தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சீனாவின் சித்திரவதை கூடங்கள்!

சீனாவின் சித்திரவதை கூடங்கள்!

சீனாவின் சித்திரவதை கூடங்கள்!


PUBLISHED ON : ஆக 19, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒலிம்பிக் வெற்றி பதற வைக்கும் பின்னணி

ஒலிம்பிக் போட்டிகளில், நம் அண்டை நாடான சீனா, அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, பதக்கங்களை குவித்து வருகிறது. சீன வீரர்களின் பதக்க வேட்டை, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பங்கேற்ற, 16 வயதே நிரம்பிய யி சி-வென் என்ற வீராங்கனை, இதுவரை ஏற்படுத்தியிருந்த உலக சாதனைகளை எல்லாம் தகர்த்து, சாதனை படைத்தது, நீச்சல் ஜாம்பவான்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

'இந்த 16 வயதில், எப்படி இந்த சிறுமிக்கு, இவ்வளவு சக்தி வந்தது. நாம் காண்பது, நிஜம் தானா?' என, கேள்வி எழுப்பும் உலக விளையாட்டு வீரர்களால், இந்த சிறுமியின் சாதனையை, இன்னும் நம்ப முடியவில்லை என்பது தான் நிஜம். இந்த பிரமிப்பூட்டும் சாதனைகளுக்கு பின், வேதனையும், மனிதாபிமானமற்ற செயல்களும் நிறைந்திருப்பதை, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மீடியாக்கள், அம்பலப்படுத்தியுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பதக்கங்களை குவிப்பதை பார்த்து, சீன ஆட்சியாளர்களுக்கும், இதில் சாதிக்க வேண்டும் என்ற வெறி வந்து விட்டது. கடந்த 1980களிலேயே, இதற்கான நடவடிக்கைகளை துவக்கி விட்டது, சீனா. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர்கள், எந்த விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர் என்பதை கண்டறிந்து, தகவல் அளிக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

எந்த குழந்தையாவது, நீச்சல் அல்லது தடகள போட்டிகளில், தங்களுக்கு ஆர்வம் இருப்பதாக கூறினால் போதும், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவர். இதற்காகவே, நாடு முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் முன், அந்த குழந்தைகள் நிறுத்தப்படுவர். குறிப்பிட்ட விளையாட்டில், அந்த குழந்தைக்கு ஆர்வம் இருப்பதாக, அந்த பயிற்சியாளர் கண்டறிந்தால் போச்சு... அவ்வளவு தான்!

அந்த குழந்தையை, குறிப்பிட்ட விளையாட்டுக்கான பயிற்சி மையத்துக்கு குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று விடுவர். பாவம் அந்த குழந்தை. அப்பா, அம்மா, உறவு, வீடு உட்பட அனைத்துக்குமே, அன்றுடன் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விடும். அன்று முதல், இந்த பயிற்சி மையம் தான், அந்த குழந்தையின் வாழ்க்கை. சீனாவில், 3,000 இடங்களில், இதுபோன்ற பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றை பயிற்சி மையங்கள் என்பதை விட, ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீரர்களை தயார் செய்யும், தொழிற்சாலை என்றே அழைக்கலாம். இங்கு குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளை நேரில் பார்த்தால், இந்த பயிற்சி மையங்களை, 'சித்திரவதைக் கூடங்கள்' என்றே கூறலாம்.

பச்சிளம் குழந்தைகளைக் கூட, இங்கு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி பல்வேறு பயிற்சிகளுக்கு உட்படுத்துகின்றனர். சுவரில் தொங்க விடுவது, கம்பிகளில் தொங்க விடுவது, நீச்சல் குளத்தில் தள்ளி விட்டு, நீச்சலடிக்க வைப்பது, கால், கைகளை, இஷ்டத்துக்கு முறுக்குவது, என, பயிற்சிகள் என்ற பெயரில், பல்வேறு சித்திரவதைகள், சர்வசாதாரணமாக இங்கு அரங்கேறும். குழந்தைகள் கதறி அழுதாலும் விடுவது இல்லை. ஒத்துழைக்க மறுக்கும் குழந்தைகளுக்கு, அடி, உதையும் உண்டு. அதிகமாக அடி வாங்கிய குழந்தைகள், உயிரிழக்கும் பரிதாபமும் நடப்பதாக, மேற்கத்திய மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்து, 'ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது தான் என் லட்சியம்' என, போதனை செய்வர். இங்கு குழந்தைகளை பெயர் கூறி அழைப்பது இல்லை. சிறைச்சாலையில் உள்ளது போல், 'ஸ்போர்ட்ஸ் பர்சன் 137, 138' என, எண்கள் கொடுத்து விடுவர். மனிதர்களுக்கான இயல்பான அத்தனை குணாதிசயங்களும் மறக்கடிக்கப்பட்டு, '‌ரோபோ'க்களை போல் தான், இந்த குழந்தைகள் நடமாடுகின்றனர். தினமும், 15 மணி நேரம் கடுமையான பயிற்சி. இவ்வாறு தயார் செய்யப்படும் குழந்தைகள் தான், 16 வயதுக்கு பின், ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சீனாவுக்கு பதக்கங்களை வாங்கித் தருகின்றனர். நீச்சல் போட்டியில் சாதித்த யி சி-வெனும், இதுபோன்ற சித்திரவதை கூடத்தில் தயாரானவர் தான்.

ஒலிம்பிக் போட்டிகளில், தங்களால் சாதிக்க முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலில், மேற்கத்திய நாடுகள், இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியிருந்தாலும், சீனாவில் நடக்கும் இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை, எந்த வகையிலும் சகித்துக் கொள்ள

முடியாது.

***

சி. சண்முகநாதன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us