PUBLISHED ON : ஆக 21, 2022

தென்னிந்தியாவின் முதல் நகரமும், தொன்மையான கலாசாரமும் கொண்டது, தமிழகத்தின் தலைநகரான சென்னை.
கடந்த, 17ம் நுாற்றாண்டில், 'ஜான் கம்பெனி' என்ற கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்தவர்கள், ஆண்ட்ரூ கோகன் மற்றும் பிரான்சிஸ்டே. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின், ஆளுனராக இருந்த, வந்தவாசியை சேர்ந்த வெங்கடாத்ரி நாயக் என்பவரிடமிருந்து, வங்க கடலோரம் இருந்த இந்த மண் திட்டை, இவர்கள் இருவரும் மானியமாக பெற்று, தங்கள் நிறுவனத்தை அங்கு அமைத்தனர்.
அந்த மானிய ஆவணத்தில், ஜூலை 22, 1639ல் மதராஸ் பட்டினத்தை பெற்றதாக குறிப்பு காணப்படுகிறது. ஜூலை 27 அன்று தான் அளிக்கப்பட்டது என்று, இன்னொரு குறிப்பு தெரிவிக்கிறது.
இறுதியாக, ஆகஸ்ட் 27, 1639ல் தான் பெறப்பட்டது என்பதற்கான இன்னொரு ஆதாரமும் கிடைத்தது. ஜூலையோ, ஆகஸ்ட் மாதமோ, நம் பாரம்பரியத்தை பேணும் சில சென்னைவாசிகளால், ஆகஸ்ட் 22 அன்று, சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரான்சிஸ்டே தான், இந்த இடத்துக்கு, 'மதராஸ்' என்று பெயர் சூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னை மாநகரம் உருவாகி, 383வது ஆண்டை கொண்டாட இருக்கிறோம்.
சென்னையின் ஆரம்ப கால வரலாற்றை சற்று புரட்டி பார்ப்போம்...
* 1640 - புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
* 1688 - மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது
* 1693 - எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகள் மெட்ராசுடன் இணைக்கப்பட்டது
* 1746 - பிரெஞ்சுக்காரர்கள் வசமானது மெட்ராஸ்
* 1749 - மீண்டும், ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது
* 1768 - ஆற்காடு நவாப், சேப்பாக்கம் அரண்மனையை கட்டினார்
* 1772 - நகரத்தின் முதல் குடிநீர் திட்டமான, ஏழு கிணறு திட்டம் ஆரம்பமானது
* 1785 - முதல் தபால் நிலையம் செயல்பட துவங்கியது
* 1841 - ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்க, ஐஸ் ஹவுஸ் கட்டப்பட்டது
* 1856 - முதல் ரயில், ராயபுரத்தில் கிளம்பி ஆற்காடு சென்றது
* 1882 - சென்னையில், முதன் முதலில் தொலைபேசி மணி ஒலித்தது
* 1889 - உயர்நீதிமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
* 1895 - மெட்ராசில் டிராம் வண்டிகள் ஓடத் துவங்கின
* 1910 - மெட்ராஸ் வானில், முதல் விமானம் பறந்தது
* 1913 - சென்னையின் முதல் நிரந்தர திரையரங்கமான எலக்ட்ரிக் தியேட்டர், மவுன்ட் ரோடில் ஆரம்பிக்கப்பட்டது. இதே ஆண்டில், ரிப்பன் கட்டடம் திறக்கப்பட்டது.
* 1924 - முதல் வானொலி ஒலிபரப்பு
* 1947 - ஆங்கிலேயர் நிறுவிய நகரங்கள், இந்தியர்கள் வசமானது
* 1996 - மதராசின் பெயர், அதிகாரப்பூர்வமாக சென்னை ஆனது.
தற்காலத்தில் எவ்வளவோ மறைந்து விட்டது; மாறி விட்டது. இருப்பினும், சென்னை தன் நேர்த்தியை இழக்கவில்லை.
சென்னையின் பெருமையை, அடுத்து வரும் பதிவுகளை படித்து அறிந்து கொள்ளலாம்.
* சென்னை துறைமுகம், எண்ணுார் துறைமுகம், காட்டுப்பள்ளியில், மூன்றாவது துறைமுகம் என, மூன்று சர்வதேச துறைமுகங்கள் இருக்கும் இந்தியாவின் ஒரே நகரம், சென்னை தான்.
* உலகிலேயே ராயல் என்பீல்டு பைக்குகள் தயாரிக்கப்படும் ஒரே நகரம், சென்னை தான்.
