PUBLISHED ON : ஆக 19, 2012

ஆடம்பரமா, ஆரோக்கியமா... எது முக்கியம்?
என் சகோதரனும், அவன் மனைவியும், சாப்டுவேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்; கைநிறைய சம்பளம். அவர்களுக்கு, ஒரே ஒரு பெண் குழந்தை. 'அந்தஸ்துக்கேற்ற பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதால், பள்ளி முழுவதும், 'ஏசி' செய்யப்பட்ட, மிகவும் காஸ்ட்லியான பள்ளியில், எங்கள் குழந்தையை சேர்த்துள்ளோம். பள்ளி வாகனம் கூட, 'ஏசி' தான்...' என, பெருமையாக கூறினர். அதைக் கேட்டதும், எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், 'இவ்வளவு படித்தவர்கள், இப்படி செய்திருக்கின்றனரே...' என, வருத்தமாகவும் இருந்தது.
எல்.கே.ஜி., படிக்கும் இந்த சின்னக் குழந்தை, பெரும்பாலான நேரம், 'ஏசி' அறையிலேயே அடைபட்டிருந் தால், நோய் ஏற்பட வாய்ப்பாகுமே! பள்ளி அறைகள் காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். சுற்றிலும் பெரிய ஜன்னல்கள் உள்ள வகுப்பறை தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒரே, 'ஏசி' அறையில், எல்லா குழந்தைகளும், அடைபட்டிருந்தால், அவர்கள் எப்படி சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்?
இயற்கையான சூரிய வெளிச்சத்தில் தான், உடலுக்கு தேவையான வைட்டமின், 'டி' சத்து கிடைக்கும். 'ஏசி' அறையில் அடைப்பட்ட குழந்தைகளுக்கு, இது எப்படி கிடைக்கும்? இதனால், பல பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. வெளியே இருக்கும் தட்ப, வெப்ப நிலை, உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும். இதையெல்லாம், உணராமல், இதுபோன்ற பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது, நாமே வியாதியை விலை கொடுத்து வாங்குவது போலாகி விடும் என்று எடுத்துரைத்தேன்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்; ஆடம்பரம், வீண் தொல்லை தான் தரும்!
— எஸ். விஜயலட்சுமி, கோச்சடை.'சாவுகிராக்கி!'
பிறப்பு, இறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்ற அரசின் அறிவுரையை சிரமேற்கொண்டு, என் நண்பர், அவரது, 90 வயது தாயாரின் இறப்பை முறைப்படி பதிவு செய்ய முயன்றார். உரிய கட்டணத்தைக்கட்டி, மனுவையும், விவரங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தார். பொதுவாக இறந்தவர் சேமித்து வைத்துள்ள சேமிப்புகளை, 'களெய்ம்' செய்யும் போது, இறப்புச் சான்றிதழும் அவசியம் என்பதால், அதைப் பெறுவதற்கு வழக்கமாக, 'அன்பளிப்பு' அளிப்பர் போலும். சான்றிதழை தயார் செய்து வைத்து, நண்பரிடமும் அன்பளிப்பை எதிர்பார்த்திருக்கிறார் அலுவலர். அவரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து கொண்ட நண்பர், 'அய்யா... எனக்கு எங்கம்மா தான் சொத்து, அவுங்களே போய் சேர்ந்துட்டாங்க. ஒரு குடிமகனா அதை அரசாங்கத்துல பதிவு செய்யணும்ன்னுதான் விரும்பினேன். அந்த சான்றிதழை இஷ்டமிருந்தா கொடுங்க. இல்லேன்னா, நீங்களே வெச்சுக்குங்க...' என்று சொல்லி திரும்ப முயல, 'சாவுகிராக்கி' என்று முணு முணுத்துக் கொண்டே சான்றிதழைக் கொடுத்தாராம், அந்த அலுவலர். உண்மையில் சாவுகிராக்கி யார்? நண்பரா, அலுவலரா?
— ஈ.நவநீதன், நங்கநல்லூர்.வித்தியாசமான பரிசு கொடுத்தோம்!
எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், அண்டை மாநிலத்திற்கு மாற்றலாகிச் சென்ற போது, அவரை வழியனுப்ப நானும், என் கணவரும், ரயில் நிலையம் சென்றிருந்தோம். அப்போது, என் கணவர், அவருக்கு ஒரு அன்பளிப்பைக் கொடுத்தார். ஒரு அழகான பிளாஸ்டிக் பெட்டியில், தலைவலி, உடல்வலி, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, எதிர்பாராமல் ஏற்படும் காயம் போன்றவற்றிற்கு, முதலுதவி மருந்துகள், மாத்திரைகள், ஆயின்மென்ட்கள் மற்றும் காட்டன் ஆகியவை, அதில் இருந்தன. பெற்றுக் கொண்ட நண்பர், 'அம்மாடி... இத்தனை வியாதிகளும் எனக்கு வரும்ன்னு நினைக்கிறீங்களா?' என்று ஜோக்கடித்தார். பின், ஒரு நாள் அவரிட மிருந்து ஒரு, எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில், 'மற்றவர்கள் கொடுத்ததைவிட, உங்கள் அன்பளிப்பு தான் உண்மை யாகவே, மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி...' என்று அனுப்பியிருந்தார். அதைக் கண்ட எங்களின் மகிழ்ச்சிக்கு, அளவே இல்லை!
— பாத்திமா, கீழக்கரை.நெகிழவைத்த மருத்துவ ஆலோசனை!
கர்ப்பமாக இருக்கும் உறவுக்காரப்பெண் ஒருவரை, பரிசோதனைக்காக மகப்பேறு மருத்து வரிடம் அழைத்துச் சென்றிருந்தோம். கர்ப்பமாக உள்ளவர்களுக்கு, வழக்கமாகச் செய்யும் பரிசோதனைகளை செய்து, மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறியவர், கூடவே ஆன்மிக ரீதியாகவும், சாஸ்திர சம்பிரதாயப்படி கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கூறி அசத்தினார். கர்ப்பமாக உள்ள காலத்தில், வேண்டிக்கொள்ள வேண்டிய தெய்வங்கள், செல்ல வேண்டிய கோவில்கள், சொல்ல வேண்டிய மந்திரங்கள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள், அதனால் எந்த வகையில், என்ன பலன் கிடைக்கும் என்பது போன்ற ஆலோசனைகளையும் கூறினார். மேலும், கர்ப்பம் தரித்துள்ள காலத்தில், புழு, பூச்சி போன்ற எந்த ஒரு சின்ன உயிரையும் கொல்லக்கூடாது. ஆடு, கோழி போன்ற எந்த ஒரு உயிர் கொல்லப் படுவதையும் பார்க்கக்கூடாது என, பல அறிவுரைகளைக் கூறி, மன அமைதியும், சந்தோஷமும் மிக முக்கியம் என்பதையும் தெளிவுபடுத்தினார். விஞ்ஞானம், மருத்துவம் என்பதெல்லாம் எவ்வளவு நவீனமாக வளர்ந்தாலும், அதற்கெல்லாம் மேலாக, ஆன்மிக ரீதியாகவும், சாஸ்திர சம்பிரதாய ரீதியிலான விஷயங்களும், மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும் என்பதை, ஒரு மருத்துவரே விளக்கி, அறிவுரை வழங்கியது ஆச்சரியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
— ஆர்.ரேவதி, கபிஸ்தலம்.வருகை பதிவு!
சமீபத்தில், ஒரு திருமண வரவேற்பிற்கு சென்று வந்தேன். மணமக்கள், பெண் அழைப்பிற்காக பக்கத்தில் உள்ள ஒரு சிறு கோவிலுக்கு சென்று, மண்டபம் திரும்பி கொண்டிருந்தனர். மணமக்கள் இன்னும் மணமேடையில் ஏறவில்லை. அதற்குள் கூட்டம் வரிசையாக நின்று, ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டிருந்தது. மணமக்கள் மேடையில் ஏறியது தான் தாமதம், அனைவரும் உடனே முண்டியடித்து ஏறி, மணமக்கள் கையில் மொய் கவரை திணித்து விட்டு, சாப்பிடும் இடத்திற்கு சென்று விட்டனர். திருமணத்திற்கு செல்வது, ஒரு வருகை பதிவு போன்று ஆகி விட்டது. இன்னும் கொஞ்சம் நாள் சென்றால், மண மேடையில் மொய் கவர் போடுவதற்கென்று, ஒரு மரப்பெட்டியை வைத்து விடுவர் போல் உள்ளது. நாம் அந்த பெட்டியில், கவரை போட்டு விட்டு, சாப்பிட சென்று விடலாம். மணமக்கள் ஓய்வாக இருக்கும் போது பெட்டியை திறந்து, யார் வந்துள்ளனர் என்பதை பார்த்து திருப்தி அடைந்து கொள்வர் போல் உள்ளது. திருமணம் என்பது, நாம் எல்லாரும் சென்று அவர்களுக்கு ஆசியும், வாழ்த்தும் சொல்லிவிட்டு வருவது போய், ஒரு வருகை பதிவு செய்வது என்று ஆகிவிட்டது, மனதிற்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.
— எஸ்.கிருஷ்ணன், முகப்பேர் மேற்கு.
