PUBLISHED ON : பிப் 24, 2019

திரைப்படமாகும், மோடி - ராகுலின் வாழ்க்கை வரலாறு!
முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம், இந்தியில் வெளியானது. அதையடுத்து, தற்போதைய பிரதமர், நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம், பி.எம்., நரேந்திர மோடி என்ற பெயரில் தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர், ராகுலின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, மை நேம் இஸ் ராகா என்ற பெயரில் ஒரு படமும், தற்போது தயாராகி வருகிறது.
— சினிமா பொன்னையா
சன்னிலியோனின் அடுத்த, 'டார்க்கெட் ' கேரள ரசிகர்கள்!
பாலிவுட்டில் சன்னிலியோனுக்கான மவுசு இறங்கி விட்டதால், தற்போது தென் மாநில சினிமாவில் தஞ்சமடைந்துள்ளார். அந்த வகையில், தமிழில், வீரமாதேவி படத்தை அடுத்து, விஷாலுடன், அயோக்யா படத்தில், குத்தாட்டம் போட்டு உள்ளார். இதையடுத்து, மலையாள சினிமாவில், மம்மூட்டியுடன், மதுர ராஜா என்ற படத்திற்காகவும், அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார், சன்னி லியோன். மேலும், ஷகீலா போன்ற நடிகையர், கேரள ரசிகர்களை, கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்த கதையை கேள்விப்பட்டு, தன் உச்சக்கட்ட கவர்ச்சியால், மொத்த கேரளாவை, 'கிளீன் போல்ட்' ஆக்கி விடலாம் என்று, தற்போது, மலையாள பட வேட்டையை துரிதப்படுத்தி உள்ளார். போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாள்!
—எலீசா
தமிழில், மஞ்சு வாரியர்!
மலையாள சினிமாவில், 23 ஆண்டுகளாக நடித்து வருபவர், மஞ்சு வாரியர். மலையாள நடிகர், திலீப்பை திருமணம் செய்து, சிறிது காலம் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார். அவரை, மஞ்சு விவாகரத்து செய்த பின், மீண்டும் சினிமாவில், 'பிசி'யாக நடித்து வருகிறார். அதோடு, முதல் முறையாக, தமிழில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், அசுரன் படத்தில் அறிமுகமாகிறார். மலையாளத்தில், கதையின் நாயகியாக நடித்து வரும் சீனியர் நடிகை என்பதால், மஞ்சு வாரியருக்கு, அசுரன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், மஞ்சு வாரியர், தமிழ் சினிமாவில், கதையின் நாயகியாகி விடுவார் என்று கூறுகின்றனர். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்.
—எலீசா
காமெடியில் கலக்கும், ரேவதி!
தனுஷ் இயக்கிய, பவர்பாண்டி படத்தில், ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார், நடிகை ரேவதி. அதன்பின், பிரபுதேவா நடித்த, குலேபகாவலி படத்தில், கார் திருடும் பெண்ணாக ஒரு காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து, இப்போது, குலேபகாவலி இயக்குனர், கல்யாண் இயக்கும் புது படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து, மீண்டும் ஒரு காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், சந்திரபாபு, சார்லி சாப்ளின் போன்று, அங்க சேஷ்டைகள் செய்து, சிரிக்க வைக்கும் 'ஸ்லாப்ஸ்டிக்' வகை காமெடி செய்யப் போவதாக சொல்லும் ரேவதி, 'இந்த காமெடி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, புதிய அனுபவத்தை கொடுக்கும்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தான் நடித்த படத்தின் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில், கந்து வட்டிகாரர்களுடன் சேர்ந்து, முட்டை கண் காமெடியன், அவரை மிரட்டியதாக பரபரப்பு செய்தி வெளியானது. பின், அதற்கு மறுப்பு தெரிவித்தார், காமெடியன். இருப்பினும், சினிமா வட்டார இயக்குனர்கள், மேற்படி காமெடியனை, இப்போது, வில்லனாக பார்க்கத் துவங்கி விட்டனர். இதனால், பட வாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்ற பதட்டத்தில் காணப்படுகிறார், காமெடியன்.
'ஏம்பா கருணாகரா... ஏதோ ஒருமுறை எங்களுக்கு வாடகை கொடுக்காம, 'அல்வா' கொடுத்தே... சரி... சும்மா சும்மா ஏமாத்த நினைக்கிறியே... காமெடி, கீமெடி பண்ணலையே...' என்றார், வீட்டு உரிமையாளர்.
* பாணா காத்தாடி நடிகை, திருமணத்திற்கு பின், நடிப்பை தொடர்ந்த போதும், அவரது அபிமான நடிகர்கள், அவரை ஓரங்கட்டினர். இதனால், சமீபத்தில், தன் புதிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகை, 'இப்போதும் கவர்ச்சி காட்ட, எந்த தங்கு தடையுமில்லை...' என்று, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அம்மணியின் தாராள மனப்பான்மை தொடர்வதைப் பார்த்து, அவரை ஓரங்கட்டிய நடிகர்களே, இப்போது, மறைமுக சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளனர். ஆக, அம்மணியின் ஆட்டம், மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கி இருக்கிறது.
'ஏம்மா சமந்தா... எப்படி இருந்த நீ, இப்புடி ஆயிட்டே... உனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல வழியில் பயன்படுத்திக்குவேன்னு பார்த்தா... இப்படி பாதை மாறி போயிட்டியே... இது சரியா?' என்றார், ஆசிரியர்.
சினி துளிகள்!
* விஜயசேதுபதியுடன், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள, சமந்தா, மீண்டும், துக்ளக் படத்திலும், அவருடன் இணைந்து நடிக்கிறார்.
* காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணசித்ர வேடங்களில் நடிப்பதிலும், அதிக ஆர்வமாக இருக்கிறார், கருணாகரன்.
அவ்ளோதான்!