தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'செக்கிழுத்த சிதம்பரனார்' நூலிலிருந்து: தேசபக்தர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சிறையிலிருந்து விடுதலை பெற்று, சென்னையில் வசித்து வந்த போது, ஒருநாள், ரிப்பன் அச்சகத்தில், ஒரு புதியவரைச் சந்தித்தார். அவர், தன்னை, 'நந்தனார் வகுப்புப் பிள்ளை' (அரிஜன்) என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உடனே சிதம்பரம் பிள்ளை, அந்த மனிதரின் இரு கைகளையும் இறுகப் பிடித்து, 'உண்மை கூறின நீரே உண்மையான அந்தணர்...' என்று சொல்லி, அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உணவு அளித்தார். அத்துடன், உள்ளத்திற்கும் உணவாக, சிறந்த தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தி, திருக்குறளையும் கற்பித்தார். இப்படி, பல ஆண்டுகளாக அவரை, தம்முடைய வீட்டில் வைத்து, அவரது அறிவை விசாலப்படுத்தினார். சிதம்பரம் பிள்ளையின் பக்தராகி விட்ட, அரிஜன சீடர், பின், துறவி ஆனார்.

துறவியான பின்பும் கூட, சிலர் அவரிடம், 'நீங்கள் என்ன ஜாதி...' என்று கேட்பர். 'துறவிக்கு ஜாதி உண்டா... உடைமைகளை துறந்ததுடன், குலம், கோத்திரங்களையும் துறந்தவர் அல்லவா துறவி...' என்பார் சிதம்பரம் பிள்ளை.

இந்தத் துறவி தான், பின்னாளில், சிதம்பரம் நகரில், அரிஜன சகோதரர்களுக்கு, கல்விப் பணி புரிந்து, பெரும் தொண்டாற்றிய சுவாமி சகஜானந்தர். சிதம்பரம் பிள்ளையை பற்றி, இவர் தம் செய்யுள் ஒன்றில், 'சிதம்பரம் என் தந்தை; தேவா; சிதம்பரம் என் சற்குருவே...' என்று பாடியுள்ளார்.

'ஹிந்து மதத்தை புரிந்து கொள்ளுங்கள்' நூலிலிருந்து: கடவுள் கோட்பாட்டுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தவர், சார்வகர். (இவருடைய பெயர், மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது.) இவருடைய கொள்கைகளை, 'சார்வகம்' என்றும், அவற்றை பின்பற்றுவோர், 'சார்வகர்கள்' என்றும் அறியப்பட்டனர்.

அவர்களது கொள்கைகள், உடலானது, இந்திரியங்கள் மூலம் இயங்குகின்றன. ஆன்மா என்ற ஒன்று கிடையாது; உலகமும், அதில் உள்ள அனைத்தும், இயற்கையாக தோன்றுகின்றன. அவற்றை படைக்க, ஒரு இறைவன் தேவையில்லை.

நன்கு உண்டு, உறங்கி, இயன்ற வரை, வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க வேண்டும். கடவுள் வழிபாடு, சடங்குகள், ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியமற்றவை. தீ சுடுவதற்கும், நீர் குளிர்ந்திருப்பதற்கும், அவற்றின் இயற்கை தன்மைகளே காரணமே அன்றி, அவை, கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல.

மோட்சம், சுவர்க்கம், ஆன்மா மற்றும் பரலோகம் என்பவை கட்டுக்கதைகள்; வேதங்கள், அக்னி ஹோத்ரம், வேள்விகள் ஆகியவை, படித்தவர்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே ஏற்படுத்தியவை என்று, இன்னும் அநேக வாதங்களை கூறியுள்ளார்.

சார்வகர்கள் மற்றும் அவர்கள் கொள்கைகளை பற்றி கூறும் ஆதார நூல்கள் ஏதுமில்லை. ஆயினும், சார்வகக் கொள்கைகளை மறுத்து கூறியிருக்கும் நூல்கள் மூலம், அவற்றை பற்றி அறிய முடிகிறது.

மத்வாசாரியார் தன்னுடைய, 'சர்வ தர்சன சங்கிரஹா' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளவையின் மூலமாகவும், மகாபாரதம், மத்சய புராணம் மற்றும் விஷ்ணு புராணம் போன்றவற்றில் உள்ள சில சிறு குறிப்புகள் மூலமாகவும், சார்வகர்களைப் பற்றி அறிய முடிகிறது.

'ரஷ்யாவின் சிற்பி லெனின்' என்ற நூலிலிருந்து: மக்களை ஒருங்கிணைத்து, இயக்கமாக்கி, புரட்சி செய்து வெற்றி கண்ட முதல் தலைவர், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த லெனின். 'புரட்சியை ஒரு யுத்த சாஸ்திரமாக வகுத்து நடத்துவதுடன், ஐந்து முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும்...' என்பார், லெனின்.

அவை:

* புரட்சி என்று ஆரம்பித்தால், கடைசி வரை நடத்திப் பார்த்து விட வேண்டும்.

* காலமும், சூழ்நிலையும் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து, எதிரியின் சக்தியை விட, தன் சக்தி அதிகம் என்று திட்டவட்டமாகத் தெரிந்த பிறகே புரட்சியை ஆரம்பிக்க வேண்டும்.

* முதலில் நாம் தான் தாக்க வேண்டுமே தவிர, எதிரி நம்மை தாக்க அனுமதித்து விட்டு, பிறகு, தற்காப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கக் கூடாது.

* எதிரியை எதிர்பாராத சமயத்தில், திடீரென்று தாக்க வேண்டும்.

* சிறு சிறு வெற்றிகளாக இருந்தாலும் பரவாயில்லை; அடுத்தடுத்து, வெற்றி கண்டு, எதிரியின் தன்னம்பிக்கையை தகர்த்து, தோல்வி மனப்பான்மையை உண்டாக்க வேண்டும்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us