sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/தானத்திற்கு தேவை நல்ல மனம்!

தானத்திற்கு தேவை நல்ல மனம்!

தானத்திற்கு தேவை நல்ல மனம்!


PUBLISHED ON : அக் 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 1, 2020 -

காலையில் விழிப்பு வந்து எழும்போதே, மகன் கார்த்திக்கின் கனத்த குரலும், அவன் மனைவி சவும்யாவின் சன்னமான குரலும் கேட்டுக் கொண்டிருந்தது.

''என்ன, இன்னுமா தர்க்கம் முடியவில்லை,'' என்றார், சுந்தரராமன்.

''வாதத்திற்கு முடிவு காணலாம். பிடிவாதத்திற்கு எங்கே முடிவு,'' என்றாள், சுந்தரராமனின் மனைவி மாலதி.

சற்றைக்கெல்லாம் மனைவியுடன் உள்ளே வந்தான், கார்த்திக்.

''அப்பா... மூன்று மாத சம்பளத்தைப் பத்தி, அஞ்சலைகிட்டே நானே பக்குவமா பேசிக்கிறேன்,'' என்று சொல்லிச் சென்றான்.

''அவர் பிடிவாதத்தை என்னாலே மாத்த முடியவில்லை,'' என்றாள், சவும்யா.

விஷயம் இது தான்...

'கொரோனா' ஊரடங்கால், வீட்டு வேலை செய்யும் அஞ்சலை, மார்ச் 23 முதல் வர முடியவில்லை. மார்ச் முழு சம்பளம் கொடுக்க ஒத்துக்கொள்ளும் கார்த்திக், ஏப்ரல், மே மாத சம்பளம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறான்.

முழுச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வாதிக்கும், சவும்யாவின் பக்கம் நாங்கள் இருவரும்.

கார்த்திக்கும், சவும்யாவும் இரு வேறு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணிபுரிகின்றனர். கை நிறைய சம்பளம்.

தாராளமாக செலவு செய்யும் மனப்பான்மை உள்ள கார்த்திக், வீட்டில், வேலை செய்ய வருபவர்களுக்கு கொடுப்பதற்கு யோசனை செய்வான். கொடுக்க, கொடுக்க மேலும் கேட்பர் என்பது, அவனது வாதம்.

நாங்கள் இருப்பது, ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. எங்கள், 'பிளாட்' மூன்று அறை, ஹால், கிச்சன் கொண்டது.

அஞ்சலைக்கு இரண்டு வேளையும் வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, வாஷிங் மிஷின் தோய்த்த துணியை உலர்த்தி, அடுத்த நாள் மடித்து வைக்க என, மாதச் சம்பளம், 5,000 ரூபாய். மனித மனம் விசித்திரமானது. விடுப்பு எடுக்காமல், கடன் கேட்காமல், முகம் கோணாமல் வேலை செய்யும் அஞ்சலையின் வேலையில், ஏதேனும் குறை காண்பர், அம்மாவும், மகனும்.

என் மாட்டுப் பெண், என்னைப் போல குறை சொல்லத் தெரியாத ஜன்மம்.

ஊரடங்கின் இரண்டு மாதமும், மொத்த வீட்டு வேலையும் எங்கள் தலையில். வீட்டைப் பெருக்கித் துடைப்பது, கார்த்திக்கும் -

சவும்யாவும். சமையல் பாத்திரங்கள் சேர விடாமல், யாரேனும் ஒருவர் தேய்த்து விடுவோம். அதிலும் கார்த்திக், சவும்யா பங்கு அதிகம்.

வாஷிங் மிஷினில் துணி துவைத்து, உலர்த்தி, மடித்து வைக்கும் வேலை தான், என் பங்கு. இப்போது தான் வீட்டு வேலையில் உள்ள சிரமங்களை உணர ஆரம்பித்தோம்.

'பாவம் அஞ்சலை... எப்படித்தான் முகம் சுளிக்காமல், சலிப்பில்லாம இந்த வேலைகளை தினமும் செய்யறாளோ... கொஞ்சம் வேலை செய்யும்போதே நமக்கு முதுகு வலிக்கிறதே; அவளுக்கு நாம கொடுக்கிற சம்பளம் ஒன்றும் அதிகமில்லை...' என்று, உணர ஆரம்பித்தாள், மாலதி.

