தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம்!


PUBLISHED ON : ஆக 19, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 22 - சென்னை தினம்!

ஆனந்தரங்கப் பிள்ளை!

புதுச்சேரியை ஆண்ட, பிரெஞ்ச் கவர்னர் டூப்ளேயின் உதவியாளராக இருந்தவர், ஆனந்தரங்கப் பிள்ளை. இவர், பிரதம மந்திரியாகவும், ராணுவ ஆலோசகராகவும், பிரெஞ்சுக்காரர்களின் வியாபார பங்காளியாகவும் இருந்தார். இவர்,

கி.பி., 1736- முதல் 1761 வரை ஒவ்வொரு நாளும் நிகழ்ந்த நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். இதற்கு, 'தினப்படி செய்தி குறிப்பு மற்றும் சொஸ்த லிகிதம்' என, பெயரிடுள்ளார். அன்றைய அரசியல் அரங்கை அறிந்துகொள்ள இந்த குறிப்புகள் இன்றும் நமக்கு உதவியாக இருக்கின்றன.

கவர்னர் டூப்ளேக்ஸ், நாள்தோறும் காலையில், சிற்றுண்டி அருந்தியதும், ஆனந்தரங்கப் பிள்ளையை தம் அவைக்கு வரவழைத்து, நாட்டு நடப்பு பற்றிய செய்திகளையும், யோசனைகளையும் கேட்பதை வழக்கமாக வைத்திருந்ததை இந்த, 'டைரி'யில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் நாட்குறிப்பில், பெரும்பகுதி வணிக செய்தி, நீதி வழங்கல் மற்றும் தண்டனை அளித்தல் ஆகியவையே இடம்பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் மற்றும் போர்ச்சுகீசியம் என பல மொழிகளை அறிந்து வைத்திருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பெரும் பணக்காரராக இருந்துள்ளார்.

தென்னிந்திய அரசியலில் சாணக்கியராக திகழ்ந்த அவர், 'ஆனந்த புரவி' என, சொந்தமாக கப்பல் ஒன்றையும் வைத்திருந்தார். கலைஞர்களை ஆதரித்த ஆனந்தரங்கப் பிள்ளையை புகழ்ந்து, நிறைய பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

பல்லக்கில் மேள வாத்தியத்தோடு கவர்னர் மாளிகையினுள் போகவும், தங்க பிடியிட்ட கைத்தடி வைத்திருக்கவும், பாதரட்சை அணிந்து கவர்னரின் அலுவலகத்திற்குள் செல்லவும் ஆனந்தரங்கப் பிள்ளைக்கு சிறப்பு உரிமை வழங்கப்பட்டிருந்தது.

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளை, 1946ல், கலுவா - மொம்பிரேன் என்ற ஆங்கில வருவாய் அதிகாரிதான் முதலில் கண்டெடுத்து பிரதி எடுத்தார். இப்படிதான் இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷம் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

'குஜிலி பஜார்!'

அந்த கால சென்னைவாசிகளுக்கு, 'ஷாப்பிங்' செய்ய வசதி இருந்ததா... அவர்கள் தங்களின், 'ஷாப்பிங்' ஆர்வத்தை எங்கு தணித்துக் கொண்டனர்... இதற்கான விடையை தேடியபோது தான், சென்னையின் சுவாரஸ்யமான பஜார் பற்றிய செய்திகள் தெரிய வந்தன.

பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறுதியில், இன்றைய சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஒரு பஜார் இருந்தது. இதன் பெயர், 'குஜிலி பஜார்!'

பாரிமுனை, கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள இப்பகுதியில், நிறைய குஜராத்தியர் வசித்து வந்தனர். இங்கிருந்த ஓர் இளம் குஜராத்தி பெண்ணை பார்த்து பரவசமான சென்னைவாசி ஒருவர், அப்பெண்ணின் மீது உருகி, மருகியதன் விளைவாக உருவானதே, 'குஜிலி' என்ற சொல். குஜராத்தி + கிளி என்பதை, சென்னை பாஷைக்கே உரிய பாணியில், ரத்தின சுருக்கமாக, 'குஜிலி' என்பர்.

'குஜிலி' ஏரியாவில் இருக்கும் பஜார் என்பதால், 'குஜிலி பஜார்' என்று பெயர் வந்திருக்கலாம் என, மொழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'குஜிலி' என்பது உருது மொழி சொல் என்றும் ஒரு கருத்து உள்ளது.

'குஜிலி பஜார்' என்பதை, 'மாலை நேரக் கடைத்தெரு' என்றும் சொல்லலாம். இந்த பஜாரின் கதாநாயகன் பாட்டு புத்தகங்கள் தான். ஆனால் இங்கு கிடைத்தது, சினிமா பாடல்கள் அல்ல; 'குஜிலி' பாடல்கள். புகைவண்டி, மின் விளக்கு, மண்ணெண்ணெய், சிகரெட் மற்றும் தேனீர் என, எந்த பொருள் புதிதாக அறிமுகமானாலும், அதை பற்றி பாட்டெழுதி இருக்கின்றனர். பொருட்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களையும் பாட்டாக்கியுள்ளனர். இவற்றையே, 'குஜிலி' பாடல்கள் என, அழைத்தனர்.

அரை அணா இருந்தால், வித்தியாச பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கி விடலாம்.

