
குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்ட, குருவாயூருக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தமிழகத்திலும், முதல் சோறுட்ட இரண்டு தலங்கள் உள்ளன. தஞ்சாவூர் அருகில் உள்ள, திங்களூர் கைலாசநாதர் கோவில், இதில் ஒன்று; இது, நவக்கிரக சந்திரன் தலம்.
நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறுட்டுவது, தாய்மார்களின் வழக்கம். இதன் காரணமாகவும், இவ்வூரில் வசித்த அப்பூதி அடிகளின் மகன், சிறிய திருநாவுக்கரசு, பாம்பு தீண்டி இறந்த போது, அவனை, திருநாவுக்கரசர் காப்பாற்றிய தலம் என்ற முறையிலும், இங்கு சோறுட்டப்படுகிறது.
இதே போல, சிதம்பரம், சிவபுரி உச்சிநாதர் கோவிலிலும், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுகின்றனர்.
பார்வதி தந்த ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தரை, முருகனின் அம்சம் என்பர். இவர், தன் திருமணத்திற்காக, உறவினர் மற்றும் அடியார்களுடன், சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சென்றார். செல்லும் வழியில், உச்சிப் பொழுதாகி விட்டதால், அனைவரும் ஓரிடத்தில் தங்கினர். அந்த இடமே, சிவபுரி.
அவர்களின் பசியை போக்க, பணியாளாக வந்து உணவளித்தார், சிவன். உச்சிப் பொழுதில் தங்க இடம் கொடுத்ததால், இத்தல இறைவன், 'உச்சிநாதர்' என்றும், 'மத்யானேஸ்வரர்' - மத்தியானம் தங்க இடமளித்தவர் என்றும் பெயர் பெற்றார்.
சிவபெருமான், அகத்தியருக்கு திருமண காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கத்தின் பின்புறம் சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் அருளுவது விசேஷம். திருஞானசம்பந்தர், சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில், தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.
சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள கனகாம்பிகையை குலதெய்வமாக போற்றுகின்றனர், மக்கள். இக்கோவிலை, 'கனகாம்பாள் கோவில்' என்றே அழைக்கின்றனர். 'கனகம்' என்றால், 'தங்கம்!'
தங்களுக்கு செல்வச்செழிப்பை அருளுகிறவள் என்பதால், இவள் மீது, மக்களுக்கு, பக்தியும், பாசமும் அதிகம். தேவார பாடல் பெற்ற, காவிரி வடகரை தலங்களில், இது மூன்றாவது தலம். இங்குள்ள முருகன் குறித்து, திருப்புகழ் பாடியுள்ளார், அருணகிரிநாதர்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவில் பிரகாரத்தில், விநாயகர், முருகர், பஞ்ச லிங்கங்கள், சனீஸ்வரர், நவக்கிரகம், நடராஜர், தட்சிணாமூர்த்தி... பிரம்மா, விஷ்ணு, நந்தி, சண்டிகேஸ்வரர், காசிலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் சம்பந்தர் ஆகியோர் உள்ளனர்.
சம்பந்தருக்கு, சிவன் உணவு ஊட்டிய தலம் என்பதால், இங்கு, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 'குழந்தைக் கோவில்' என்ற சிறப்பு பெயரும், இதற்கு உள்ளது. வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவார நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும்.
சிதம்பரம் - கவரப்பட்டு சாலையில், 3 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.
தி. செல்லப்பா