
பாலு மகேந்திராவை, இந்தியாவெங்கும் அடையாளம் காட்டிய படமாக, மூன்றாம் பிறை வெளியாகி, மகத்தான வெற்றியும் பெற்றது.
தமிழ் சினிமாவில், 'நிகழ்வுகளை மறத்தல்' வியாதியை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட படம் அது. ஏற்கனவே, அமர தீபம், நினைவில் நின்றவள் மற்றும் உள்ளத்தில் குழந்தையடி போன்ற படங்கள், அதே கதை பின்னணியில் வெளி வந்திருந்தன.
நடிகை ஷோபாவின் தற்கொலை ஏற்படுத்திய மன உளைச்சல்களில் இருந்து, பாலு மகேந்திராவை மீட்டு, மீண்டும் அவருக்கு புது வாழ்வு தந்தது, மூன்றாம் பிறை படத்தின் வெற்றி தான்.
அப்படத்தின் கலை வெற்றிக்கு, ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், வணிக ரீதியான வெற்றிக்கு, கமல் - சிலுக்கின் ஜோடி நடனம், முக்கிய காரணமாக இருந்தது.
இப்படத்தில் நடித்த, ஸ்ரீதேவி மற்றும் கமல் தவிர, சிலுக்கும், அகில இந்திய அளவில் புகழ் பெற்றார். இப்படத்தில் வந்த, 'பொன்மேனி உருகுதே...' பாடலில் தான். சிலுக்கின் பொன்மேனி உருகியதில், தமிழ் சினிமா, 'சிலுக்கே சரணம்' என்றே மாறிப் போனது.
நடனமே தெரியாத சிலுக்கு, சுந்தரம் மாஸ்டர் சொல்லித் தந்தபடியே ஆடினார். 'பொன்மேனி உருகுதே' ஆடி முடிவதற்குள், சினிமா வாழ்க்கையே, போதும் போதும் என்றிருந்தது.
வெறும் கால்களுடன் பனி பிரதேசத்தில் ஆடியபோது, கடும் குளிராலும், நடன அசைவுகள் நேர்த்தியாக வராத பயத்தாலும், மிகவும் தவித்து போனார்.
தியேட்டரில், மூன்றாம் பிறை படத்தை பார்த்த பின் தான், சிலுக்குக்கு, தமிழ் சினிமாவில், இனி, தன் கொடி தான் பறக்க போகிறது என்கிற தன்னம்பிக்கை வலுப்பெற்றது.
படத்தில் அவர், வயதான பூர்ணம் விஸ்வநாதனின் இளம் மனைவி. விருப்பமெல்லாம் கமலின் மீது. வெறும் கவர்ச்சி நடனக்காரியாக மட்டுமல்லாமல், ஒரு சிறு கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது. கொடுத்த வேலையை, அவர், கச்சிதமாக செய்திருந்தார். படம் வெளியானபோது, அத்தனை பத்திரிகைகளும், போட்டி போட்டு, சிலுக்கை புகழ்ந்திருந்தன.
மூன்றாம் பிறை படத்தை, ஹிந்தியில், சத்மா என்ற பெயரில் எடுக்க தயாரானபோது, நடிக்க மறுத்தார், சிலுக்கு; கமலும், ஸ்ரீதேவியும் நடிக்க ஒப்புக்கொண்டனர். ஹிந்தி வாய்ப்புக்காக எத்தனையோ பேர் ஏங்குகிற போது, அதிக பணம் கேட்டு, கெடுபிடி செய்தார்.
'மூன்றாம் பிறை படம் மூலம் தான், உனக்கு மார்க்கெட்டே சூடு பிடித்திருக்கிறது. என்னிடமே அதிக பணம் கேட்கிறாயே...' என்று கோபித்துக் கொண்டார், பாலு மகேந்திரா.
ஆனாலும், இறங்கி வரவில்லை.
சத்மா படத்தில், சிலுக்குக்கு மாற்றாக வேறு ஒரு ஹிந்தி, 'கிளாமர்' நடிகை ஆடினார்; சப்பென்று இருந்தது. சிலுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை, கொடுத்த போதையை, அந்த, ஹிந்தி நடிகையால் கொடுக்க முடியவில்லை என்பதை உணர்ந்த, பாலு மகேந்திரா, மீண்டும் சிலுக்கிடமே வந்து, அவர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் கால் பதித்தார்.