சாதாரண உப்புமாவில் இருந்து, உப்பு சத்தியாகிரகம் வரை, 'குஜிலி' கவிஞர்களின் பாடு பொருட்களாக இருந்தன. விடுதலை போராட்டத்தில், தலைவர்கள் கைதானபோது, 'அரெஸ்ட் பாட்டு' என்றே சில பாடல்கள் எழுதப்பட்டு, மக்கள் மத்தியில், 'சுடச்சுட' வினியோகிக்கப் பட்டிருக்கின்றன. தேச பக்தர்களுக்கு எதிரானோரும், 'குஜிலி'யை கும்மி எடுத்துள்ளனர். அவர்கள் தரப்பிலிருந்து, 'ராஜ விசுவாச கும்மி' போன்ற சில புத்தகங்களும் வெளி வந்துள்ளன.

இப்படி வெளியான இருதரப்பு பாடல்களுக்கும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளன.

கடந்த, 1920 - 30களின் துவக்கத்தில், கிராமபோன் இசைத்தட்டுகள் பிரபலமாகின. ரேடியோ இல்லாத காலம் அது...

எச்.எம்.வீ., கொலம்பியா மற்றும் ஓடியன் போன்ற இசைத்தட்டு கம்பெனிகள், பிரபல நாடக மேடை பாடகர்கள் மூலம் இசைத்தட்டுகளை வெளியிட்டன. கிராமபோன் பாடல் வரிகளை அச்சிட்டு காசு பார்த்தனர், 'குஜிலி' கடைக்காரர்கள்.

பிரபல பாடகர்களின் பெயரில் தனி பாட்டு புத்தகம் போடும் வழக்கம் அப்போதுதான் துவங்கியது. எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி.கிட்டப்பா,

கே.பி.சுந்தராம்பாள் மற்றும் எஸ்.எஸ்.பபூன் சண்முகம் போன்றோருக்கு தனி புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அவர்களின் ரசிகர்கள், அவற்றை வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். 1960ல், பாட்டு புத்தகங்கள், கதை பாடல்கள் மற்றும் வெகுஜன நாட்டார் இலக்கியங்கள் என்று, குஜிலி பஜாரில் கிடைத்தன.

'குஜிலி பஜாரின்' ஒரு மூலையில், 'ஈவ்னிங் பஜார்' என்றும், மற்றொன்று, 'தீவிங் பஜார்' என்றும் அழைக்கப்பட்டன. 'பஞ்சாமிர்தம்' என்ற இதழில், மாதவையா என்பவர் இதுபற்றி எழுதியுள்ளார்.

குஜிலி பஜாருக்கு அருகிலேயே, சைனா பஜார் இருந்தது. எப்போதும் ஜன நெரிசல் உள்ள இவ்வீதியை பார்க்க வினோதமாய் இருக்கும். துணிமணிகள், கண்கவர் பொருட்கள், சித்திர படங்கள், பொன், வெள்ளி ஆபரணங்கள், செம்பு, பித்தளை, வெண்கல பாத்திரங்கள், வாசனை திரவியங்கள், குடை, மிட்டாய் விற்கும் கடைகள், சைனா பஜார் வீதியில் இருந்தன.

வேடிக்கை பார்ப்பதில் மட்டும் மனதை பறிகொடுக்காமல், அவ்வப்போது தாம் கொண்டு வரும் பணப் பையிலும் கவனம் வேண்டும். இங்கு, விளக்கு வெளிச்சம் குறைவாக இருக்கும். அதனால், இவ்விடத்தில் வழிப்பறி திருடர்கள் அதிகம்.

பர்மாவிலிருந்து வந்து குடியேறியோருக்காக, 1960ல் ஒதுக்கப்பட்ட பகுதி தான், 'பர்மா பஜார்!'

திருட்டு பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன என்பதால், பர்மா பஜாரை, 'தீவ்ஸ் பஜார்' என்றனராம், வெள்ளையர்.

பார்த்திபன் எழுதிய, 'சென்னையின் கதை' நுாலிலிருந்து தொகுக்கப்பட்டது.

* சென்னை நகரின் மிக நீண்ட தெரு என்ற பெருமைக்குரியது தங்க சாலை; அரசின் நாணயங்களை அச்சடிக்கும் தொழிற்சாலை இங்கு இருந்ததால், இச்சாலைக்கு இப்பெயர் வந்தது.

* சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்பவற்றில் முதன்மையானது, செயின்ட் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டை தான் இன்றைய சென்னை மாநகரம் உருவாகவே காரணமாக இருந்தது. ஆம்... இந்தியாவில், பிரிட்டிஷார் கட்டிய முதல் கோட்டை இது தான்.

* தமிழ் திரைப் படங்களில், நீதிமன்ற படிக்கட்டுகளாக காட்டப்படும், பிரமாண்ட படிக்கட்டுகளை கொண்ட ராஜாஜி ஹால், ஒரு மாபெரும் வெற்றியின் நினைவாக, வானியல் நிபுணருமான, ஜான் கோல்டிங்ஹாம் என்பவரால் கட்டப்பட்டது. ஆம்... திப்பு சுல்தானுக்கு எதிராக நான்காவது மைசூர் யுத்தத்தில் கிழக்கிந்திய படைகள் பெற்ற வெற்றியின் சின்னம் தான் இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us