தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இளசுக்கு பாடம் புகட்டிய தாய்!

கடந்த வாரம் நானும், என் மனைவியும் எங்கள் மகனைக் காண, வெளியூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். எனக்கு வயது, 50; என் மனைவிக்கு, 45 வயது.

பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த என் மனைவி, வருத்தமுடன் தலை கவிழ்ந்தாள். என்னவென்று கேட்டபோது, பின் இருக்கையில் இருக்கும் வாலிபன், தன் பிடரியிலும், இடுப்பிலும் விரல்களால் சில்மிஷம் செய்வதாகக் கூறினாள்.

கோபத்தோடு அவனைத் திட்ட எழுந்தபோது, என்னைக் கையமர்த்தி, அவனிடம், 'ஏன் தம்பி அம்மாவ துன்பப்படுத்துற... என் மகனுக்கும், உன் வயது தான் இருக்கும். அவனைப் பாக்கத் தான் போயிட்டு இருக்கோம். உன் அம்மாவும் என்னை மாதிரி தானே இருப்பாங்க... அவங்க கிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா நீ ஏத்துப்பியா...' என்று, அமைதியாகக் கேட்டாள்.

உடனே, அந்தப் பையன் எழுந்து, மன்னிப்புக் கேட்டு, குனிந்த தலையுடன் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனை அடித்து உதைக்காமல், கடுமையாகப் பேசாமல், பொறுமையாக அவன் தவறை புரிய வைத்த என் மனைவியை ஆச்சரியத்தோடு பார்த்து, பாராட்டினர், அருகில் இருந்தோர்.

தன்னிடம் இழிவாக நடந்தவனிடம், ஒரு தாயின் பரிவோடு நடந்த என் மனைவியை நினைத்து பெருமையாக இருந்தது.

அந்த வாலிபனுடைய குனிந்த தலையும், வெட்கமடைந்த முகத்தையும் பார்த்த போது, இதுபோன்று, இனி எந்தப் பெண்ணிடமும் நடந்து கொள்ள மாட்டான் என்று தெரிந்தது.

— க.ப.கிருஷ்ணகுமார், கோவை.

சவுக்கியமா!

என் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். உறவினரின் குழந்தைகள் திருமணமாகி வெளியூரில் இருப்பதால், வீட்டில், 70 வயது மாமா, 65 வயது அத்தை, 90 வயதை நெருங்கும் பாட்டி என, மூன்று பேர் மட்டும் இருக்கின்றனர்.

வீட்டில் நுழைந்தவுடன், திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டியிடம், 'சவுக்கியமா...' என்றேன். 'எனக்கென்ன நல்லா இருக்கேன்; வயசானா வர்ற பிரச்னைகள சந்திச்சுதானே ஆகணும்; உங்க அத்தை, மாமாவை போய் விசாரி...' என்றார்.

அவர்களிடம் போய், 'அத்தை, மாமா... சவுக்கியமா?' என்றதும், கால், கை வலி, காலையில் எழுந்தால் தலை சுற்றல் என, பெரிய, 'நெகடீவ்' பட்டியலை வாசித்து, 'வைத்தியம் பார்த்தும், மருந்துகள் சாப்பிட்டும் ஒண்ணும் சரியில்ல; எல்லாம் எங்க தலையெழுத்து...' என, அலுத்துக் கொண்டனர்.

ஓரளவு பண வசதி, பேரன், பேத்திகள் என, நிறைவான வாழ்க்கை. பார்க்கவும் திடகாத்திரமாக தான் இருந்தனர். ஆனால், ஏன் இப்படி சலிப்பு என்று புரியவில்லை.

கிளம்பும்போது, திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டி, 'என்ன... உங்க அத்தையும், மாமாவும் பெரிய வியாதி பட்டியல் வாசிச்சாங்களா... தங்களோட நிறைவான வாழ்க்கைய பாத்து, கண்ணு போட்டுடுவாங்கன்னு இப்படி புலம்புறத, வழக்கமா வெச்சிருக்காங்க...

