PUBLISHED ON : அக் 04, 2020

மெல்ல கால்களை வைத்து, அருணின் அறைக்குள் நுழைந்தார், கோபால். கட்டிலின் ஓரமாக அவன் ஒருக்களித்துப் படுத்திருந்தான். சுற்றிலும் புத்தகங்கள். தரையில் விழுந்த சருகுகளுக்கு நடுவே ஒரு புறா படுத்திருப்பதைப் போலிருந்தது. பெருமையாக இருந்தது.
இரவு முழுவதும் அவன் படித்துக் கொண்டிருந்தான். புத்தகங்களின் பெயர்களைப் பார்த்தார்.
'சோலார் எனர்ஜி, சோலார் தெர்மல் பவர், போட்டோ வோல்டெக்ஸ், தின் பிலிம், மோனோகிறிஸ்டல், சன்லைட் இண்ட்டு சோலார் எனர்ஜி...'
இந்த ஆண்டோடு படிப்பு முடிகிறது. உயர் பட்டதாரி ஆகி விடுவான். ஆசைப்பட்ட வேலை கிடைக்க அற்புதமான வாய்ப்புகள் இருக்கின்றன. சூரிய மின்சாரம் தயாரிப்பு மேல் அவ்வளவு ஈடுபாடு. 10ம் வகுப்பிலேயே தெளிவு வந்து விட்டது.
'அபரிமிதமாக சூரிய வெளிச்சம் இருக்கிற நாட்டில், அதன் எரிசக்தியை சரியாகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். அதன் தொடர்பான பணியே என் எதிர்காலம்...' என்று சொல்லி விட்டான்.
அவரும் விசாரித்தார். திருப்தியாகத்தான் இருந்தது. அருணிற்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.
அம்மாவும், கமலியும் பேசிக் கொண்டிருந்தனர். காபி கலந்து எடுத்து வந்தாள், கமலி.
''ராத்திரி எல்லாம் அருண் படிச்சுகிட்டே இருந்தான்னு நினைக்கிறேன்... இப்போ அடிச்சு போட்ட மாதிரி துாங்கறான்,'' என்றார் புன்னகையுடன்.
அம்மாவும் சிரித்தபடி, ''கடைசி செமஸ்டர் வருதில்லையா, முதல் இடத்துல வரணும் பாட்டின்னு சொல்லிட்டே இருக்கான்... அப்படியே உன்னை மாதிரி தான் கோபாலா அவனும்... எதுல கலந்துகிட்டாலும் முதல் பரிசு வாங்கணும்ன்னு, வேகம் இருக்கும் உனக்கு... இல்லேன்னா அழுவே,'' என்றாள்.
''ஆமாம்மா... சீட்டுக்கட்டு விளையட்டுல கூட தோத்தா அழுதுடுவேன். ஆனா, அந்த குணம் தான் அலுவலகத்துலயும் சீக்கிரமா நிறைய பதவி உயர்வுகளை வாங்க வெச்சது... ஏ.ஜி.எம்., வரைக்கும் போக வெச்சது.''
கமலா எழுந்து, பின்பக்கம் போனாள்.
''இந்த புதினாவைக் கொஞ்சம் ஆய்ந்து கொடுங்களேன்,'' என்ற அவள் குறிப்பை உணர்ந்து, அவரும் அடுக்களைக்குள் நுழைந்தார்.
''சொல்லு கமலி... என்ன?''
''அருணை சரியா கவனிக்கலையா நீங்க?''
''ஏன்... புரியலயே நீ சொல்றது?''
''கொஞ்ச நாளா அவன்கிட்டே மாற்றம் தெரியுது. சாப்பாடு, பேச்சு, விளையாட்டுன்னு எல்லாத்துலயும் ஆர்வம் குறைஞ்சிருக்கு... எப்பவும் அறைக்குள்ளே போய் கதவை சாத்திக்கறான்... வெளில வரும்போது கண்ணு ரெண்டும் நட்சத்திரம் மாதிரி ஜொலிக்குது... நம்மளை பாத்ததும் சாதாரணமா ஆகிடறான்.''
''என்ன சொல்ல வரே கமலி?''
''அவன், 'லவ்' பண்றான்னு நினைக்கிறேன்.''
''என்ன?''
''ஆமாம்... உள்ளுணர்வு சொல்றது எனக்கு. கவிதை மாதிரி எழுதி இருக்கான்; பார்த்தேன். எல்லாம் காதல் கவிதைகள். காதலற்ற வாழ்க்கை, கனிகளற்ற மரம், ஜான் கீட்ஸ், ஷெல்லி, ஜிப்ரான்னு, என்னென்னவோ எழுதியிருக்கான். நிச்சயமா ஒரு பொண்ணு இருக்கா,'' என்றபடி பெருமூச்சு விட்டாள், கமலி.
''சரி சரி... நான் பார்த்துக்கறேன்... நீ ஏற்கனவே பிபி பேஷன்ட், எதையும் நெனச்சு குழப்பிக்காதே சரியா... எல்லாம் பார்த்துக்கலாம்.''
