PUBLISHED ON : ஆக 19, 2018

'ஆயிரம் உண்டு இங்கு சேதி' என்ற நுாலிலிருந்து: அமெரிக்காவில், ௮8 டன் எடையுள்ள சுதந்திர தேவி சிலையை அமைத்தவர், அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈபிள். இவர் தான் பிரான்சில் புகழ்பெற்ற, 'ஈபிள்' கோபுரத்தை நிர்மாணித்தவர்.
இந்த சுதந்திர தேவி சிலையை அவர் பிரெஞ்ச் மக்களுக்காகவே அமைத்தார்; ஆனால், 1884ல் பிரெஞ்சு குடிமக்கள், அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கினர்.
நியூயார்க் துறைமுகத்தில், 'பெட்லோ' என்ற ஒரு தீவு இருக்கிறது. அதுதான், சுதந்திர தீவு. அங்கு, இந்த சிலையை, சும்மா அழகுக்காக நிறுத்தி வைக்கவில்லை. இந்த சிலையின் கையில் இருக்கும் விளக்கு, கலங்கரை விளக்கமாக பயன்படுத்தப்படுகிறது.
பீடத்தோடு இதன் உயரம், 305 அடி; இந்த சிலையின் உச்சிக்கு போவதற்கு, சிலையின் உள்ளே படிக்கட்டுகளும், 'லிப்ட்'களும் உள்ளன.
மறைந்த இயக்குனர் பஞ்சு (கிருஷ்ணன் -பஞ்சு), 'பேசும்படம்' இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து: எங்கள் இயக்கத்தில், என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த, நல்லதம்பி படம் பெரிய வெற்றி பெற்றது. அதுபோல், அடுத்து சந்திரபாபுவை வைத்து, ஒரு நகைச்சுவை படம் எடுக்க எண்ணினோம். ஆனால், அப்போது சந்திரபாபுவின் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்; அது, எங்கள் பட்ஜெட்டிற்கு தாங்காது. ஏற்கனவே எங்கள், அன்னை படத்தில், ஓரங்க நாடக காட்சியில், சிறு வேடத்தில் நடித்திருந்தார், நாகேஷ்.
நாகேஷை வைத்து படம் தயாரிக்கலாம் என்று நினைத்தோம்; அப்போது, கே.பாலசந்தர் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தார், நாகேஷ். அவர் மூலம் பாலசந்தரை சந்தித்தோம். அவரிடம், ஆயிரம் ரூபாய் கொடுத்து, 'ஒரு நாடகத்தை, பாலசந்தர் எழுதி, மேடையேற்ற வேண்டும்; அந்த நாடகம் எங்களுக்கு பிடித்திருந்தால் படமாக்குவோம்; இல்லையேல், நாடகம் அமைத்ததற்கு அந்த, ஆயிரம் ரூபாய் அவருக்கு சேர வேண்டியது...' என்று தீர்மானித்தோம்.
இப்படித்தான், சர்வர் சுந்தரம் நாடகம் உதயமானது; பாலசந்தர் நாடகத்தை உருவாக்கி, மேடையேற்றியதும், நாங்கள் பார்த்தோம்; எங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை சொந்தமாகவே தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது.
படம் தயாரிப்பதற்கு பைனான்சியர் ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். இதை எப்படியோ அறிந்துகொண்ட, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், எங்களுக்கு அழைப்பு விடுத்தார். 'வெளியில் எதற்கு பைனான்சியர் தேடுகிறீர்கள்... என்னோடு கூட்டாக தயாரியுங்கள்...' என்றார்.
எங்களுக்கு அவருடைய ஆதரவு கிடைத்தது; நல்ல முறையில், சர்வர் சுந்தரம் படமாகி வெளிவந்து, வெற்றி கண்டது.
'அண்ணா வாழ்வில் அரிய நிகழ்வுகள்' என்ற நுாலிலிருந்து: தமிழக முதலமைச்சராக, பதவி ஏற்றிருந்தார், அண்ணாதுரை. அப்போது, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் தரும் மசோதா பற்றி சட்டமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், கருத்திருமன் பேசும்போது, 'இந்த சுயமரியாதை திருமணத்தால் ஓர் அபாயம் இருக்கிறது; நீங்கள் கொண்டு வருகிற இந்த சுயமரியாதை திருமணத்தால், புரோகிதர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவிடும்...' என்றார்.
உடனே, அண்ணாதுரை எழுந்து, 'இந்த மசோதா, சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுக்கிற மசோதா; புரோகிதர் திருமணங்களை தடை செய்கிற மசோதா அல்ல. அதை, அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை போன்றோர் வேண்டுமானால், ஒரு புரோகிதருக்கு பதிலாக மூன்று புரோகிதர்களை வைத்து நடத்தட்டுமே... இந்த அரசு, அதில் தலையிடாது...' என்று விளக்கினார்.
நடுத்தெரு நாராயணன்
