PUBLISHED ON : ஜூன் 11, 2017

மொறு மொறுவென இருக்கும், காரசேவுக்கு புகழ் பெற்ற ஊர், சாத்தூர். கடலை மாவில், பூண்டு, சீரகம் மற்றும் மட்டிப் பெருங்காயம் சேர்ப்பதால், கூடுதல் சுவை தருவதுடன், உடலுக்கும் உபாதை தருவதில்லை. இதன் தனித்தன்மையால், சுற்று வட்டாரப் பகுதிகளில், மணமக்களுக்கு தரும் திருமண
சீருடன், காரசேவு தவறாமல் இடம் பிடிக்கிறது.
இவ்வூரில், பெரும்பாலான கடைகளில் காரசேவு விற்றாலும், பேருந்து நிலையம் அருகே, ரயில்வே பீடர் சாலையில் உள்ள, நாடார் கடை, மிக பிரபலம். 1914ம் ஆண்டு, சாதாரண மிட்டாய் கடையாக துவங்கியது, இன்று, காரசேவுக்கு புகழ் பெற்ற கடையாக திகழ்கிறது. கடைக்காரர் சண்முகநாதன் இது குறித்து கூறும் போது,''செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு மற்றும் நாங்களே இடித்து எடுத்த மிளகாய் பொடியில்
பதமான கைப்பக்குவத்தில் தயாரிக்கிறோம். இரண்டு மாதம் வரை கெடாது; சிக்கு வாசனையும் வராது,''என்றார்.
சிங்கப்பூர், மலேஷியா மற்றும் அமெரிக்கா என, வெளிநாடுகளுக்கும், சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கும், பார்சல் அனுப்புகின்றனர். தென்
மாவட்டங்களில் சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திர நாட்களில், இங்குள்ள குல தெய்வ கோவில்களில் வழிபாடு நடக்கும்; பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள், காரசேவை, பிரசாதம் போலவே வாங்கிச் செல்கின்றனர்.
சண்முகநாதன் மொபைல் எண்: 94426 89230.
மு. ஆதவன்
