PUBLISHED ON : ஆக 19, 2018

அன்புள்ள அம்மா —
என் வயது, 40; கணவர் வயது, 44. இரு குழந்தைகள் உள்ளனர்; பள்ளியில் படிக்கின்றனர். வங்கியில் பணிபுரிகிறார், கணவர். நான், மழலையர் பள்ளியில் ஆசிரியையாக உள்ளேன்.
கல்லுாரியில் படிக்கும் போது, நான் தான் முதல் மதிப்பெண் எடுப்பேன்; அழகாகவும் இருப்பேன். என்னுடையது கொஞ்சம் வசதியான குடும்பம்; விலை உயர்ந்த ஆடைகளை அணிவதில் ஆர்வம் உண்டு. என் தந்தையும், நான் கேட்கும்போதெல்லாம் நிறைய உடைகளை வாங்கித் தருவார். உடன் படித்த தோழி ஒருத்தி, என்னுடன் சகஜமாக பேசினாலும், உள்ளுக்குள் பொறாமைப் படுபவளாக இருந்தாள்; இது, எனக்கு புரிந்தாலும், அவளுடன் நட்புடனே பழகுவேன்.
பார்ப்பதற்கு சுமாராகவும், பாஸ் மார்க் மட்டுமே வாங்குவாள். கல்லுாரி காலம் முடிந்ததும், அவளுடன் தொடர்பு விட்டு போயிற்று. திருமணம், குழந்தைகள் என்றானதும், சுத்தமாக, அவளை மறந்து போனேன்.
சமீபத்தில், முகநுாலில், நான் நிறைய பதிவுகள் போட, அத்தோழியிடமிருந்து எனக்கு, 'நட்பு கோரிக்கை' வந்தது. பழைய தோழியாயிற்றே என்று, இணைந்து கொண்டேன்.
அவளது காதல் திருமணம்; அழகான, வசதியான கணவர்; பணக்கார வீட்டு மருமகள். புகழ் பெற்ற பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகள். அரண்மனை போன்ற வீடு, கார் என்று வசதியாக வாழ்வதை, புகைப்படங்கள் மூலம், என்னுடன் பகிர்ந்து கொண்டாள். தொடர்ந்து அவள் அனுப்பும் வெளிநாட்டு டூர் படங்களும், தகவல்களும் என்னை மிகவும், 'டிஸ்டர்ப்' செய்கின்றன.
என்னுடையதும் நிறைவான வாழ்க்கை தான் என்றாலும், அவளது பதிவுகளை பார்க்கும் போது, தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.
'எல்லாவிதத்திலும் என்னை விட கீழாக இருந்தவளுக்கு வந்த வாழ்க்கையை பாரேன்...' என்ற காழ்ப்புணர்ச்சி என்னை அலைக்கழிக்கிறது.
அவள் மீது எனக்கு ஏற்பட்டுள்ளது பொறாமையா அல்லது இயலாமையா... இந்த மன உளைச்சலில் இருந்து விடுபட விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
வாழ்க்கை நடத்தும் ஓட்டப் பந்தயத்தில், சில சமயம், மின்னல் வேகத்தில் ஓடுபவர், முதல் பரிசு வாங்குவதில்லை. பதிலாக, பார்வையாளர் ஒருவருக்கு அந்த பரிசு கிடைத்து விடுகிறது. ஒருவர் நாள் முழுக்க பூமியை தோண்டினால், சிறிய அளவில் மரவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது. இன்னொருவர், ஐந்து நிமிடம் தோண்டினால், மண்பானை நிறைய தங்க காசுகள் கிடைக்கின்றன.
இங்கு, புத்திசாலிகள் எல்லாரும் ஜெயிப்பதில்லை; முட்டாள்கள் எல்லாரும் தோற்பதும் இல்லை. கடின உழைப்பும், புத்திக் கூர்மையும் ஒரு தண்டவாளம் என்றால், இறையருளும், அதிர்ஷ்டமும் இரண்டாவது தண்டவாளம். இரண்டிலும் இணைந்து, ரயில் நகர்ந்தால் தான் வெற்றி இலக்கை சென்றடைய முடியும்.
படிப்பில், நீ மகா கெட்டிக்காரி, பேரழகி என்பதும், உன் தோழி சுமார் மூஞ்சி, வெறும் பாஸ் மார்க் வாங்குபவள் என்பதும் உன் தரப்பு பார்வை. உண்மை வேறாய் இருக்கலாம், தோழியின் மீது உனக்கு பொறாமையும், அதனால், உன் மீது உனக்கு இயலாமையும் ஏற்பட்டுள்ளது. சக மனிதர்களுக்கு, பாஸ் - பெயில் மார்க் போட நாம் யார்... சிலர், ஏட்டு கல்வியில் சறுக்குவர், வாழ்க்கை கல்வியில் உச்சாணி கொம்பு ஏறுவர். தனக்கு பொருத்தமான ஆண் மகனை காதலித்து, திருமணம் செய்து கொள்வது, வெற்றிகரமான வாழ்க்கை கல்வி. அது, எல்லா பெண்களுக்கும் வராது.
ஆணோ - பெண்ணோ அழகாய் தெரிய வேண்டும் என்றால், முதலில் இருபாலரிடமும், 'நான் மிக அழகு... பார்க்கும் அனைவரையும் சுண்டி இழுக்கிறேன்...' என்கிற பாவனை வெளிப்பட வேண்டும். சுமார் மூஞ்சி பெண்களால், நடை, உடை, பாவனை, பேச்சு மற்றும் தோரணையால் ஆண்களை கவர்ந்திழுக்க முடியும்.
இயல்பாகவே நீ, 'சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்' பேர்வழி என்று நினைக்கிறேன். பிரியங்கா சோப்ராவை கொண்டு வந்து உன் முன் நிறுத்தினாலும், குறையாய் தான் மதிப்பிடுவாய். ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை.
பொருளாதார வெற்றியாலும், பகட்டான வாழ்க்கையாலும் மனிதர்களை அளவிட்டு பார்க்காதே. எது உனக்கு கிடைக்கிறதோ அதுவே சிறப்பானது. போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. திருப்தியான மனம், இறைவனின் கோடை வாசஸ்தலம்.
'நான், என் கூட்டில் இணை பறவை, துணை பறவைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் தோழி, அவளது கூட்டில் அவளது துணை பறவைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்...' என நினை. உண்ட உணவு, உடுத்திய ஆடை, இளைப்பாறும் வீடு, கட்டிய கணவன், பெற்ற பிள்ளைகளால் மன நிறைவு வேண்டும். பந்தியில் சாப்பிடும்போது, ஏக்கப்பெருமூச்சு விட்டு பக்கத்து இலை பதார்த்தங்களை பார்க்காதே... அது எச்சில்!
பொறாமை என்பது மனிதரின் பிறவி குணம்; நாம் தான் மனதை கட்டிப்போட்டு, பொறாமைபடாமல் இருக்க பழக்க வேண்டும். வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை, தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உன் தோழி, வேண்டுமென்றே ஆடம்பர வாழ்க்கையை உன்னுடன் பகிர்ந்து, தம்பட்டம் அடிக்கிறாள் என்றால், அவளது நட்பை துாரத்தில் வை. 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு...' என்கிற கண்ணதாசனின் வைர வரிகளை ஆழ் மனதில் பச்சை குத்தி வை.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