மொத்த குடும்பமும், ஊரடங்கு தடை நீங்கி, அஞ்சலை வேலைக்கு வரப்போகும் நாளை எதிர் நோக்கி இருந்தது.

ஜூன் 1 முதல், அஞ்சலை வேலைக்கு வருவாள் என்றதும், மொத்தக் குடும்பமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. மாலைத் தோரணங்கள் கட்டவில்லை; 'வாராயோ அஞ்சலை வாராயோ...' என்று பாட்டு போடவில்லை, அவ்வளவு தான்.

இப்போது தான் பிரச்னை வெடித்தது.

'அஞ்சலை வந்தவுடன், அவளுக்கு மூன்று மாத சம்பளமாக, 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்...' என்று நினைவூட்டினாள், சவும்யா.

'மார்ச் மாத சம்பளமாக, 5,000 ரூபாய், ஏப்ரல், மே மாதத்திற்கு மாதம், 1,500 வீதம் 8,000 ரூபாய் கொடுத்தால் போதும். நான் வீட்டிலிருந்து வேலை செய்தும், மூன்று மாதங்களுக்கு, 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் என்று அறிவித்துள்ளனர்.

'ஆனால், ஊரடங்கில், வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள், அஞ்சலை. அதற்கு நான் ஏன் முழு சம்பளம் தர வேண்டும். என்னுடைய வருமானம் குறையும்போது, நான் ஏன் தர்மப் பிரபுவாக பணத்தை அள்ளி வீச வேண்டும்...' என்பது, கார்த்திக்கின் வாதம்.

'மாதம், ௧௫ சதவீதம் சம்பளம் குறைவதால், அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி குறையும். ஆகவே, சம்பளத்தில் குறையப் போவது, ௯ அல்லது 10 சதவீதம். இது, நம் அன்றாட செலவைப் பாதிக்காது. நம் மாதச் சேமிப்பு கொஞ்சம் குறையும். ஆனால், அஞ்சலையின் சம்பளத்தில் பிடித்தம் செய்தால், அது அவளுடைய தினசரி செலவை பாதிக்கக் கூடும்...' இது, சவுமியாவின் வாதம்.

வழக்கம் போல, 9:00 மணிக்கு வேலைக்கு வந்தாள், அஞ்சலை. ஏழாம் வகுப்பு வரை படித்தவள். நாட்டு நடப்பிலும், 'டிவி'யில் செய்திகள் பார்ப்பதிலும் நாட்டம் உண்டு. கலகலப்பான சுபாவம். எப்போதும் வந்தவுடன், என்னையும், என் மனைவியையும் குசலம் விசாரித்து, மாலதியின் கையில் பில்டர் காபி வாங்கிக் குடித்த பின்தான் வேலையைத் துவக்குவாள்.

இன்றும் வந்தவுடன், எல்லாரிடமும் நலம் விசாரித்து, ''நல்ல காபி சாப்பிட்டு இரண்டு மாதம் ஆயிடுச்சும்மா,'' என்று சொல்லியபடியே, காபி குடித்து, வீடு பெருக்க ஆரம்பித்தாள்.

எங்கள் படுக்கை அறையைப் பெருக்கும்போது, திடீரென்று, ''அஞ்சலை... உன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி எங்கே?'' என்று கேட்டாள், மாலதி.

''சங்கிலியை அடகு வைச்சிருக்கேம்மா,'' என்றாள், அஞ்சலை.

''அம்மா ஆசையா போட்ட சங்கிலி, அதை என்னோட கழுத்திலிருந்து கழட்டவே மாட்டேன்னு சொல்லுவியே. அதை அடகு வைக்கிற அளவுக்கு உனக்கு என்ன பணமுடை,'' என்றாள், மாலதி.

''அது ஒரு பெரிய கதைம்மா,'' என்றாள், அஞ்சலை.

மகன், மருமகள் அறை, எங்களுக்கு பக்கத்து அறை. அலுவலக வேலையை அங்கே அமர்ந்து தான் செய்வர். இங்கு பேசுவது அங்கு நன்றாகவே கேட்கும்.

அஞ்சலை, சொல்ல ஆரம்பித்தாள்...

