PUBLISHED ON : அக் 04, 2020

கமலுக்கு வந்த தேர்தல் ஜுரம்!
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் 'லாக் டவுன்' போன்ற காரணங்களால், ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வரும், இந்தியன் -- 2 படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில், 2021, மே மாதத்தில், சட்டசபை தேர்தல் வரப்போவதால், தன் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார், கமல். அதனால், 'வருகிற ஜனவரி மாதத்தோடு, எனக்கான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி, என்னை விட்டு விடுங்கள். நான் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும்...' என்று, இயக்குனர் ஷங்கரிடம், அவசர கோரிக்கை வைத்திருக்கிறார். அதோடு, இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், எந்நேரமும் தேர்தல் ஜுரத்திலேயே, கமல் இருப்பதாக சொல்கின்றனர்.
— சினிமா பொன்னையா
'லெக்பீஸ்' நடிகையான, ஆண்ட்ரியா!
குஜராத் குதிரை நமீதா, திருமணம் செய்து, 'செட்டில்' ஆகிவிட்ட நிலையில், தற்போது, கோலிவுட்டில், முரட்டு அரேபிய குதிரையாக வலம் வருகிறார், ஆண்ட்ரியா. அதோடு, மந்தமாகியுள்ள தன் மார்க்கெட்டை, கொழுந்து விட்டு எரிய வைப்பதற்காக, மீண்டும் இறங்கியடித்து வருகிறார். 'சிம்ரன், இடுப்பு நடனத்தைக் காட்டி, ரசிகர்களை சுண்டியிழுத்தது போன்று, நான் தொடைக் கவர்ச்சியை வெளிப்படுத்தும், 'லெக்பீஸ்' நடனமாடி, ரசிகர்களை சொக்க வைக்கப் போகிறேன்...' என்கிறார். அதற்காக, தன் தொடையழகை மேலும் மெருகேற்ற, புதிய, 'டெக்னிக்'களுடன் கூடிய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
— எலீசா
காஜலை புலம்ப விட்ட, மடோனா!
மாஸ்டர் படத்தை அடுத்து, விஜய் நடிக்கும், 65வது படத்தில் நடிக்க, கடும் முயற்சி எடுத்து வருகிறார், காஜல் அகர்வால். ஆனால், அந்த படத்தில், பிரேமம் புகழ், மடோனா செபஸ்டியன் நடிப்பதாக, தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த, காஜல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டபோதும், அவருக்கு சரியான பதில் கொடுக்காமல், 'டீலில்' விட்டுள்ளனர். இதனால், 'மெகா நடிகையான நான், ஒரு சிறிய நடிகையிடம் தோற்று விடுவேன் போலிருக்கே...' என்று, சினிமா நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். கட்டி வழி விட்டால், வெட்டி அரசாளலாம்!
— எலீசா
'டீன்ஏஜ் கேர்ளான' சிவாஜி கேர்ள்!
சிவாஜிகேர்ள் ஸ்ரேயா, திருமணத்திற்கு பிறகும் இளவட்ட நடிகைகளையே துாக்கிச் சாப்பிடும் அளவுக்கு படு கவர்ச்சியாக வலம் வருகிறார். ஆன போதும், ரஜினிக்கெல்லாம் ஜோடியாக நடித்தவர் என்பதால், அவரை முத்தின நடிகை என்கிற கோணத்திலேயே பார்க்கிறது கோடம்பாக்கம். இந்த சேதி, ஸ்ரேயாவின் காதுகளை எட்டியதை அடுத்து, சில குட்டியான ஆடைகளை அணிந்து, 'ஆல்பம்' எடுத்து சுற்றலில் விட்டிருப்பவர், 'என்னை, சிவாஜிகேர்ள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், 'டீன்ஏஜ் கேர்ள்' என்ற கோணத்தில் பாருங்கள். ரொம்ப சின்னப்பெண்ணாக தெரிவேன்...' என்று, இயக்குனர்களை, அன்பொழுக கேட்டு வருகிறார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
— எலீசா
'அப்டேட்'டுக்கு வந்த, வடிவேலு!
மீடியா வெளிச்சம் தன் மீது விழுந்து கொண்டேயிருந்தால் தான், 'அப்டேட்'டில் இருக்க முடியும் என்பதால், 'சோஷியல் மீடியா'விற்குள் வந்து விட்டார், வடிவேலு. அதோடு, மீண்டும் சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுக்க தயாராகி விட்டவர், தன்னைப் பற்றி, ரசிகர்கள் கொடுக்கும், 'கமென்ட்'டுகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மேலும், 'டுவிட்டரில்' ரசிகர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் கொடுத்து, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதற்கேற்ற வேடங்களை தேர்வு செய்து நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
அந்த பரதேசி நடிகர், தன்னுடன் நடித்த இரண்டு, மூன்று நடிகையருடன் அடுத்தடுத்து காதல், 'கிசுகிசு'வில் சிக்கியதை அடுத்து, அவரது, 'இமேஜ்' ரொம்பவே, 'டேமேஜ்' ஆகி விட்டது. அதையடுத்து, 'தொழில் செய்யும் இடத்தில், காதல் கத்தரிக்காய் என்று அலைந்து கொண்டிருந்தால், தொழிலில் ஆர்வம் இருக்காது. மார்க்கெட்டும் மண்ணைக் கவ்வி விடும்...' என்று, சிலர், 'அட்வைஸ்' கொடுக்க, 'இப்போது, நான் முழுசா திருந்திட்டேன்...' என்று, தன்னை சந்திப்பவர்களிடம் கூறுகிறார், நடிகர். ஆனால், அவர் அப்படி சொல்லிச் சென்றதும், 'இதெல்லாம் ஒரு கண்ணுக்கழகான நடிகையை நேரில் பார்ப்பது வரை தான். பார்த்த அடுத்த கணமே, காதல் வயப்பட்டு, கற்பனையிலேயே, ஆதாம் - ஏவாள் காலத்துக்கு போய் விடுவார், நடிகர்...' என்று, சக நடிகர்கள், அவரது காதல் லீலைகளைப் பற்றி, கதை கதையாய் சொல்கின்றனர்.
'டேய் அதர்வா... சொன்னா கேளுடா... வேலை நேரத்துல, உடன் பணிபுரியும் பெண்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று, அடிக்கடி அலுவலகத்தை விட்டு வெளியே போயிடுற... உன் மேலே மேனேஜர் செம கடுப்புல இருக்கார். உஷாரா இருடா...'
'சரி மச்சி... இனிமே பெண்கள் பக்கமே திரும்ப மாட்டேன்... போதுமா நண்பா...'
'உன் இந்த முடிவுல உறுதியா இரு... வேலை கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு... அத கெடுத்துக்கப் போற...' என்று அறிவுறுத்தினான், நண்பன்.
சினி துளிகள்!
* 'ரொமான்டிக்' நாயகன் என்ற பட்டியலில் இருந்து, 'ஆக் ஷனு'க்கு மாறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார், அதர்வா.
அவ்ளோதான்!