* இந்தியாவின் மிக நீளமானதும், உலகின், இரண்டாவது நீளமான கடற்கரை சென்னையில் உள்ளது.
* சென்னை மாநகர எல்லைக்குள், கிண்டி தேசிய பூங்கா அமைந்துள்ள ஒரே நகரம்.
* அடையாறு, கூவம் மற்றும் கொற்றலை (கொசஸ்தலை) ஆறு என, மூன்று ஆறுகள் ஓடும் ஒரே நகரம் சென்னை மட்டுமே.
* சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலை, இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வழித்தடமாக விளங்குகிறது.
* சென்னை கோயம்பேடில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் உள்ளது.
* ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நுாற்றாண்டு நுாலகம் சென்னையில் உள்ளது.
* இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா, சென்னை வண்டலுாரில் உள்ளது.
* இந்தியாவின் மிகப்பழமையானது, 1794ல் துவங்கப்பட்ட, சென்னை கிண்டி பொறியியல் கல்லுாரி.
* இந்தியாவின் மிகப் பழமையான வணிக வளாகம், சென்னையில் 1863ல் துவக்கப்பட்ட ஸ்பென்சர் பிளாசா.
* மெட்ராஸ் உயர்நீதிமன்றம், உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகமாகும்.
* இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மேம்பாலங்கள் இங்குள்ளன. கத்திபாரா மேம்பாலம், ஆசியாவிலேயே மிகப்பெரிய க்ளாவர் இலை மேம்பாலமாகும்.
* ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வரும் இந்திய நகரம், சென்னை.
* செஸ் விளையாட்டில் சென்னையில் தான் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.
* சென்னையிலுள்ள ராயபுரம் ரயில் நிலையம், இந்தியாவில் செயல்படும் பழமையான ரயில் நிலையம்.
* உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தி நிலையம், 'இன்டகரல் கோச் பேக்டரி' - ஐ.சி.எப்., இங்கு தான் உள்ளது.
* மெட்ராஸ் மருத்துவ கல்லுாரி, இந்தியாவின் பழமையான மருத்துவ கல்லுாரி மற்றும் பழமையான மருத்துவமனை.
* இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிகளவில் சினிமா தியேட்டர்கள் உள்ளன. தமிழ் திரையுலகம், தமிழகத்துக்கு நான்கு முதல்வர்களை வழங்கியுள்ளது.
* இந்தியாவில் குதிரைப் பந்தயம், மோட்டார் பந்தயம் ஆகிய இரண்டின் பழமையான பந்தயத் தடங்கள் சென்னையில் உள்ளன.
* 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்' கல்லுாரி, இந்தியாவின் பழமையான நுண்கலை நிறுவனம் (1850).
* சென்னை அண்ணாசாலையிலுள்ள ஹிக்கின் பாதம்ஸ், இந்தியாவின் பழமையான புத்தக கடை.
* இ.ஐ.டி., பாரி நிறுவனம், இந்தியாவின் பழமையான நிறுவனம் (1780).
* எம்.ஆர்.எல்., சென்னை, இந்தியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனம்.
* ஏவி.எம்., ஸ்டுடியோ, இந்தியாவில் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.
* செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, இந்தியாவின் மிகப்பழமையான பள்ளி (1715).
மெட்ராசை ஆண்ட தாமஸ் மன்றோ போன்ற ஆளுனர்கள், இங்கு வந்து குடியேறிய தாமஸ் பாரி, பெட்ரூஸ் உஸ்கான் போன்ற பெரு வணிகர்கள்...
பச்சையப்ப முதலியார், சர் பிட்டி தியாகராயர் போன்ற உள்ளூர் பெரிய மனிதர்கள் முதல், சென்னைக்கென பிரத்யேக, 'மெட்ராஸ் பாஷை'யை அறிமுகப்படுத்திய சாதாரண ரிக் ஷா வாலாக்கள் வரை, எத்தனையோ பேர் சேர்ந்து செதுக்கியது தான், இன்றைய சென்னை.
சென்னையின் பழமையைப் பறையசாற்றியபடி, நுாறாண்டுகள் கடந்து நிற்கும் ஒவ்வொரு கட்டடத்திற்கு பின்னும், ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. ஒவ்வொரு சாலைக்கு அடியிலும் ஒரு வரலாறு ஓடிக்கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் உள்வாங்கி, இன்றும் இளமை மாறாமல் அதே துடிப்புடன் செயல்பட்டு வரும் நகரம், நம் சென்னை மாநகரம் தான்.
சென்னை தின வாழ்த்துக்கள்!