''சரிங்க... கவனமா பாருங்க,'' என்று கரகரத்தாள்.
மனைவி சொன்னது, உண்மை தான் என்று, ஒரு வாரத்திற்குள்ளேயே தெரிந்து விட்டது. அவன் மொபைல் போனில் பேசும்போது, ஒரு பெண்ணின் படம் இருப்பதை பார்த்தார்.
'என்னை தாலாட்ட வருவாளா...' என்று விஜய் போல, மாடியில் ஆடுவதைக் கவனித்தார். நண்பனுடன் போனில் பேசும்போது, நிவேதா நிவேதா என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்தான். அப்படி உச்சரிக்கும் போதெல்லாம் முகம் ஒளிர்வது தெரிந்தது.
மனம் கனத்துப் போனது.
'அய்யோ... அருண், நீயும் காதலில் சிக்கி விட்டாயா... எவ்வளவு அருமையான கனவுகள் வைத்திருக்கிறாய். இந்த ஐந்து ஆண்டுகளில், நீ பேசியதெல்லாம், பவர் ப்ளான்ட், சூரிய மின்சாரம், எரிசக்தி, தேசத்தின் பாதுகாப்பு இப்படியெல்லாம் தானே...
'உன் மனதின் அடியாழத்திலிருந்து வருகிற அந்த உணர்வுகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும். சென்றடைய வேண்டிய இடத்தை, இதயத்தால் யோசித்து வைத்திருக்கிறான் மகன் என்று பெருமையாக இருக்கும்.
'மற்ற பையன்கள், கோவா, மதுபானம், புகை என்றெல்லாம் சுற்றுவதைப் பார்க்கும்போது, மனம் பதறும். நம் மகன், ஒரு தவப்புதல்வன் என்று நெகிழ்ச்சியுறும். ஆனால், கடைசியில், காதல் உன்னைக் கவிழ்த்து விட்டதா, அருண்.
'உன் கனவுகளுக்கு நடுவில் சுவர் போல ஒன்றை எழுப்பிக் கொண்டிருக்கிறதா... என்ன செய்வேன், வேண்டாம் என்று எப்படி சொல்வேன்...' என்று கலங்கினார்.
''கோபாலா, வாயேன்... கொஞ்சம் கால் வலி, களிம்பு வேணும்,'' என்ற அம்மாவின் குரல் கேட்டு, அவர் உள்ளே வந்தார்.
''இந்தாம்மா.''
''கோபாலா... என்ன ஆச்சு, ஏன் முகம் கறுத்திருக்கு?'' என்று, அவரையே பார்த்தாள், அம்மா.
''கவலைதாம்மா... எல்லாம் விதிப்படி தான் நடக்குமா என்ன... ரொம்ப வருத்தமா இருக்கும்மா,'' என்றார் பெருமூச்சுடன்.
''தெளிவா சொல்லேன்.''
''அருண், பழைய மாதிரி இல்லயேம்மா... படிப்புல ஆர்வம் பாதியா குறைஞ்சிருக்கு... அவனும், காதல் கத்திரிக்காய்னு மாட்டிகிட்டிருக்கான்... சும்மா சொல்லல்லே, அந்தப் பொண்ணோட பேசறான். கவிதையா எழுதறான், மாடில பாட்டு, டான்ஸ்ன்னு...
''மதிப்பா ஒரு வாழ்க்கையை அழகா வாழப் போறான்னு, அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தேன். எல்லாத்துலயும் மண்ணும்மா,'' என்பதற்குள் குரல் வழுவழுத்தார்.
திகைப்புடன் பார்த்தாள், அம்மா. ஒரு கணம் தான். மெல்ல மெல்ல புன்னகை வந்து, அவள் முகத்தை மென்மையாக்கியது.
''காதல்ங்கிறது தப்புன்னு நெனைக்கிறியா கோபாலா?'' என்றாள் பொறுமையாக.
''பின்னே... இது படிக்கிற பருவம்மா, முக்கியமான காலகட்டம். இதுல காதல் என்கிறது கண்றாவி இல்லையா?''
''அவனுக்கு, 20 வயசுப்பா... இளமை, வேகம், ஆசை, ஆர்வம்னு எல்லாம் உச்சத்துல இருக்கிற காலம்... காதல்ங்கிறது இந்த வயதின் இயல்பு, கோபாலா... ரொம்ப இயற்கையான விஷயம்.''
''என்னம்மா புரியாம பேசறே, கனவெல்லாம் பாழாப் போய்டும். மனசை திசை திருப்பிடும்.''
''உனக்குத் தெரிஞ்ச ஒருத்தரை சொல்லு பாக்கலாம்... இளம் வயதில் காதலிக்காத ஒரே ஒருத்தரை...''
''என்ன,'' என்று திடுக்கிட்டார்.
