தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மாறியது நெஞ்சம்!

மாறியது நெஞ்சம்!

மாறியது நெஞ்சம்!


PUBLISHED ON : செப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லேசாக ஆரம்பித்த இருமல், படுக்க விடாமல் தொடர்ந்து வர, எழுந்து உட்கார்ந்தார் கணபதி. இனி, தூக்கம் அவ்வளவு தான்; இரவு, விளக்கின் ஒளியில் கண்களை கூர்மையாக்கி, கடிகாரத்தைப் பார்த்தார். மணி, 2:00. மெல்ல கட்டிலிலிருந்து எழுந்து, அலமாரியில் இருந்த இருமல் மருந்தை எடுத்துப் பார்த்தார்; அது, காலியாக இருந்தது.

உள் அறையில், 'ஏசி' ஓடும் சத்தம்; மகனும், அவன் மனைவி மற்றும் பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தவர், திரும்ப வந்து கட்டிலில் அமர்ந்தார்.

ஒரே மகன் சந்துரு; அவனுக்காகவே வாழ்ந்தவர். இன்று, அவரிடம் நின்று பேச, அவனுக்கு நேரமில்லை. அவரும், அவ்வீட்டில் வாழ்கிறார்; அவ்வளவு தான். இருந்தாலும், 'கண்ணெதிரில் மகன் நடமாடுவதை பார்க்கும் கொடுப்பினையாவது இருக்கிறதே...' என்று, மனதை தேற்றிக் கொண்டார்.

டைனிங் டேபிளின் முன் அமர்ந்திருந்தான் சந்துரு; ஏற்றுமதி நிறுவனத்தில், மேனேஜராக வேலை பார்க்கிறான்.

''அப்பாவுக்கு காபி கொடுத்தியா...''

''அதெல்லாம் நேரத்துக்கு சரியா நடக்குது... நீங்க சாப்பிடுங்க,'' என்றாள் மனைவி யாமினி.

சாப்பிட்டு முடித்து, ஹாலின் ஒரு மூலையில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அப்பாவிடம் வந்தான்.

''காபி குடிக்கலையாப்பா... அப்படியே இருக்கு.''

கட்டிலில் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்; கண்கள் சிவந்திருந்தது.

''ராத்திரியெல்லாம் தூக்கமில்ல... ஒரே இருமல்; தலையெல்லாம் பாரமாக இருக்கு. இருமல் மருந்து தீர்ந்துடுச்சு; வரும் போது வாங்கிட்டு வர்றியா...''

குரலில், கெஞ்சுதல் இருந்தது.

''சரிப்பா. யாமினி... நான் கிளம்பறேன்.''

''எம்.டி.,ய பாக்க யார் வந்திருக்காங்க... ரூம்ல ரொம்ப நேரமா பேச்சு சத்தம் கேட்குதே,'' என்று அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான் சந்துரு.

''எம்.டி.,யோட மாமனார் வந்திருக்காரு.''

சிறிது நேரத்தில், எம்.டி.,யின் அறைக் கதவை திறந்து, வயதான ஒருவர், மெல்ல நடந்து வெளியே வந்தார். அவர் கைப்பிடித்து அட்டெண்டர் அழைத்து வர, அங்கிருப்பவர்கள் எழுந்து நிற்க, சந்துருவும் எழுந்து நின்றான்.

அவனருகில் வந்தவர், அந்த இடத்தில், சிறிது நேரம் நின்றார். கண்களில் பிரகாசம்.

''நீ... நீ கணபதி மகனா...'' ஆச்சரியமாக பார்த்தான்.

''ஆமாம் சார்... உங்களுக்கு எப்படி தெரியும்?''

''உங்கப்பாவோட சின்ன வயசு முகஜாடை, உன் முகத்தில் தெரியுது; அப்பா நல்லா இருக்காரா...''

''ம்... இருக்காரு; உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?''

அவனை பார்த்து புன்னகைத்தவர், ''உனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது, எங்க வீட்டு பக்கத்துல தான் குடியிருந்தார். ரொம்ப நல்ல மனுஷன்; பொண்டாட்டி இறந்து, கைப்பிள்ளையான உன்னை வளர்க்க ரொம்பவே கஷ்டப்பட்டாரு... அவர் சொந்தக்காரங்க அவருக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க, முயற்சி செய்தாங்க.