'கடவுள் கொடுத்த வாழ்க்கைய, மகிழ்ச்சியா நடத்தணும்ன்னு நானும் எத்தனையோ முறை சொல்லிப் பாத்துட்டேன்; இந்த வயசிலயும் அது அவங்களுக்கு புரிய மாட்டேங்குது...' என்றவர், 'எப்பவும் நல்ல ஆரோக்கியமான வார்த்தைகள பேசினா, நாம நல்லா இருப்போம்...' என்று, எனக்கு உபதேசம் செய்தார்.

'சவுக்கியமா'ன்னு கேட்டா, வியாதி பட்டியல் மற்றும் குறைகளை பட்டியல் போடுவோர், பாட்டியின் அறிவுரையை பின்பற்றி, எப்போதும், நல்ல வார்த்தைகளை பேசி, இயல்பாக பழகுவோம்!

— எஸ்.வெண்மதி, சென்னை.

அன்பை மட்டும் பகிர்வோம்!

நவராத்திரி பண்டிகையின் தத்துவங்களை புரிந்து கொள்ளாமல், மேம்போக்காக கொண்டாடுவதால், உறவு சிக்கல்களும், மன உளைச்சல்களும் தான் பரிசாக கிடைக்கும். அதை தவிர்க்க, கீழ்கண்டவற்றை கவனித்து கொள்ளவும்:

* தாம்பூலம் தருவதில் தான் பெரும்பாலும் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. முந்தைய ஆண்டு அனுபவத்தை வைத்து, 'இவளுக்கு இது தந்தால் போதும்; திரும்ப பெரிசா, 'கிப்ட்' தரவா போறா...' என்றும், 'போன முறை எனக்கு, 'ப்ளவுஸ் பிட்' தரவேயில்ல; இந்த முறை கூப்பிடவே போறதில்ல...' என, வஞ்சம் தீர்ப்பது, பண்டிகையின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

* உறவுகளுக்குள் நுழையும் தேவையற்ற, 'பார்மாலிட்டீஸ்' அந்த உறவையே சிக்கலாக்கி விடும். வசதியான அண்ணி, தன் நாத்தனாருக்கு பண்டிகை பரிசாக புடவை எடுத்துக் கொடுத்தால், அதேபோல், அந்த நாத்தனாரும், தன் நாத்தனாருக்கு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது பெரும் தவறு. வீட்டு பெரியவர்கள் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். 'அவ பொறந்த வீட்டுல அவளை தாங்குறா. உனக்கு என்ன செஞ்சா... 10 ரூபாயை வெச்சு குடு; அதுவே அவளுக்கு ஜாஸ்தி...' என்று, ஏற்றி விடுவது, உறவை கெடுக்கும்.

* வேலைக்கு போகும் பெண்கள், சற்று நீக்குபோக்காய் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பது தவறில்லை. பண்டிகைக்கு, விடுமுறை எடுக்க கட்டாயப் படுத்துவது, விதவிதமாய் நைவேத்தியங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்துவது. நேரம் காலம் தெரியாமல் உறவுகளை விருந்துக்கு அழைப்பது போன்ற நடவடிக்கைகள் சங்கடங்களைத் தரும்.

* கவனக்குறைவால் ஏற்படும் தவறுகளை, பெரிதுபடுத்தக் கூடாது. 'எல்லாருக்கும் காபி கொடுத்தவளுக்கு, எனக்கு கொடுக்கத் தோணல. ஒரு வாய் சாப்பிடுறீங்களான்னு கேட்டா, உடனே உட்கார்ந்துடவா போறோம்...' என்ற முணுமுணுப்புகள், உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

உறவின் ஆழத்தை, நட்பின் இறுக்கத்தை மேம்படுத்த வழிகோலுவன, பண்டிகைகள். அதனால், பண்டிகைகளின் போது அன்பை மட்டும் பகிர்வோம்!

ஜனனி ராம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us