மலா. 1956ல் வெளியான படங்கள், குலதெய்வம், ஒன்றே குலம் மற்றும் மர்ம வீரன். 1957 திரையுலகில் சந்திரபாபுவுக்கு முக்கியமான ஆண்டு!

திரையுலகின் மும்மூர்த்திகளாகப் பிரகாசித்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் ஆகிய மூவரின் படங்களிலும், சந்திரபாபுவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, நகைச்சுவைப் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன.

எம்.ஜி.ஆருடன், புதுமைப்பித்தன் மற்றும் மகாதேவி போன்ற படங்களிலும், சிவாஜி கணேசனுடன், மணமகன் தேவை மற்றும் புதையல் போன்ற படங்களிலும், ஜெமினியுடன், மணமாலை என்ற படத்திலும் நடித்தார், சந்திரபாபு.

அன்று, புதுமைப்பித்தன் படத்துக்காக, வாகினி ஸ்டுடியோ ஒப்பனை அறையில், பெண் வேடம் போட்டுக் கொண்டிருந்தார்,

எம்.ஜி.ஆர்., ஒப்பனை அறைக் கதவைத் தட்டினார், சந்திரபாபு.

சந்திரபாபு தான் கதவை தட்டுகிறார் என்பது புரிந்து, அவர் உள்ளே வந்தால், பெண் வேடத்தில் இருக்கும் தன்னிடம் குறும்பு செய்வார் என்று கருதி, கதவை திறக்கவில்லை, எம்.ஜி.ஆர்.,

ஆனால், சந்திரபாபுவோ பக்கத்து அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த மேஜையின் மீது ஏறி, எம்.ஜி.ஆர்., அறையை எட்டிப் பார்த்து சிரித்ததுடன், அறை தடுப்பின் மீது ஏறி குதிக்க முயன்றார்.

பெண் குரலில், 'ஊஹும்... ஆண்கள் உள்ளே வரக் கூடாது...' என்றார், எம்.ஜி.ஆர்.,

உடனே, குறுக்குச் சுவரின் மீது ஏறி நின்று, 'ஓ மை லவ்... ஓ மை பியாரி; டார்லிங்... கண்ணே...' என, காதலியிடம் பேசுவது போல், சந்திரபாபு கலாட்டா செய்ய, அவரிடம் கெஞ்சுதலாக, 'கொஞ்சம் பொறுங்கள்... 'ஷாட்' எடுத்து முடித்ததற்கு அப்புறமா விளையாடலாம்...' என்றார், தயாரிப்பாளர் முனிரத்தினம், கெஞ்சுதலாக!

ஒப்பனை அறைக் கதவை திறந்து, வெளியே வந்தார் எம்.ஜி.ஆர்., சந்திரபாபுவும் விடாமல் பக்கத்து அறை வழியே குதித்து, 'ஓ மை டியர் டார்லிங்...' என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி ஓடி வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு, சந்திரபாபுவிடம் இருந்து எம்.ஜி.ஆரை காப்பாற்றி, 'ஷாட்' எடுக்க அழைத்துச் சென்றார், முனிரத்தினம்.

புதையல் படத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், உனக்காக எல்லாம் உனக்காக... என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் சந்திரபாபுவுக்கு என்றே உருவானது. சரணங்களில் முதல் இரண்டு வரிகளுக்கு பின், மெட்டு துரித கதி பெறுவது அற்புதமாக இருக்கும்.

சைக்கிள் சீட்டு மீது, லாவகமாக நின்று, கையில் தன் காதலியான, பத்மினியின் புகைப்படத்தை வைத்து, ஒருதலைக் காதலில் பாடி, ஆடுவதை, எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை தராது.

கடந்த, 1958ல், காத்தவராயன் படத்தில் நடித்தார் சந்திரபாபு. அதில்,

ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு

ஜியாலங்காடி ஜிய்யாலோ

சீமையெல்லாம் தேடிப் பார்த்து

புடிச்சுப்புட்டேன் ஆயாலோ

ஜிகுஜிகு ஜிகுஜிகு...

என்ற பாடலில், சந்திரபாபுவும், எம்.என்.ராஜமும் சேர்ந்து பொம்மலாட்டத்தில் பொம்மைகள் ஆடுவது போல் ஆடி அசத்தியிருப்பர். அந்த நடனம்

பெரிதும் பாராட்டப்பட்டது.

அன்று, மாடர்ன் தியேட்டர்சுக்காக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார், டி.ஆர்.சுந்தரம். சந்திரபாபுவும், சி.ஆர்.சரஸ்வதியும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சி அது. சந்திரபாபு இடித்தவுடன், சரஸ்வதி கீழே விழ வேண்டும். இதுதான் காட்சி.

'ஷாட்'டுக்கு முன், சந்திரபாபுவிடம், 'எப்படி என்னை இடிப்பீங்க?' என, சரஸ்வதி நக்கலாக கேட்க, 'ஷாட்ல பாத்துக்கோ...' என, கேலி புன்னகையுடன் சொன்னார் சந்திரபாபு.

'ஷாட்'டில், சந்திரபாபு இடித்த இடியில், கேமராவின் பிரேமுக்கு வெளியே சென்று விழுந்தார் சரஸ்வதி. இயக்குனருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. 'கட்' சொல்லாமல் நின்று கொண்டிருக்க, மீண்டும், பிரேமுக்குள் வந்து நின்று கொண்டார், சரஸ்வதி. காட்சி ஓ.கே., ஆனது. எடிட் செய்யப்படாமல், எடுக்கப்பட்ட விதத்திலேயே அந்த காட்சி படத்தில் உபயோகிக்கப்பட, மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

சந்திரபாபுவின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களுள் முக்கியமானது, சபாஷ் மீனா.

பத்மினி புரொடக் ஷன்ஸ், பி.ஆர்.பந்துலு மற்றும் ப.நீலகண்டன் கூட்டணி, சபாஷ் மீனா என்ற முழு நீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினர்.

- தொடரும்.

-முகில்

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us