''அவரு ஒத்துக்காம,'நான் இன்னொரு கல்யாணம் செய்து, நாளைக்கு அவளுக்கு குழந்தை பிறந்து, என் மகனை, அவ இரண்டாம் பட்சமாக நினைச்சா, அதை, என்னால தாங்க முடியாது; அதனால, எனக்கு இன்னொரு துணை தேவையில்ல. என் மகனுக்கு நானே, தாயுமாக இருந்து வளர்ப்பேன். தயவுசெய்து, யாரும் திருமணப் பேச்சை எடுக்காதீங்க'ன்னு சொன்னார். 'வயசான காலத்துல, உங்கள கவனிக்க துணை வேணாமா'ன்னு கேட்டதுக்கு, 'என் மகன் பெரியவனாகி, எனக்கு துணையாக இருப்பான்; வயசான காலத்தில், அவன் நிழலில் வாழ்ந்துட்டுப் போவேன்'னு சொல்வாரு. என்னை பொறுத்த வரை, மறக்க முடியாத மனுஷன். உங்கப்பாவை நான் கேட்டதாக சொல்லு; பழனியில், பக்கத்து வீட்டில் குடியிருந்த பிரகாசம்ன்னு சொன்னா புரிஞ்சுப்பாரு,'' என்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில், ''என்னங்க மறந்துடாதீங்க... இன்னைக்கு சாயந்திரம், சினிமாவுக்கு டிக்கட், 'ரிசர்வ்' செய்துருக்கோம்; சீக்கிரம் வந்துடுங்க,'' என்று போனில் ஞாபகப்படுத்தினாள் யாமினி.

வீட்டினுள் நுழைந்தவன், யாமினி, சினிமாவுக்கு போக, தன்னை அலங்கரித்து காத்திருக்க, கட்டிலில் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்தான்...

''அப்பா... கிளம்புங்க, டாக்டர் கிட்ட போகலாம்,'' என்று சொல்வதைக் கேட்டு, ''எதுக்குங்க... இருமல் மருந்து குடிச்சா சரியாயிடும்; இதுக்கு போய் டாக்டர்கிட்டே போய், தேவையில்லாம செலவு செய்துட்டு. நமக்கு சினிமாவுக்கு நேரமாச்சு, மறந்துட்டீங்களா...'' என்றாள் யாமினி.

திரும்பி மனைவியை கோபமாக பார்த்தான்; அவன் கண்களில் தெரிந்த அனல், முதன்முதலாக யாமினிக்கு மனதில் பயத்தை ஏற்படுத்தியது.

''இங்க பாரு... எங்கப்பாவுக்கு என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும். அவருக்கு உடம்பு சரியில்ல; டாக்டர்கிட்டே, 'செக்கப்' செய்து, மருந்து, மாத்திரை கொடுக்கணும்; நான் கிளம்புறேன்,'' என்று சொன்னவன், ''எழுந்திருங்கப்பா... டாக்டர் கிட்ட போகலாம்; ஆட்டோ வரச் சொல்லியிருக்கேன்,'' என்று கைத்தாங்கலாக அவரை பிடித்து அழைத்து வர, மகனின் அருகாமை பரவசப்படுத்த, கண்ணீருடன் மகனை பார்த்தார்.

கணவனின் மனமாற்றத்தை அறிந்த யாமினி, தன்னுடைய நடவடிக்கையை மாற்றிக் கொண்டால் தான், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பது புரிந்து, ''நீங்க மாமாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க... வர்றதுக்குள்ள அவர் சாப்பிட, சூடா கஞ்சி போட்டு வைக்கிறேன்; தொண்டைக்கு இதமாக இருக்கும்,'' என்றாள்.

மனதில் இனம் புரியாத நிம்மதி படர, மகன் கை பிடித்து, வாசல் நோக்கி நடந்தார் கணபதி.

லாவண்யா பாலாஜி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us