PUBLISHED ON : ஆக 04, 2019

ஜம்மு - காஷ்மீரின், லடாக்கில், ஜான்ஸ்கார் பகுதியில் உள்ள, லுங்டாங் பள்ளத்தாக்கில் தான், படத்தில் நீங்கள் காணும், புத்த மடாலயம் அமைந்துள்ளது. இதை, 'புக்டால் கோம்பா' அல்லது 'புகால் கோம்பா' என, அழைக்கின்றனர்.
புக்டால் என்றால், 'மனிதனுக்கு, விடுதலையை அளிக்கும், மடாலயம் உள்ள குகை இது...' என, பொருள்.
இங்கு, பாரம்பரிய மருத்துவமனை உள்ளது. அக்கம் பக்க மக்களுக்காக, தியானம், போதனை நடத்தும் மடாலயமாக செயல்படுகிறது. ஒரு பள்ளியும் உண்டு.
ஜம்மு - காஷ்மீர், லடாக் மற்றும் இமாசலம் பகுதிகளில், மடாலயத்தில் தான், ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இங்கு நடக்கும் புத்தாண்டு - புத்த திருவிழா மற்றும் அறுவடை திருவிழா மிகவும் பிரபலம்.
பார்லி மாவு மற்றும் வெண்ணெயால் ஆன, தர்மா சிலை செய்து வழிபட்டு, இறுதியில், மடத்தில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. திருவிழாவின் போது, கிராம மக்களுக்கு, இலவசமாக உணவும் உண்டு. சனிக்கிழமை மட்டுமே, மடாலயத்தை பார்வையிட முடியும்.
- ஜோல்னாபையன்.