''எங்க வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி, ஒரு அடுக்கு மாடி கட்டடம் கட்றாங்க. ஊரடங்குக்கு அப்புறம் கொஞ்ச நாள் வேலை இருந்தது. அப்புறம் வேலையை விட்டு ரொம்ப பேர் போயிட்டாங்க. வட மாநிலத்திலிருந்து வந்த, 25 குடும்பம், குழந்தைகளையும் சேர்த்து, 60 பேர் இருப்பாங்க...

''அங்கேயே தங்கி, கை காசை வைச்சு, ஏப்ரல் மாதம் வரை சமாளிச்சுட்டாங்க. சில நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுவாங்கன்னு பேசிக்கிட்டாங்க. பொழைப்பைத் தேடி நம் ஊருக்கு வந்தவங்களுக்கு, நாம ஏதேனும் செய்யணும்ன்னு தோணித்து, அக்கம் பக்கத்திலே கேட்டேன். 'வேலைக்குப் போக முடியலை, காசு பாக்க முடியலை, நமக்கு எதுக்குமா இதெல்லாம்'ன்னு சொல்லிட்டாங்க.

''சில பேர், 'காசு இல்லம்மா; ஆனா, கூட இருந்து என்ன உதவி வேணும்னாலும் செய்றேன், சாமான் வாங்கிப் போட்டா சமைச்சுக் கொடுக்கிறே'ன்னு சொன்னாங்க.

''நான் சேர்த்து வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாய் எடுத்து செலவு செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல, இரண்டு வேளை சப்பாத்தி, பதார்த்தம் அல்லது கலந்த அரிசி சோறுன்னு கொடுக்க ஆரம்பிச்சோம். பணம் போறாம வந்திருமோங்கிற பயத்திலே சங்கிலியை அடகு வைச்சேன்.

''பக்கத்திலே ஒரு அம்மா, நகைக்கு கடன் கொடுப்பாங்க. வட்டியும் சேட் கடையை விட குறைச்சலா இருக்கும். சங்கிலிக்கு, 20 ஆயிரம் ரூபாய் தரேன். ஆறு மாசத்திலே திருப்பித் தரணும். ஆறு மாச வட்டி, 2,000 ரூபாய். வட்டியை கழிச்சிக்கிட்டு, 18 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க.

''நம் ஊர்லே ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கிறதுதாம்மா கஷ்டம். ஆரம்பிச்ச ஒரு வாரத்திலே அவங்களா வந்து உதவி செய்ய வந்தாங்க. ரேஷன்ல கொடுத்த அரிசி, கோதுமை சில பேர் கொடுத்தாங்க. அரசு கொடுத்த, ௧,௦௦௦ ரூபாயையும் அப்படியே சில பேர் கொடுத்தாங்க. அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க, தெரியாத மனுஷங்க நிறைய பேர் பணமும், பொருளும் கொடுத்தாங்க.

''வட்டிக்கு பணம் கொடுத்த அம்மா, 2,000 ரூபாயை திருப்பிக் கொடுத்து, 'எனக்கு வட்டி வேண்டாம், உனக்கு எப்ப பணம் கிடைக்கறதோ அப்ப பணத்தைத் திருப்பிக் கொடுத்தா போதும்'ன்னு சொல்லிட்டாங்க. உதவி வர வர, காலை, மாலை டீ, பிஸ்கட் அல்லது ரொட்டி, இரண்டு வேளை சப்பாத்தி இல்லைன்னா அரிசி சோறுன்னு கொடுக்க ஆரம்பிச்சோம்.

''அந்த, 25 குடும்பமும் நாளைக்கு ரயிலில், சொந்த ஊருக்குப் போறாங்க. வழியில சாப்பிட சப்பாத்தியும், கை செலவுக்கு, குடும்பத்துக்கு, 250 ரூபாயும் கொடுத்து அனுப்பப் போறோம்,'' என்று முடித்தாள், அஞ்சலை.

எங்களால் சிறிது நேரம் பேச முடியவில்லை. பணம் படைத்தவர்கள் கூட, தன் செலவுக்கு போக மிஞ்சியதை தானம் செய்து, அதை முக நுாலிலும், மற்ற சமூக வலைத்தளங்களிலும் பரப்பி விளம்பரம் தேடுவது இந்தக் காலம். ஆனால், அஞ்சலை தன்னுடைய சிறிய சேமிப்பையும், இருந்த ஒரே நகையையும் அடகு வைத்து, தானம் செய்கிறாள்.

