
குணம் அறிந்து, பிரச்னையை சொல்லுங்கள்!
திருமணம் செய்த ஒரு வாரத்திலேயே, 'என் தந்தை, ஒரு குடிகாரர்; கிராமத்தில், அவருக்கு, இன்னொரு மனைவி உண்டு. அதனால், ஐந்து ஆண்டுகளாக, தாயும், நானும், பாட்டி வீட்டில் இருந்தோம். தந்தை, வீட்டு செலவுக்கு, பணம் கொடுக்க மாட்டார்; தாய் மாமன்கள் தான், செலவுக்கு உதவினர். கடந்த, நான்கு ஆண்டுகளாக தான், என் தந்தை திருந்தி வாழ்கிறார்...' என்று, தன் குடும்ப விபரங்கள் அனைத்தையும், கணவரிடம் கூறியுள்ளாள், என் தோழி.
இவை அனைத்தையும், தன் அம்மாவிடம் அப்படியே ஒப்பித்து விட்டார், தோழியின் கணவர்.
வீட்டில் நடக்கும் சிறு பிரச்னைக்கு கூட, 'உங்க அப்பன் சரியா இருந்தாதானே, நீ சரியா இருப்பே... உன் அம்மா, வாழாம இருந்தவதானே, உன்னையும் கூட்டிகிட்டு போய் வீட்டில் வெச்சுக்கலாம்ன்னு பாக்குறா போல...' என்று, தினமும் ஏதாவது ஒன்றை சொல்லி, குத்திக் காட்டுகிறார், மாமியார்.
'நான், சாதாரணமாக தான் சொன்னேன்... அவங்க, இப்படி நடந்து கொள்வாங்கன்னு எதிர்பார்க்கலை... வயதானவர்கள் தானே, விடு...' என்கிறாராம், தோழியின் கணவர்.
தோழியரே... வீட்டு பிரச்னைகளை, கணவரிடம் சொல்வதில் தவறு இல்லை. அதற்கு முன், அவரின் குண நலன்களை தெரிந்து, பகிர்வது நல்லது; இல்லையேல், இதுபோன்ற அவஸ்தைகளை நீங்களும் சந்திக்க நேரிடும்.
— எஸ். செந்தில், சென்னை.
ஓவியமாகும், குழந்தைகளின் கிறுக்கல்கள்!
நண்பரின் புதுமனை புகு விழாவுக்கு சென்றிருந்தேன். வீட்டின் சுவர்களில், அழகாகவும், நேர்த்தியாகவும் ஓவியங்கள், 'பிரேம்' போட்டு மாட்டப்பட்டிருந்தன.
நண்பர், கலா ரசிகர். எனவே, அவை, ஏதோ, பெரிய ஓவியரின் படங்கள் போல என, நினைத்து, அருகில் சென்று பார்த்து, வியந்தேன். அந்த ஓவியங்கள், குழந்தை தனமாகவும், சாதாரணமாகவும் இருந்தன. ஆனால், ஓவியங்களின் நேர்த்தி அருமையாக இருந்தது. சில, குழந்தைகளின் கிறுக்கல்களாகவும் இருந்தது.
அவரிடம் விசாரித்ததில், 'இவை அனைத்தும், என், 10 வயது மகள் வரைந்த ஓவியங்கள் மற்றும் பழைய வீட்டில் இருந்த சுவர் கிறுக்கல்கள். ஏதேதோ படங்கள் வாங்கி மாட்டுகிறோம்.
'நம் குழந்தையின் ஓவியத்தை மாட்டி வைத்தால் என்ன என்ற எண்ணத்தில், அவள் வரைந்த பெரிய ஓவியங்களை தனியாகவும், சின்ன சின்ன ஓவியங்களை ஒன்றாக சேர்த்து, ஒரே படமாகவும், பல, 'பிரேம்'களில் மாட்டி விட்டேன். சிறு வயது சுவர் கிறுக்கல்களை புகைப்படம் எடுத்து, அதையும் தனியே, 'பிரேம்' போட்டு விட்டேன். இதை பார்த்த என் மகளுக்கு, ஒரே சந்தோஷம்...' என்றார்.
அவரின் மகளுக்கோ, பெருமையும், சந்தோஷமும் தாள முடியவில்லை.
அழகும், ரசனையும் நம்மிடமே தான் இருக்கிறது என்று தெரிந்து, அவரையும், மகளையும் பாராட்டி வந்தேன்.
- கி. ரவிக்குமார், நெய்வேலி.
படித்த முட்டாள்!
தோழியின் மகளை, பெண் பார்க்க வந்தனர். முதுகலை பட்டம் பெற்று, ஓ.எம்.ஆரில்., ஒரு எம்.என்.சி., கம்பெனியில், மாதம், 60 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார், மாப்பிள்ளை. வசதியான குடும்பம்.
இரு வீட்டாருக்கும் பிடித்து போக, அடுத்து, திருமண ஏற்பாடுகள் குறித்த, பேச்சு வந்தது.
அப்போது, ஒரு அரசியல் கட்சியின் பெயரை குறிப்பிட்டு, 'எங்க அப்பா காலத்துலேர்ந்து எங்க குடும்பம், அந்த கட்சியின் அபிமானிகள்; என் திருமணம், அந்த அரசியல் கட்சி தலைவர், தாலி எடுத்துக் கொடுத்து தான் நடக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள்...' என்று, கட்டளையிட்டுள்ளான், மாப்பிள்ளை.
இந்த நிபந்தனையை கேட்ட தோழியின் மகள், 'எனக்கு, இந்த திருமணம் வேண்டாம்; இந்த மாப்பிள்ளை, குடும்பம் நடத்த தகுதி இல்லாதவன். அக்கட்சித் தலைவனின் கையால் தாலி எடுத்துக் கொடுத்து தான், திருமணமே நடைபெற வேண்டும் என்று, இப்போது நிபந்தனை போடுகிறான்.
'நாளையே, அக்கட்சித் தலைவன் கைது செய்யப்பட்டு, சிறை சென்றால், அவரின் விடுதலைக்காக, தனக்குத் தானே நெருப்பு வைத்து, தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம்... அக்கட்சி தலைவன் வீட்டிலேயே ஏதாவது பெண் இருந்தால், அவனை கட்டிக்க சொல்லுங்க... எனக்கு வேண்டாம்...' என்று, ஆவேசத்துடன் கூறினாள்.
தோழியும், அவளது குடும்ப உறுப்பினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், அதிர்ந்து உறைந்தனர். நான், அவள் மன உறுதியை மனமுவந்து பாராட்டினேன்.
நாட்டில், என் தோழியின் மகள் போல், நான்கு பேர் இருந்தால் போதும், கட்சி, கொடி, தலைவன் என்று அலையும் இது போன்ற படித்த முட்டாள்கள் திருந்துவர்.
- வசந்தா சாமிநாதன், சென்னை.