சிலுக்கின் அருமை தெரிந்த பின், உடனடியாக, நீங்கள் கேட்டவை படத்தில், கதாநாயகியாக, 'பிரமோஷன்' கொடுத்தார், பாலு மகேந்திரா.
பெரிய இடத்து பெண் என்ற, எம்.ஜி.ஆர்., படத்தை, 'உல்டா' செய்து எடுக்கப்பட்ட படம் தான், சகலகலா வல்லவன்.
கே.பாலசந்தரின் எல்லா படங்களிலும் நடித்தபடி, நகரங்களை தாண்டாதிருந்த, கமல்ஹாசனை, 'கமர்ஷியல் ஹீரோ'வாக, பட்டி தொட்டிகளில் அடையாளம் காட்டிய முதல் படம், சகலகலா வல்லவன். அதற்கு அதிமுக்கிய காரணமாக இருந்தது, கமலும் - சிலுக்கும் ஆடி நடித்த, 'நேத்து ராத்திரி யம்மா' பாடல் காட்சி தான்.
இப்படத்தில், சிலுக்கு தான் ஆடவேண்டும் என்று சிபாரிசு செய்தவர், புலியூர் சரோஜா. அலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, முட்டம் பகுதியில் நடைபெற்றபோது, நடிகை ராதாவுக்கு நடனம் சொல்லித் தர போனார், புலியூர் சரோஜா. ஆனால், கதாநாயகி ராதாவை விடவும், அவரை கவர்ந்து இழுத்தது, சிலுக்கின் வசீகரமான உடற்கட்டு தான்.
'நடனம் ஆடுவதற்கு ஏற்ற உடல்வாகு இருந்தும், இந்த பெண்ணுக்கு இப்படத்தில் நடனம் ஆட வாய்ப்பு இல்லையே...' என்று, தனக்குள் குறைபட்டுக் கொண்டார்.
சிலுக்கை, சிறந்த ஆட்டக்காரியாக்க வேண்டும்; தன்னால் அது இயலும் என்று மனதார நம்பினார், சரோஜா. அதற்கான வாய்ப்பை, சகலகலா வல்லவன் படம் ஏற்படுத்தி தந்தது.
இந்த பாடல் காட்சி, நான்கு நாட்கள் படமாக்கப்பட்டது. சிலுக்குக்காக நிறைய நடன ஒத்திகைகள், 'செட்டிலே'யே நடந்தன. கமல் அங்கிருந்தால், சிலுக்கு, 'டென்ஷன்' ஆவார் என்பதால், ஒத்திகை நேரங்களில், 'செட்டை' விட்டு வெளியே அனுப்பப்பட்டார்.
நடனம் ஆடுவதற்கு சிலுக்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார், கமல். சகலகலா வல்லவன் படத்தில், நடனம் மட்டும் ஆடவில்லை; படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் இருந்தார், சிலுக்கு.
ஊரெங்கும், 'சிலுக்கு, சிலுக்கு' என்று ஜெபம் பண்ண ஆரம்பித்தனர். தமிழகத்தின் பல, 'ஒயின் ஷாப்'களுக்கு, இரவோடு இரவாக, சிலுக்கு பெயர் சூட்டப்பட்டு, 'சீரியல் பல்பு'கள் எரியத் துவங்கின.
சகலகலா வல்லவன் படம், வெள்ளி விழா கொண்டாடியது. சிலுக்கை போலவே, 'நேத்து ராத்திரி யம்மா' நடனம் மூலம் புது வாழ்வு பெற்ற இன்னொருவர், புலியூர் சரோஜா.
சகலகலா வல்லவன் நடனம் மூலம் திருப்தியடைந்த, ஏவி.எம்., நிறுவனம், சரோஜாவுக்கு தனியாக, 'டான்ஸ் மாஸ்டர்' என்கிற அங்கீகாரத்தை வழங்கியது. இந்த படத்திலிருந்து தான், நடனம்: புலியூர் சரோஜா என்று, 'டைட்டில் கார்டில்' போடத் துவங்கினர்.
- தொடரும்.
பா. தீனதயாளன்