''காந்தியே காதலிச்சிருக்கார் தெரியுமா... சத்திய சோதனை படிச்சுப் பார்... இள வயது காதல், பப்பி லவ்... காந்திக்கு ரொம்ப பிடிச்ச டால்ஸ்டாய் கூட காதலிச்சிருக்கார், தன்னோட, 20வது வயசுல...
''அவ்வளவு ஏன், உன் அப்பா, தன் அத்தை பெண் காமாட்சியை, ஒரு தலைபட்சமாக காதலிச்சதை என்கிட்டயே சொல்லியிருக்கார்... அதோ, அந்த, 'ஆல்பத்'தை எடேன்.''
''இந்தா.''
''இது, உன் புகைப்படங்கள் கோபாலா. வயது வாரியா அடுக்கி வெச்சிருக்கேன். இது, உன் காலேஜ் படம்; இது, வேலைக்கு சேரும்போது பயிற்சிக் காலத்துல எடுத்தது. பாரேன்,'' என்று இரண்டு படங்களை, அவர் கையில் வைத்தாள் அம்மா.
பார்த்தார்.
சட்டென இரண்டு தாமரைகள் மொட்டு விட்டதைப் போல, உள்ளே துடிப்புகள் எழுந்து அடங்கின.
கஸ்துாரி, கல்லுாரியின் பிரதான அழகி. கறுப்பு மச்சமும், வெளிர் முகமும், வெண்மை சுரிதாருமாக, காற்றில் மிதக்கும் மேகம் போல, அவள் எவ்வளவு அழகு... அவ்வளவு அன்பாகப் பழகினாள். கொஞ்சம் மனம் திறந்து பேசியிருந்தால், காதல் கனிந்திருக்கும். ஆனால், அந்தளவிற்கு தைரியமில்லை.
இது, பல்லவி அல்லவா... பாட்னா பயிற்சியில், அவள் ஒரு வண்ணத்துப் பூச்சி போல வகுப்பை வண்ணமய மாக்கினாள். 'கோப்பால் - கோப்பால்...' என்று, கொஞ்சி கொஞ்சி, சரோஜாதேவி போல தமிழ் பேசுவாள். எல்லா சந்தேகங்களுக்கும் கோபால் தான் விடை சொல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டாள்.
மற்ற மாணவர்களின் பொறாமைப் பார்வைகள் பார்க்க பார்க்க, அவ்வளவு பெருமிதமாக இருக்கும். நட்பின் உச்சக்கட்டத்தில், அதே எல்லையில் நின்றே விடை பெற்றுப் போனாள், பல்லவி.
''எனக்குத் தெரியும் கோபாலா... அதெல்லாம் அந்த நேரத்து நேசங்கள், அழகான அன்பு. ரோஜா தோட்டத்தை சுற்றிச் சுற்றி வருகிற மாதிரி ஒரு ஈர்ப்பு. அவ்வளவுதான்... நம் வளர்ப்பில் நம் இன்பம் பெரிதல்ல என்று நமக்குத் தெரியும். பொறுப்பும் கடமையும் தான் சரியான வாழ்க்கை என்று தெரியும்.
''நினைவுகளை பொக்கிஷம் மாதிரி உள்ளே வைத்துக் கொள்வோம், மயில் இறகுகளை குழந்தைகள், ரகசியமாக வைத்துக் கொள்கிற மாதிரி. அதற்கு மேல் அந்த ரகசியங்களால் எந்த ஆபத்தும் இல்லை. நிஜமாக நமக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணைக்கு எந்த துரோகத்தையும் செய்யாத அன்பு நினைவுகள் மட்டுமே அதெல்லாம்.''
அவர் வியப்புடன் கவனித்தார்.
''இந்தக் கட்டத்தை தாண்டி வருவான், அருண். தானாக நடக்கும். காதல் தீவிரமாக இருந்தால் நம்மிடம் சொல்லி விடுவான். முடிந்த வரை நாமளும் அதை, அவன் கைசேர்க்கலாம். ஒருவேளை அது பலகீனமான காதலாக இருந்தால், தானாக நகர்ந்து போகும், வெறும் நினைவுகளுடன்.
''அப்போதும், அந்த கட்டத்தைத் தாண்ட நாம் உதவலாம். எல்லாமே இயல்பாக நடக்கட்டும். நான் உன்னை அப்படித்தான் விட்டேன். உன் அப்பாவின் அம்மாவும் அப்படித்தான் விட்டிருப்பார். எல்லாம் சரியாகவே நடக்கும், கோபாலா... விடு, விட்டு நகர்ந்து நில்... சரியா?''
''நிச்சயமாக அம்மா... நன்றாகப் புரிந்தது; நாம் காத்திருக்கலாம். அருண் மேல் எப்போதும் போல, இல்லை இல்லை, எப்போதையும் விட அன்பாக இருக்கலாம்,'' என்றபோது, அவர் மனது அமைதியுடன் இருந்தது.
வி. சுந்தரிபாய்
