PUBLISHED ON : டிச 01, 2019

கேரளத்தில் எர்ணாகுளம் அருகிலுள்ள, திருப்பூணித்துறை பூர்ணத்திரயேஸ்வரர் கோவிலில், லிங்கத்தை கையில் ஏந்தி, பெருமாள் காட்சியளிக்கிறார். இங்கு, குழந்தை வரத்துக்காக, 'உலப்பன்னா' என்ற வழிபாடு நடக்கிறது.
இங்கு வாழ்ந்த அந்தண தம்பதிக்கு, குழந்தை இல்லை. அந்தணருக்கு பக்தி கிடையாது. அவரது மனைவியோ, விஷ்ணு பக்தை. தன் கணவரை மன்னித்து, தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என, வழிபட்டாள்.
ஒன்பது குழந்தைகள் பிறந்தும், அவை பிழைக்கவில்லை. இதையடுத்து, அவள் தன் கணவனுடன் துவாரகை சென்றாள். அங்கே, கிருஷ்ணனை சந்தித்தார், அந்தணர்.
'கிருஷ்ணா... எனக்கு, பல குழந்தைகள் பிறந்தும், இறந்து விட்டன. அவற்றைக் காக்கும் பொறுப்பு உனக்கில்லையா...' என்றார்.
கிருஷ்ணரின் அருகில் இருந்த அர்ஜுனன், 'பிறப்பும், இறப்பும் விதிவசத்தால் ஆனது. ஆனாலும், நீர்... கிருஷ்ணரை தவறாக எண்ணக்கூடாது. எனவே, இனி, பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன். அப்படி இறந்தால், நான் அக்னியில் விழுந்து உயிர் விடுவேன்...' என்றான்.
மகிழ்வுடன் ஊர் திரும்பினார், அந்தணர். ஆனால், 10வது குழந்தையும் இறந்து விட்டது.
இதைக் கேட்ட, அர்ஜுனன், தீயில் இறங்கத் தயாரானான். கிருஷ்ணர் அவனைத் தடுத்து, 'அர்ஜுனா... நீ அந்தணரிடம், குழந்தை பாக்கியம் வேண்டி, கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டும் என கூறாமல், பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆணவத்துடன் கூறினாய். எனவே தான், இந்த குழந்தையும் இறந்து விட்டது...' என்றார்.
தலை குனிந்தான், அர்ஜுனன். எனினும், சபதப்படி, அக்னியில் விழுந்து, வைகுண்டம் சேர்ந்தான்.
அங்கே, ஒரு லிங்கத்தை கையில் வைத்து, தியானத்தில் இருந்தார், மகாவிஷ்ணு.
அர்ஜுனன் அவரிடம், 'என் ஆணவம் அழிந்தது. ஆனாலும், அந்தணருக்கு கொடுத்த வாக்கை, தாங்கள் காப்பாற்ற வேண்டும்...' என்றான்.
அர்ஜுனனிடம் அந்த லிங்கத்தைக் கொடுத்து, 'நான் பூஜித்து வரும் இந்த லிங்கத்தை, அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடச் சொல். இது, குழந்தை பாக்கியம் தரக் கூடியது...' என்றார், மகாவிஷ்ணு.
இதன்படி, சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் மீது, பெருமாள் கையில் லிங்கத்துடன் அமர்ந்திருக்கும் சிலை அமைக்கப்பட்டது. சிவனுக்குரிய ஈஸ்வர பட்டத்தை சேர்த்து, பூர்ணத்திரயேஸ்வரர் என்று பெயரிடப்பட்டது.
இங்கு, 'கடா' என்னும் மூன்றடுக்கு விளக்கு இருக்கிறது. இதை, குழந்தை இல்லாதவர்கள் ஏற்றி வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டை, 'உலப்பன்னா' என்கின்றனர்.
எர்ணாகுளத்திலிருந்து, 12 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
தொடர்புக்கு: 0484 - 277 4007.
தி. செல்லப்பா