''இவங்களுக்கு உதவணும்ன்னு உனக்கு எப்படித் தோணித்து,'' என்ற, மாலதியின் கேள்வி, சுய நினைவிற்குத் திருப்பியது.

''அம்மா... இவங்க, அவங்க ஊர்ல வேலை கிடைக்காம, நம் ஊருக்கு வரலை. சம்பளம் நிறைய கிடைக்கும். அதனால, நம் குடும்பம் வறுமையிலிருந்து வெளியிலே வரும்; அப்படிங்கிற நம்பிக்கையிலே வர்றாங்க. வேற மாநிலத்திலேருந்து வர்றவங்க கட்டட வேலை, ஓட்டல், கடைகள்ன்னு எல்லா இடத்திலேயும் வேலை செய்யறாங்க.

''நமக்கும் இந்த வேலை செய்யறதுக்கு ஆட்கள் தேவைப்படுது. இவங்களை, 'புலம் பெயர் தொழிலாளர்கள்'ன்னு சொல்றாங்க. நம் ஊர்லேந்தும், நல்ல சம்பளம் கிடைக்கும்ன்னு, துபாய், லண்டன், அமெரிக்கான்னு போறாங்க. உங்க மகனும், மருமகளும் அமெரிக்காவிலே வேலைக்குப் போனாங்க. இங்க வேலை கிடைக்கலைன்னு போகலை. சம்பளம் நிறைய வரும், இன்னும் வசதியா வாழலாம்ன்னு போனாங்க.

''இப்படி மேல்நாட்டுக்கு வேலை தேடிப் போகும் மக்களும், 'புலம் பெயர் தொழிலாளர்கள்' தான். வித்தியாசம் என்னன்னா, இவங்க நல்லா இங்கிலீஷ் பேசுவாங்க. கோட்டு, சூட்டு போட்டிருப்பாங்க.''

அஞ்சலையின் வார்த்தை, எத்தனை உண்மை என்பதை உணர்த்தியது. கார்த்திக், அமெரிக்காவில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் தான், சென்னையின் மையப் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிந்தது.

மேலும், அஞ்சலை தொடர்ந்தாள்...

''அம்மா... இன்னும், 2, 3 மாசத்துல எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதுன்னா கட்டட வேலை, கடை வேலை எல்லாத்துக்கும் நமக்கு ஆளுங்க வேண்டியிருக்கும். கஷ்ட காலத்தில, அவங்களை நல்லா பார்த்துக்கிட்டா, அவங்க நிச்சயமாகத் திரும்பி வருவாங்க... நமக்கும் வேலை ஆகும்,'' என்றபடியே, வீட்டு வேலையைத் தொடரச் சென்றாள்.

நாட்டின் வளர்ச்சிக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தேவையை, நாம் அறிந்ததை விட, அஞ்சலை நன்றாகவே உணர்ந்திருக்கிறாள் என்று, எனக்குத் தோன்றியது. கையில் பணத்துடன் வந்தான், கார்த்திக்.

''அப்பா... அஞ்சலைக்கு, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துடுங்க. மூன்று மாத சம்பளம், 15 ஆயிரம். அத்துடன், 5,000 ரூபாய், அஞ்சலை செய்கிற சேவையில், நம் சிறிய பங்கு,'' என்றான், கார்த்திக்.

'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே'

- புறநானுாறு.

தமக்கென செய்து கொள்ளாமல், மற்றவர்களுக்காக உழைக்கும் குணமுள்ளவர்களால் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

கே. என். சுவாமிநாதன்

என் வயது, 71. மின்னணு பொறியியல் படித்து, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பற்பல மாவட்டங்களில் பணிபுரிந்து, தன்னார்வ ஓய்வு எடுத்துக் கொண்டேன்.

கடந்த, 15 ஆண்டுகளாக, உயர் கல்வியில் சேருவதற்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன்.

தமிழ் இலக்கியத்திலும், வேத கணிதத்திலும் ஆர்வமுள்ளவன். 'யு டியூப் - ஸ்வாமிமேடிக்ஸ்' என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து விளக்கி வருகிறேன். இக்கதை, என்னுடைய கன்னி முயற்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us